ஜனாஸா விடயத்தில் பிரதமரின் கருத்து நம்பிக்கையளிக்கிறது: ஹரீஸ் எம்.பி

ஜனாஸா விடயத்தில் பிரதமரின் கருத்து நம்பிக்கையளிக்கிறது: ஹரீஸ் எம்.பி

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் அறிவிப்பு நம்பிக்கையளிக்கிறது என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அப்போது சபை அமர்வில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ், பிரதமரை விழித்து கொரோனா தொற்றினால் இறந்ததாக நம்பப்படும் உடல்களை அடக்கம் செய்ய இடம் தரப்படும் என்று கூறி உள்ளீர்கள். இந்த முடிவுக்கு இலங்கை மக்கள் சார்பிலும், குறிப்பாக முஸ்லிம்களின் சார்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன் என்றார்.

இது குறித்து ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கருத்து தெரிவிக்கும் போது,

"இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமரை அவரது அறையில் சந்தித்து ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்ததுடன் இந்த விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டது

பிரதமரின் நிலைப்பாடு நம்பிக்கையளிப்பதுடன்,  ஜனாஸா நல்லடக்கம் செய்ய சிறந்த காலம் கனிந்துள்ளதாக முஸ்லிம்களின் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது எனவும் பிரதமரின் இந்த சந்திப்பில் என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எம்.எஸ்.தௌபீக், முஸாஃரப் முதுநபின், மர்ஜான் பழில், காதர் மஸ்தான், இசாக் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்"  என்றார்.