ராகம வைத்தியசாலைக்கு 800 மில்லியன் யென்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை ஜப்பான் கையளிப்பு
ராகம போதனா வைத்தியசாலைக்கு 800 மில்லியன் ஜப்பானிய யென்கள் (5.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான மருத்துவ சாதனங்களை ஜப்பான் வழங்கியுள்ளது.
ஒக்டோபர் 27ஆம் திகதி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி, சுகாதாரத் துறை அமைச்சர் ரம்புக்வெல்லவிடம் இந்த சாதனங்களை கையளித்திருந்தார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில், நிலைபேறான மருத்துவக் கட்டமைப்பை நிறுவுவதற்கும், கொவிட்-19 தொற்றுப் பரவல் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நன்கொடையை ஜப்பான் வழங்கியுள்ளது.
ஜப்பான் வழங்கியிருந்த நவீன மருத்துவ சாதனங்களில் MRI, CT ஸ்கானர், Angiography, central monitor மற்றும் bedside monitorகள் போன்றன அடங்கியிருந்தன. இந்த சாதனங்களைக் கொண்டு, இலங்கையின் உயிரிழப்பு ஏற்படுவதில் பெருமளவு காரணியாக வழங்கும் தொற்றா நோய்களை பரிசோதிப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
இலங்கையின் தேசிய வைத்தியசாலை ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நவீன ரக இயந்திரமாக CT ஸ்கானர் அமைந்துள்ளது.
வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட வெளி நோயாளர் பிரிவில் இது அமைந்துள்ளதுடன், இதனூடாக நாளொன்றில் சராசரியாக சுமார் 1,500 வெளி நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடியதாக இருக்கும்.
இந்த புதிய மேம்படுத்தப்பட்ட மருத்துவ சாதனங்களினூடாக பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட்-19 தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உயர்ந்த மற்றும் நிலைபேறான மருத்துவ சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
Comments (0)
Facebook Comments (0)