புதிய அரச ஹஜ் குழு நியமனம்

புதிய அரச ஹஜ் குழு நியமனம்

றிப்தி அலி

அடுத்த ஆண்டுக்கான புனித ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக புதிய அரச ஹஜ் குழுவொன்று புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற இராஜதந்திரியான இப்றாஹீம் அன்சார் தலைமையிலான ஹஜ் குழுவினால் ஹஜ் முகவர்களுக்கு பகிரப்பட்ட ஹஜ் கோட்டாக்களை இரத்துச் செய்துவிட்டு புதிதாக நேர்முகப் பரீட்சையினை நடத்தி கோட்டாக்களை பகிருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே முன்னாள் அமைச்சர் விதுர விக்கரமநாயக்கவினால் நியமிக்கப்பட்ட இப்றாஹீம் அன்சாரின் தலைமையிலான அரச ஹஜ் குழுவினை கலைத்துவிட்டு புதிய குழுவொன்று தற்போதைய மத விவகார அமைச்சரால்  நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹஜ் குழுவின் தலைவராக பல்தேசிய கம்பனிகளின் பணிப்பாளராக கடமையாற்றுகின்ற றியாஸ் மிஹுலர் நியமிக்கப்பட்டுள்ளார். கேபிஎம்ஜி எனப்படும் சர்வதேச ரீதியில் செல்வாக்குமிக்க கணக்காய்வு நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவிற்கான பிராந்திய பொறுப்பாளராக இவர் செயற்படுகின்றார்.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை இவர் வகித்துள்ளார். பைறஹா மற்றும் நெஸ்லே உள்ளிட்ட பல பல்தேசிய கம்பனிகளின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவியும் இந்தக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹஜ் விவகாரத்தில் நீண்ட கால அனுபவம் கொண்ட இவர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக நீண்ட காலம் பணியாற்றியிருக்கின்றார்.

சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான டி.கே. அசூர் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுல்லா முகாமைத்துவ பேரசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் ஆகியோரும் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புனித ஹஜ் ஒரு மதச் சுற்றுல்லா என்ற அடிப்படையிலேயே சுற்றுல்லா முகாமைத்துவத் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ள பேராசியர் அஸ்லமும் இந்தக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் பதவி வழியாக அரச ஹஜ் குழுவின் உறுப்பினராக செயற்படுகின்றார்.

புதிய ஹஜ் குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதம் அடுத்த வாரம் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்படவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு முன்னர் செயற்பட்ட அரச ஹஜ் குழுவிற்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சராக செயற்பட்ட காலப் பகுதியில் விஜித ஹேரத் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.