தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டமூலம் உள்ளிட்ட மூன்று சட்டமூலங்கைளை சபாநாயகர் சான்றுரைப்படுத்தல்
கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டமூலங்களுக்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு இன்று (19) சான்றுரைப்படுத்தினார்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு, வேலையாட்கள் நட்டஈடு (திருத்தம்), காணி அபிவிருத்தி (திருத்த) சட்டமூலம் என்பன இவ்வாறு சான்றுரைப்படுத்தப்பட்டு நாட்டின் சட்டக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டன.
இதற்கமைய இந்தச் சட்டங்கள் 2022ஆம் ஆண்டு 09ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2022ஆம் ஆண்டு 10ஆம் இலக்க வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டம் மற்றும் 2022ஆம் ஆண்டு 11ஆம் இலக்க காணி அபிவிருத்தி (திருத்தச்) சட்டம் என நேற்று முதல் (19) நடைமுறைக்கு வருகின்றன.
தனிப்பட்ட தரவைச் செய்முறைப்படுத்துவதனை ஒழுங்குபடுத்துவதற்கும், ஏற்பாடு செய்வதற்கும் தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல் தொடர்பாகத் தரவுடன் தொடர்புபட்டோரின் உரிமைகளை அடையாளங்காண்பதற்கும் பலப்படுத்துவதற்கும் தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையைப் பெயர்குறிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்கள் இதன் ஊடாக ஏற்பாடு செய்யப்படும்.
2022ஆம் ஆண்டு 10ஆம் இலக்க வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டத்தின் ஊடாக 2005ஆம் ஆண்டு இறுதியாக திருத்தப்பட்ட 1934ஆம் ஆண்டு 19ஆம் இலக்க வேலையாட்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், வேலையிலிருக்கும்போது ஏற்படும் அவசர விபத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்ட பணியாளருக்கு மரணத்தின் போது அல்லது பூரண அங்கவீனமுறும்போது வழங்கப்படும் ஆகக் கூடிய நட்டஈட்டுத் தொகையான 550,000 ரூபாவை 2,000,000 ரூபாவரை (20 இலட்சம்) அதிகரிப்பது இதன் ஊடாக மேற்கொள்ளப்படும்.
மேலும், தற்போது பணியில் ஏற்படும் விபத்துக்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்குவது, பணியிடத்திற்கு வருகை, புறப்பாடு உள்ளிட்ட விளக்கத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல முக்கிய திருத்தங்கள் இதன் மூலம் செய்யப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு 11ஆம் இலக்க காணி அபிவிருத்தி (திருத்தச்) சட்டத்தின் ஊடாக “காணி ஆணையாளர்" எனும் சொல்லுக்குப் பதிலாக “காணி ஆணையாளர் தலைமையதிபதி’’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும், மேலதிக காணி ஆணையாளர்கள், பிரதிக் காணி ஆணையாளர்கள், உதவிக் காணி ஆணையாளர்கள் மற்றும் வேறு அலுவலர்களை நியமிப்பதற்கும், பிரதேச செயலாளரின் அங்கீகாரமின்றி பற்றுநிலத்தை ஈடுவைப்பதற்குப் பற்றுநிலத்தின் சொந்தக்காரரை இயலச்செய்தல் மற்றும் அளவையிடப்படாத காணிக்கான அளிப்பொன்றை வழங்குவது என்பன தடைசெய்தல் உள்ளிட்ட திருத்தங்கள் இதில் உள்ளடங்குகின்றன.
Comments (0)
Facebook Comments (0)