பட்டதாரிகளுக்கு அரசாங்கம் தான் தொழில் வாய்ப்பு வழங்க வேண்டுமா?

பட்டதாரிகளுக்கு அரசாங்கம் தான் தொழில் வாய்ப்பு வழங்க வேண்டுமா?

றிப்தி அலி

ஏப்ரல் மாத இறுதிப் பகுதியில் நாட்டில் பாராளுமன்றத் தேர்தலொன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் அரச தொழில் வாய்ப்பினைத் தேடும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சுமார் 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டுக்காகப் பணி செய்யும் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் இளம் தலைமுறையினரைப் பேண்தகு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பங்களிக்கச் செய்ய வைப்பது இதன் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி செயலகத்தினால் நேரடியாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்கத்தின் காலப் பகுதியிலும் இந்த அரசாங்கம் ஆட்சியினை பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்த நிலையிலும் கடந்த மாத இறுதிப் பகுதியிலிருந்து வேலையற்ற பட்டதாரிகள் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்களை கொழும்பு நகரில் முன்னெடுத்தனர்.

இதன் காரணமாக கொழும்பு நகரம் முற்றாக ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலை தொடரக்கூடாது என்றதன் அடிப்படையிலேயே வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வேலைவாய்ப்பின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வாறான வளர்ச்சி ஏற்படவுள்ளது என்பது பாரிய கேள்விக்குரியாகியுள்ளது. ஏற்கனவே அரச திணைக்களங்களில் தேவைக்கு அதிகமாக ஆளணி காணப்படுவதாக அரசாங்க அறிக்கைகள் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், மேலும் பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக்கொள்ளும் போது இவர்களுக்கு எந்த வகையான பொறுப்புக்களை வழங்குவது எனும் சர்ச்சையும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த நவம்பர் 18ஆம் திகதி ஆட்சியினை பொறுப்பேற்றது பல்வேறு வரிச் சலுகளை வழங்கியுள்ளது.

இதன் காரணமாக பொருளாதர துறையில் பாரிய தளம்பலொன்று ஏற்பட்டுள்ளதுடன் பல்வேறு சிக்கல்களை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. அது மாத்திரமல்லாமல் அரசாங்கத்தின்  வரவு செலவுத் திட்டம் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனுமதி பெறப்படவில்லை. இந்த நிலையிலேயே புதிய தொழில்வாய்ப்புக்களை வழங்க தீர்மானித்துள்ளது.

வருடாந்தம் சுமார் 25,000க்கு மேற்பட்ட பட்டதாரிகள் அரசாங்க மற்றும் தனியார் பல்லைக்கழங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரச தொழில்களை மாத்திரமே நம்பியிருக்கின்றன. இது தவறானதொரு நிலைப்பாடாகும். இன்றைய தகவல் தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு வகையான தொழில் வாய்ப்புக்கள் இன்றைய தொழிற் சந்தையில் காணப்படுகின்றது.

அது மாத்திரமல்லாமல் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய சக்கி பட்டதாரிகளிடம் காணப்படுகின்றன. இதற்கு ஏற்ற வகையிலேயே எமது நாட்டின் கல்வி முறை காணப்படுகின்றது. ஒரு தனிபர், 15 வருடங்களுக்கு மேல் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச கல்வியின் ஊடாகவே பட்டதாரியாக வெளியேறுகின்றார்.

இவ்வாறு வெளியேறும் பட்டதாரிகளுக்கு நாட்டுக்கு சேவை செய்ய வேண்டிய பொறுப்பொன்றுள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியொழுப்ப வேண்டிய கடமைப்பாடும் உள்ளது. அதாவது, தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தக் கூடிய புதிய தொழில் துறைகளை பட்டதாரிகள் உருவாக்க வேண்டும்.

இதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தினை பாரியளவில் வளர்ச்சியடையச் செய்ய முடியும். எனினும் அதனை பட்டதாரிகள் மேற்கொள்ளாது அரசாங்கத்திடமிருந்து மேலும் மேலும் வாய்ப்புக்களை எதிர்பார்ப்பது பிழையான நடைமுறையாகும். இதனை மாற்றியமைக்கும் வழிவகைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.