48 பில்லியன் செலவில் உலகை மிரள வைக்கும் சவூதி; நியோமை தொடர்ந்து முகாப் எனும் அதிசயம்
காலித் ரிஸ்வான்
சவூதி அரேபியா உலக மக்களின் கவனத்தை பல வழிகளில் ஈர்க்கக்கூடிய உலகின் மிகப் பெரும் செல்வந்த நாடுகளில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது.
சவுதி அரேபியாவில் கலை அம்சங்களை வெளிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்த கவர்ச்சியான வானளாவிய கட்டடங்களுக்கு பஞ்சமில்லை. கடந்த அக்டோபர் மாதம் சவூதி அரேபியா ஆரம்பித்துவைத்த உலகிலேயே மிகப்பெரிய புரட்சிகரமான ஒரு திட்டம் தான் நியோம் நகர திட்டம்.
தபூக் மாகாணத்தில் நிர்மானிக்கப்பட்டு வரும் இந்த நகரமானது முற்றிலும் காபன் பயன்பாடு இல்லாத வகையில் 170 கிலோ மீட்டர் நீளத்தை கொண்ட ஒரு நகரமாக அமையப் பெறுகிறது. இந்த நகரத்தில் 9 மில்லியனுக்கும் அதிகமான மக்களை குடியமர்த்த முடியும் எனவும் 4 லட்சத்து 60 ஆயிரம் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப் போவதாகவும் சவூதி அரசாங்கம் பெருமையுடன் தெரிவித்தது.
இந்த பிரம்மாண்ட திட்டத்தை பார்த்து வாய் பிளந்தவர்களின் வாயடைத்துப் போகும் வகையில் மறுபடியும் சவூதி அரசாங்கம் ஒரு புரட்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அது தான் “முகாப்” நகர திட்டம். அரபு மொழியில் கன சதுரம் என்று பொருள்படுகிறது, 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலம் மற்றும் 400 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கப் போகிறது. இது உலகின் மிகப்பெரிய உட்புற நகரமாக அதன் சொந்த உள் போக்குவரத்து அமைப்பைக் கொண்டமைந்திருக்கும்.
சவூதி விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக ரியாத்தில் உலகின் மிகப்பெரிய நவீன நகரமாக இதை உருவாக்க சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று இந்த கட்டிடத்தின் முன்னோட்ட காணொளி அந்நாட்டு முடிக்குரிய இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் அவர்களினால் வெளியிடப்பட்டது.
1 பில்லியன் அல்ல, 2 பில்லியன் அல்ல கிட்டத்தட்ட 48 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த அதிநவீன நகரம் ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் அம்பயர் எஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய நகரை உருவாக்கும் திட்டமாக இது அமைந்திருக்கிறது. இந்த நகர திட்டமானது முஹம்மத் பின் சல்மான் தலைமை வகிக்கக் கூடிய முரப்பா அபிவிருத்தி நிறுவனத்தால் எடுத்த நடத்தப்படுகிறது.
250 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பில் கட்டப்படும் இந்த நவீன நிர்மாணம் 104,000 தங்குமிடங்கள் 9,000 அதி சொகுசு ஹோட்டல்கள் 980,000 சதுர கிலோமீட்டர் சுதந்திர பசுமை வெளி 14 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பு அலுவலகங்களுக்கான இடமாகவும் 18 இலட்சம் சதுர கிலோமீட்டர் பிற வசதிக்கும் 620000 சதுர கிலோமீட்டர் விளையாட்டுகளுக்கான இடப்பரப்பு என அமையப்பெறும் இத்திட்டமானது 2030 இல் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பசுமையான பகுதிகள், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் பாதைகளை உள்ளடக்கிய நகரமாக முகாப் கட்டமைக்கப்படுகிறது.
இது ஒரு தனித்துவமான அருங்காட்சியகம், ஒரு தொழில்நுட்பம் பல்கலைக்கழகம், ஒரு பல்நோக்கு தியேட்டர் அமைப்பு மற்றும் 80 க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார தளங்களைக் கொண்டிருக்கும்.
இந்த நிரமானத்தின் வடிவமைப்பானது நவீன நஜ்தி கட்டட நிர்மாண பாணியில் அமைந்திருக்கும் அதே நேரம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலான சகல அதி நவீன தொழிநுட்ப வசதிகள் மற்றும் உல்லாச தளங்கள் மற்றும் கலாசார விழுமியங்களை பிரதிபளிக்கும் அம்சங்களைக் கொண்ட முக்கிய வர்த்தக மையமாக அமையும்.
முக்கியமாக எண்ணெய் பயன்பாடு இல்லாத காபன் வெளியேற்றமில்லாத தூய நகரமாக முகாப் உருவாகி வருகிறது. இத்திட்டத்தின் துவக்கமானது, தனியார் துறையை செயல்படுத்தவும், ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் உள்ளூர் உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் மற்றும் சவூதி பொருளாதாரத்திற்கான வருமான ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதற்குமான PIF (The Public Investment Fund) இன் ஒரு உத்தியாகும்.
இது எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 180 பில்லியன் ரியாழ்களை அதிகரிக்கும் அதே நேரம் 2030 க்குள் 334,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே எண்ணெய் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பெரியளவில் தங்கியிருந்த சவூதி அரேபியா 2030ம் ஆண்டு ஆகும் போது முழுமையாக ஒரு சுற்றுலாத் துறையில் மேம்பட்ட நாடாக மாறுவதற்கான திட்டங்களை கட்சிதமாக செய்து வருகிறது.
இந்த திட்டங்கள் தூர நோக்கு ரீதியிலும் தொழிநுட்ப ரீதியிலும் மேற்கு நாடுகளுக்கு இணையாக அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முகாப் திட்டமானது சவூதியின் இதயமாக இயங்கும் என அந்நாட்டு இளவரசர் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)