தமிழ் தலைமைகளிடமிருந்த முஸ்லிம் தலைமைகள் பாடம் கற்பார்களா?
-றிப்தி அலி-
நாட்டின் எட்டவாது ஜனாதிபதியினை தீர்மானிப்பதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவோ போட்டியிடவில்லை என்பது முக்கிய விடயமாகும்.
எனினும் அரசியல் கட்சி மற்றும் சுயாதீன வேட்பாளர் என்ற அடிப்படையில் 35 பேர் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமாதாச, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களில் பிரதானமானவர்களாவர்.
இந்த தேர்தலில் 50 சதவீதத்திற்கு மேற்படியான வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார். இதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் பிரதானமாகும். இதுவரை நடைபெற்ற அனைத்து ஜனாதிபதித் தேர்தலிலும் சிறுபான்மையினரே ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளனர்.
இந்த அடிப்படையில் பெரும்பான்மையான சிறுபான்மை கட்சிகள் தாங்கள் அதரவளிக்கும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளன. இதற்கமைய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தலைமை தாங்கும் கட்சிகளான முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி ஆகியன சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.
அதேபோன்று முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, மட்டக்களப்பு சிறைச்சாலையில் தற்போது தடுத்து வகைப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, முன்னாள் அமைச்சர் கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மாத்திரம் அனுர குமார திசாநாயக்கவிற்கு ஆதரவளித்துள்ளது. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தினை இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் வட மாகாணத்தில் பல்வேறு துருவங்களாக காணப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகளும் கூட்டாக இணைந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான 13 கோரிக்கைகள் அடங்கிய பொது ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளன.
குறித்த ஐந்து கட்சிகளினால் கூட்டாக முன்வைக்கப்பட்டுள்ள 13 கோரிக்கைகள் பின்வருமாறு:
01.அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
02.பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.
03.காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக தீர்வுக்காணல் வேண்டும்.
04.புதிய அரசியலமைப்பு - ஒற்றையாட்சி முறைமையினை நிராகரித்து, தமிழ் தேசத்தை அங்கிகரித்து அதற்கு தனித்துவமான முறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கிகரித்து, சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசியத்தின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
05.இறுதி போரில் இடம்பெற்ற போர் குற்றங்கள், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் என்பவற்றிற்கு முழுமையான பக்கசார்பற்ற சர்வதேச பொறிமுறைகளினான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச தீர்ப்பாயம் ஆகியவற்றின் ஊடாக துரித விசாரணை.
06.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலைக்கொண்டிருக்கும் அரச படைகள், போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையில் இருந்த அரச மற்றும் தனியார் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
07.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்களை நிறுத்தல் வேண்டும்.
08.வடக்கிற்கு மகாவலி நதியை திசை திருப்பு என்ற போர்வையில் வடக்கில் மகாவலி குடியேற்றங்களை மாத்திரம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாதொழிக்கப்பட வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி திட்டம் என்ற பெயரில் இடம்பெற்று வரும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
09.அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரஹாகந்த நீர்ப்பானச திட்டத்தின் கீழ் வன்னி பிரதேசத்தில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
10.தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிப்பாட்டு தல ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள திணைக்களங்களின் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரகடணத்தில் இருந்து விடுவிக்கபட வேண்டும்.
11.போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கும், இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் இருந்து நேரடியாக நிதிகளை பெற்றுக் கொள்வதற்கான காரணிகளையும், நிதிகளை கையாள்வதில் தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
12.வடக்கு , கிழக்கு மாகாணங்களில் தனியார் , அரச துறைகளின் தொழில்வாய்ப்புக்களை அதிகரித்து அந்தந்த மாகாணங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
13.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியை வடக்கு , கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலின் பொதுக்கட்டமைப்பினை உருவாக்குதல் வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்ட 13 அம்ச கோரிக்கைகளை உள்ளிடக்கிய பொது ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடாக அரசியலில் நுழைந்து வட மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டு பின்னர் அக்கட்சியுடன் அதிருப்தியுற்று வெளியேறியே சீ.வீ. விக்னேஸ்வரனினால் உருவாக்கப்பட்டதாகும்.
அதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனியாக செயற்படுகின்றது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக பல்வேறு பிரசாரங்களை வட மாகாணத்தில் முன்னெடுத்திருந்தன. 'எழுக தமிழ்' போராட்டம் அதில் குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறாயினும் யாழ். மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பாரிய அழுத்தம் காரணமாக மேற்குறிப்பிட்ட ஐந்து கட்சிளும் தங்களுக்குள் காணப்பட்ட வேற்றுமைகளை மறந்து தமிழ் சமூத்தின் சார்பிலான இந்த பொது உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த 13 அம்ச கோரிக்கையினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிராகரித்துள்ளதுடன் இது தொடர்பில் பேச்சு நடத்த தயாரில்லை என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனினால் முன்வைக்கப்பட்ட தமிழீழ கோரிக்கையினை விட இந்த இந்த 13 அம்ச கோரிக்கை பாராதுரமானது என இனவாதிகளினால் தெற்கில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ் கட்சிகளின் இந்த ஒற்றுமையினை நாட்டில் வாழுகின்ற மற்றுமொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் வரவேற்கின்றனர். அத்துடன் தமிழ் கட்சிகளைப் போன்று கோரிக்கைகளை முன்வைக்காவிட்டாலும் பரவாயில்லை, முஸ்லிம் கட்சிகள் கூட்டாக இணைந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருக்க முடியும் என முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் ஓகஸ்ட் 26ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இணைந்து ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக போராடின.
அது மாத்திரமல்லாமல், குறித்த இரண்டு கட்சிகளினதும் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக புனித மக்கா நகருக்கு விஜயம் மேற்கொண்டு உம்ரா கடமையினை நிறைவேற்றிய பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவே தீர்மானித்தனர்.
இதேபோன்று கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை தாக்குதலினை அடுத்து முஸ்லிம் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கினர். இதன் ஒரு அங்கமாக ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என இனவாதிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நாடளாவிய ரீதியில் வலுப்பெற்றது.
இதனையடுத்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் கூட்டாக இராஜினாமாச் செய்ததுடன் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியின் தலைமையின் கீழ் கூட்டாக செயற்பட்டனர்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பினை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸர் முஸ்தபா மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்ததுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினர்.
ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சஜித் பிரேமாதசவிற்கு ஆதரவளிக்கின்றனர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிகளின் பாராளுமன்ற ஆசனத்தினை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே அதிகரிக்க முடியும் என்ற நோக்கில் எந்தவித நிபந்தனைகளுமின்றியே சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குகின்றன.
எனினும் மேற்குறிப்பிட்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் தனித்தனியாக தங்களின் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளமை ஆரோக்கியமானதொன்றால்ல. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சஜித் பிரேமாசாவின் முகவாராக இராஜாங்க அமைச்சர் அலி சாஹீர் மௌலான நியமிக்கப்பட்டமைக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் எதிர்ப்பு வெளியிட்டதுடன அவரின் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் அமீர் அலியினை குறித்த பதவிக்கு நியமித்துள்ளார்.
எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமாதசாவினை ஆதரவளித்து இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிராசார கூட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான அலி சாஹீர் மௌலான மற்றும் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் கலந்துகொண்டமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
ஏற்கனவே கூறியது போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விரைவில் நடைபெறவுள்ள பாராளுன்ற தேர்தலில் கூட்டாக போட்டியிட வேண்டும் என்பதை முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது.
இந்த இரண்டு கட்சிகளும் கூட்டாக இணைந்து பல விடயங்களை சாதித்துள்ள நிலையில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் சமூகம் மாறும்.
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் மத்தியில் பிரபல்யமான மரச் சின்னத்தின் கீழ் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலில் களமிறங்கினால், அம்பாறை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களையும் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றம் வன்னி ஆகிய மாவட்டங்களில் தலா இரு ஆசனத்தினையும் களுத்துறை, குருநாகல், கண்டி. அநுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசனம் வீதம் மொத்தமாக 19 ஆசங்களை (தேசியப்பட்டியல் உட்பட) கைப்பற்றி பாராளுமன்றத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாற முடியும்.
இதனையே இரண்டு தசாப்பதங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரப் எதிர்பார்த்தார். அவரினால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக அரசியல் நுழைந்து இன்று இரு துருவங்களாக செயற்படும் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றுமைப்படுவதினையே இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழத் தேசிய கூட்டமைப்பு தேர்தலின் பின்னர் ஆசங்களை தனது பங்களாகிக் கட்சிகள் மத்தியில் பிரிப்பது போன்று குறித்த இரண்டு கட்சிகளும் பாராளுமன்ற ஆசனங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
இந்த இரண்டு கட்சிகளும் ஒற்றுமைப்படுவதன் ஊடாக முஸ்லிம் சமூகத்திலுள்ள காட்டிக்கொடுக்கும் தனிநபர் அரசியலை தூக்கியெரிய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Comments (0)
Facebook Comments (0)