மகளை வைத்து வியாபாரம் செய்த தாய்
எம்.எப்.எம்.பஸீர்
மத, கலாசார, பண்பாட்டு விழுமியங்களால் கட்டியெழுப்பப்பட்ட இலங்கையில், இன்று பதிவாகும் சம்பவங்கள் எமது சமூக கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டிய நிலையை உணர்த்துகிறது.
சமூகத்தின் பல்வேறு மட்டங்களை சேர்ந்தோரால், பல்வேறு பதவி நிலைகளை கொண்டோரால் 15 வயது சிறுமி ஒருவர் இரக்கமே இன்றி பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் சமூக கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை மீளவும் உணர்த்தி இருக்கின்றது.
சிறுவர் முதல் முதியவர்கள் வரை இணையங்களில் காலத்தை கழிக்கும் இந்த கால கட்டத்தில், அதே இணையத் தளத்தின் ஊடாக ஒரு சிறுமியை பலரின் பாலியல் தேவைக்கு விற்பனை செய்த மனசாட்சி அற்றவர்களும், அச்சிறுமியை பணம் பெற்று வாங்கி பலாத்காரம் செய்த கொடூரர்களும் இந்த சமூகத்தில் ஒருவராக போலி முகத்திரைகளுடன் வாழ்ந்திருக்கின்றார்கள்.
பொலிஸ் விசாரணைகளின் ஊடாக அவர்களின் முகத் திரை கிழிக்கப்பட்டு வரும் நிலையில், சமூக கட்டமைப்பில் சிறுவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் மீள யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. காரணம், இதுவரை முகத்திரை கிழிக்கப்பட்டவர்கள் பலர் சமூகத்தில் மதத் தலைவர்களாக, பிரபல வர்த்தகர்களாக, மக்களை காக்கும் பொலிஸாராக, உயிர் காக்கும் வைத்தியர்களாக வலம் வந்தவர்கள்.
அது ஒரு இணையத் தளம். பாலியல் நடவடிக்கைகளுக்கு பெண்களையும் சிறுமிகளையும், கடையில் கொள்வனவு செய்யும் பொருட்களை போல விலையிட்டு விற்கும் ஓர் அசிங்கமான இடம்.
அவ்விணையத்தளம் ஊடாக சிறுமி ஒருவர் விற்பனை செய்யப்படுவதாக கடந்த ஜூன் 7 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற தகவல் ஊடாக அறிந்துள்ளார் கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.
அந்த தகவலுக்கு அமைய பொலிஸார் கல்கிசை பகுதியில் தொடர்மாடி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தி, அங்கு பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்த 15 வயதேயான சிறுமியை மீட்டனர். இது தொடர்பில் ரஜீவ் எனும் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
இலங்கையில் பல்வேறு சிறுவர் துஷ்பிரயோக, பாலியல் பலாத்கார சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியிருந்த போதும், இணையத் தளம் ஊடாக சிறுமி ஒருவர் பொது வெளியிலேயே விற்பனை செய்யப்படுகிறார் எனும் விடயம் அதிர்ச்சிகரமாக இருந்தது.
இந் நிலையில் கல்கிசை பொலிஸார் கைது செய்த ரஜீவ் எனும் சந்தேக நபரை மொறட்டுவை நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
எனினும் இந்த சம்பவத்தின் பாரதூரத் தன்மையை ஆரய்ந்த பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, இந்த விவகாரம் தொடர்பில் ஆழமாக விசாரணை செய்யுமாறு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரியிடம் பொறுப்பளித்தார்.
தர்ஷிகா குமாரி பல வருடங்கள் சி.ஐ.டி.யில் கடமையாற்றிய மிகச் சிறந்த விசாரணையாளர்களில் ஒருவர். பல வருடங்களாக சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணை நடவடிக்கைகளை வழி நடாத்தியவர். அதன்போதும் பல்வேறு ஆபாச, துஷ்பிரயோக இணையத்தளங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தவர். இந் நிலையிலேயே தனக்கு கையளிக்கப்பட்ட இந்த 15 வயது சிறுமி விவகாரத்தினை விசாரணை செய்வதற்கான குழுவை, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகரவின் கீழ், சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரி அமைத்தார்.
அந்த பொலிஸ் குழு தீவிர விசாரணைகளை முன்னெடுத்தது. முதலில் அப்பொலிஸ் குழு பாதிக்கப்பட்ட 15 வயதான சிறுமியிடம் நீண்ட வாக்கு மூலத்தை ஆறுதலாக பெற்றுக்கொண்டது. அச்சிறுமியின் கையிலிருந்த கையடக்கத் தொலைபேசி, அத் தொலைபேசியில் பதிவாகியிருந்த தொலைபேசி இலக்கங்கள், வட்ஸ் அப் கணக்குகள் என ஒன்று விடாது அனைத்தையும் நோண்டியது. அப்போதுதான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
சிறுமியின் தாயின் கைது:
இந்த விசாரணைகளில் முதலில் குறித்த சிறுமியின் தாயை விசாரணையாளர்கள் கைது செய்தனர். அது தனது மகளை சரிவர கவனிக்காமல் அவளை கொடூர நிலைக்கு உட்படுத்தியமைக்காகும்.
30 வயதுகளையே உடையே அந்த சிறுமியின் தாயிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, அவர் முதலில் கைது செய்யப்பட்ட ரஜீவ் எனும் சந்தேக நபருடன் தகாத உறவினை பேணியவர் என்பது தெரியவந்தது.
அத்துடன் மேலதிக விசாரணைகளில், இந்த பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு தாய் உடந்தையாக இருந்தார் என்பது வெளிப்படும் போது பொலிஸாரால் நம்ப முடியவில்லை.
ஆம், தனது 15 வயது மகளை, தனது தங்கை எனக் கூறி ரஜீவிடம் அந்த தாய் கையளித்துள்ளமை விசாரணைகளில் வெளிப்பட்டது. அத்துடன் மகளை இணையத்தில் விற்பனை செய்வதற்கான தயார்படுத்தல்களும் தாயின் ஒத்துழைப்புடன் தான் இடம்பெற்றுள்ளமை என்பது மிக அதிர்ச்சிகரமானது.
தற்போது இரு மாத கர்ப்பிணியான அந்த தாய்க்கு அவரது கர்ப்பிணி நிலை மற்றும் கொவிட் பரவல் சூழல் ஆகியவற்றை மையப்படுத்தி நீதிமன்றம் நேற்று முன் தினமே (7) பிணையளித்திருந்தது.
சிறுமியின் தாயாரும் இணையம் ஊடாக இவ்வாறு பாலியல் தேவைகளுக்கு பணத்துக்காக விற்கப்படுபவர் என தெரியவந்தது. தாயும் சிறுவயதிலேயே பாலியல் பலாத்காரத்துக்கு முகம் கொடுத்துள்ளமையும் அவ்விசாரணைகளிலேயே வெளிப்பட்டது.
சட்டம் சொல்வதென்ன?
1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஊடாக, இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் பிரகாரம் 16 வயதினில் குறைந்தவர்கள் சிறுவர்களாக கருதப்படும் நிலையில் அவர்களின் விருப்பத்துடனோ விருப்பம் இல்லாமலோ பாலியல் உறவில் ஈடுபடுவது, பாலியல் பலாத்கார குற்றமாக கருதப்படுகிறது. எனவே இங்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதை அடிப்படையாக கொண்டு சிறுவர் பாலியல் பலாத்கார குற்றமாக கருதி விசாரணைகள் இடம்பெறுகின்றன.
உடலமைப்பிலேயே சிறுமி என்பதை கண்டுகொள்ளலாம்:
இங்கு பாதிக்கப்பட்ட சிறுமி, பார்த்த பார்வைக்கே சிறிய வயதை உடையவர் என்பதை கண்டுகொள்ள முடியுமான உடலமைப்பையே கொண்டுள்ளதாக இந்த விவகார விசாரணைகளை மேற்பார்வை செய்து அதற்கான ஆலோசனைகளை வழங்கும் கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம தெரிவிக்கின்றார்.
பொலிஸார் குறித்த சிறுமியை நீதிவானின் மேற்பார்வைக்காக அவரது உத்தியோகபூர்வ அறையில் கடந்த வாரம் ஆஜர் செய்தனர். இதன்போதே நீதிவான் அதனை அவதானித்து, இந்த விடயத்தை பின்னர் திறந்த மன்றில் குறிப்பிட்டார்.
அதனால் அச்சிறுமியை கொள்வனவு செய்த எவரும் அவர் சிறுமி என நினைக்கவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது பொலிஸாரின் வாதமாகும்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
இதுவரை பொலிஸாரால் சுமார் 34 சந்தேக நபர்கள் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பிக்கு, அரசியல்வாதி, வைத்தியர் முதல் கப்பல் கெப்டன், பொலிஸ் அதிகாரி என பல்வேறு நிலைகளை உடையவர்கள் உள்ளடங்குகின்றனர்.
இந் நிலையில், சந்தேக நபர்களின் சமூக அந்தஸ்து, பதவி நிலைகளை பார்க்காது அனைவரையும் கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விசாரணையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை கைது செய்யப்பட்ட பலரை பார்க்கும் போது, பெரும்பாலானவர்கள் பெண் பிள்ளைகளின் தந்தையாவர்.
மிஹிந்தலை பிரதேச சபை உப தலைவர், மாணிக்கக் கல் வர்த்தகர், வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் பணியாற்றிய இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை வீசி சிறுமியை பலாத்காரம் செய்தவர்களில் சிலர் என்பது நீதிமன்றத்தில் விசாரணையாளர்களால் கூறப்பட்டது.
இவர்களை விட இவர்களுக்கு சிறுமியை விநியோகித்தவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் தேடப்படுகின்றனர்.
இருதய சத்திர சிகிச்சை நிபுணர் கைது
இந்த விவகாரத்தில், குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான லெப்டினன் கொமாண்டர் தரத்திலுள்ள வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வெலிசறை கடற்படை வைத்தியசாலை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை, இரத்மலானை மற்றும் கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் 41 வயதான குறித்த வைத்தியர், கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது அவரை இன்று 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த வைத்திய நிபுணர் கடற்படை வைத்திய சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. கடற்படைத் தளபதியின் உத்தரவுக்கு அமைய, குறித்த வைத்தியர் இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கூறினார்.
சிக்கிய பிக்கு:
இந்நிலையில் விஷேட பொலிஸ் குழு முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த சிறுமியை ரஜீவ் எனும் சந்தேக நபர் முதலில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். பின்னர் பலர் இவ்வலையமைப்பில் இணைந்துள்ளனர்.
தலை நகரை அண்மித்த ஒரு ஊரின் விகாரை ஒன்றிலுள்ள பெளத்த பிக்கு, 50 ஆயிரம் ரூபாவுக்கு இச்சிறுமியை பெற்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். விசாரணைகளில் இந்த விடயம் தெரியவரவே முதல் கட்டத்திலேயே பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
மாலைதீவு முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர்:
இந்த சிறுமி பாலியல் பலாத்கார விவகாரத்தில், பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
40 வயதான மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக தங்கியிருப்பவர். கொள்ளுபிட்டி மரீனா பீச் ஹோட்டலுக்கு அழைத்து சென்று சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய அவர் வழங்கிய பணம் 40 ஆயிரம் ரூபாவாகும்.
இணையத்தளங்கள் தொடர்பிலான அதிரடி நடவடிக்கை:
இவ்வாறான நிலையில் தான் சிறுவர்கள், பெண்களை பாலியல் தேவைகளுக்கு விற்பனை செய்யும் பல இணையத் தளங்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகளில், அச்சிறுமியை விற்பனை செய்த இணையத்தளத்தின் உரிமையாளர், அதன் நிதி கட்டுப்பாட்டாளர் மற்றும் குறித்த விளம்பரத்தை வடிவமைத்தவர்கள் ஆகிய மூன்று பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியை விற்பனை செய்த இணையத் தளத்தின் பாணந்துறை -நல்லுருவ பகுதியைச் சேர்ந்த 45 வயதான இணையத்தள உரிமையாளர், பிலியந்தலை, மாவித்தர -அலுபோவத்தையைச் சேர்ந்த 43 வயதான நிதிக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட மூவருமே தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இணையத் தளங்கள் தொடர்பிலான விசாரணைகள், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் பணிப்பாளர் தர்ஷிகா குமாரியின் ஆலோசனை மற்றும் கோரிக்கை பிரகாரம், சி.ஐ.டி. எனும் குற்ற புலனாய்வுத் திணைக்கள டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இணையம் ஊடாக சிறுவர் மற்றும் பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யும் விவகாரம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள இணையத்தளங்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யினர் அவ்விசாரணைகளுக்கு கூகுள் நிறுவன உதவியையும் நாடியுள்ளனர்.
இரு இணையத்தளங்கள் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்திக் கொள்ள இவ்வாறு கூகுள் நிறுவனத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவின் உத்தரவைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, நாட்டில் சிறுமிகள், பெண்களை இவ்வாறு விற்பனை செய்யும் அடையாளம் காணப்பட்ட மூன்று இணையத் தளங்களை உடனடியாக தடை செய்ய தொலை தொடர்புகள் ஆணைக் குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இணையம் ஊடாக கல்விக்கு பெரும் தடங்கல்:
உண்மையில் தற்போதைய கொரோனா பரவல் நிலையிடையே, கற்றல் நடவடிக்கைகள் இணையங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்களை வெகுவாக இத்தகைய இணையத் தளங்கள் தவறான பாதைக்கு வழி நடாத்த தூண்டுகின்றமை விஷேட அம்சமாகும்.
இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில், கடந்த கொரோனா 2 ஆம் அலை பரவல் காலத்தின் போது, பம்பலபிட்டி பகுதியில், பாடசாலை மாணவன் ஒருவன், விபசாரத்தில் ஈடுபடும் பெண் ஒருவருடன் ஏற்படுத்திய தொடர்புகளுக்கு அமைய, அறையொன்றுக்கு சென்று அங்கு குறித்த பெண்ணுடன் பண கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து, அங்கிருந்து தப்பியோட முயன்ற போது விழுந்து காயமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணையும் குறித்த மாணவன், இந்த விவகாரத்தில் சிறுமியை விற்ற இணையத் தளம் ஊடாகவே அணுகியிருந்ததாக விசாரணைகள் ஊடாக தெரியவந்ததாக சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே இணையம் ஊடாக கற்றல் செயற்பாடுகளின் போது தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சிறுமியின் பாதுகாப்பு:
உண்மையில் இந்த பாலியல் பலாத்கார விவகாரத்தில் பாதிக்கப்பட்ட15 வயது சிறுமி தற்போது கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 33 ஆவது சிகிச்சை அறையில் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சிறுமியை பார்வையிட்ட நீதிவான் லோச்சனி அபேவிக்ரம, ‘குறித்த சிறுமி, பல்வேறு நபர்களால் பல்வேறு முறைகளில் பாலியல் நடவடிக்கைகளுக்கு மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளார். அச்சிறுமி எனது உத்தியோகபூர்வ அறையில் ஆஜர் செய்யப்பட்டபோது நான் அது தொடர்பில் ஆராய்ந்தேன். பாலியல் பலாத்காரங்களால், மிக மோசமாக அவர் பாதிக்கப்பட்டுள்ளார். போசனை இன்றி, மானசீக ரீதியிலும் உடலளவிலும் அவர் மிகவும் சோர்வடைந்துள்ளார்.
இந் நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பது போன்று, அச்சிறுமியை பழைய நிலைக்கு அழைத்து வருவதும், இந் நிலையிலிருந்து மீட்பதும் மிக முக்கியமாகும்.
அவர் மீண்டும் பாடசாலைக்கு செல்ல ஆசைப்படுகிறார். அதனால் எதிர்வரும் சாதாரண தரப் பரீட்சையை எழுதுவதற்காக, அவர் தயார்படுத்தப்படுவதுடன் சம வயதை உடைய சிறுவர்களுடன் அவர் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு உடல் மற்றும் மானசீக சிகிச்சைகள் வட கொழும்பு போதனா வைத்தியசாலை ஊடாக வழங்கப்படுகின்றன’ என தெரிவித்தார்.
அத்துடன் குறித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் அதிகார வர்க்கத்திலிருந்து கீழ் மட்டம் வரையில் பரந்துள்ள நிலையில் சிறுமியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக விசாரணையாளர்கள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். அதனால் ராகமை பொலிஸாருக்கு சிறுமிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுவர்கள் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படும் சம்பவங்களின் அதிகரிப்பு:
இலங்கையை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளின் தரவுகளை நோக்கும் போது சிறுவர்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. பொலிஸாருக்கு பதிவான சம்பவங்களின் அடிப்படையில் இதனை அவதானிக்க முடிகிறது.
பொலிஸ் தலைமையக புள்ளி விபரங்களின் பிரகாரம், கடந்த 2015 ஆம் ஆண்டு 1654 சிறுவர் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1339 சம்பவங்கள் சிறுவர்களின் விருப்பத்துடனும் 315 சம்பவங்கள் அவர்களின் சம்மதம் இன்றியும் நடந்துள்ளன.
2016 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள 1686 பாலியல் பலாத்கார சம்பவங்களில் 1394 சம்பவங்கள் சிறுவர்களின் சம்மதத்துடனும் 292 சம்பவங்கள் சம்மதம் இன்றியும் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
2017 ஆம் ஆண்டில் 1438 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் 1206 சம்பவங்கள் சிறுவர்களின் சம்மதத்துடன் இடம்பெற்றுள்ளன. 232 சம்பவங்கள் அவர்களின் சம்மதம் இன்றி இடம்பெற்றுள்ளன.
2018 ஆம் ஆண்டில் சிறுவர்களின் சம்மதத்துடன் 1199 பாலியல் பலாத்காரங்களும் சம்மதமின்றி 248 சம்பவங்களுமாக மொத்தமாக 1447 பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டில் 1490 சிறுவர் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் 305 சம்பவங்கள் சிறுவர்களின் சம்மதத்துடன் இடம்பெற்றுள்ளன.
இந் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் சிறுவர் பாலியல் பலாத்கார சம்பவங்களில் மீள அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது. பொலிஸ் தலைமையக தரவுகள் பிரகாரம், 1292 சிறுவர் பாலியல் பலாத்காரங்கள் கடந்த வருடம் சிறுவர்களின் சம்மதத்துடன் இடம்பெற்றுள்ளன. அவ்வாண்டில் பதிவான மொத்த சிறுவர் பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை 1653 ஆகும்.
இந்த புள்ளி விபரங்களை மையப்படுத்தி ஆராயும்போது, சிறுவர்கள் தொடர்பில் பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் வழி நடத்தலின் கூடிய அவசியம் புலப்படுவதுடன், இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் மீட்பு, உளவியல் தாக்கங்களுக்கான தீர்வுகளையும் சமூகம் தேட வேண்டியுள்ளது.
Vidivelli
Comments (0)
Facebook Comments (0)