புலம்பெயர்வு சட்டம் மற்றும் கொள்கை பற்றிய முதலாவது சான்றிதழ் கற்கைநெறி நிறைவு
இலங்கையில் 69 தொழில் வல்லுநர்கள் புலம்பெயர்வு சட்டம் மற்றும் கொள்கை பற்றிய முதலாவது சான்றிதழ் கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளமையை அறிவிப்பதில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) ஊடாக அமெரிக்கா பெருமை கொள்கிறது.
ஆட்கடத்தலுக்கு எதிரக போராடுவதற்கென தமது சமூகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு கருவிகளையும் அறிவுகளையும் இந்த தொழில் வல்லுநர்கள் தற்போது கொண்டுள்ளனர்.
இந்த ஆறு மாத கால கற்கைநெறியானது, USAID இன் “ஆட்கடத்தலுக்கு எதிராக போராடுவதற்கு சிவில் சமூகத்தை வலுவூட்டல்” திட்டம் (Empowering Civil Society to Combat Human Trafficking project – ECCT) மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கூட்டு முயற்சியொன்றாகும்.
SAFE Foundation இந்த ECCT திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. புலம்பெயர்வு மற்றும் சட்டம் பற்றிய இந்த கற்கைநெறியானது, கட்டமைக்கப்பட்ட கல்விசார் கற்கைநெறியொன்றை வழங்குவதன் நிமித்தமான சிவில் சமூக அமைப்பொன்றுக்கும் இலங்கையிலுள்ள முன்னணி பல்கலைக்கழமொன்றுக்கும் இடையிலான முதலாவது கூட்டண்மையை குறிக்கிறது.
அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், தன்னார்வ தொண்டர்கள், மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளடங்கலான இந்த மாணவர்கள் ஒன்லைன் கற்கைநெறி மூலம் புலம்பெயர்வு சட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் தேசிய மட்டத்தில் கற்றனர்.
இவர்களில் 50 மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கற்கைநெறியை பயின்றதுடன், ஏனையவர்கள் தமிழ் மொழி மூலம் கற்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் நாவலையிலுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட கற்கைகள் திணைக்களத்தில் டிசம்பர் 20 ஆம் திகதி நடைபெற்ற வைபவமொன்றில் அவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
“ஆட்கடத்தல் என்பது ஒரு உலகளவிய பிரச்சினை என்கின்ற போதிலும், அதற்கு எதிரான போராட்டமானது உள்ளூரிலேயே, அதுவும் ஒவ்வொரு சமூகத்திலுமே ஆரம்பிக்கிறது”, என்று USAID இன் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பணிப்பாளர் கேப்ரியல் க்ராவ் தெரிவித்தார்.
“புலம்பெயர்வு சட்டம் மற்றும் கொள்கை தொடர்பில் இலங்கை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தொழில் வல்லுநர்களுடன் பங்காண்மையை ஏற்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. இதன் ஊடாக அவர்கள் அவர்களது சமூகங்களில் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்பதற்கும் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கும் பணியாற்ற முடியும்”, என்றும் அவர் குறிப்பிட்டார்.
புலம்பெயர்வு மற்றும் சர்வதேச புலம்பெயர்வு சூழலில் அரசின் பொறுப்பு, ஆட்கடத்தல் மற்றும் கடத்தல் வியாபாரங்களுக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேச சட்ட கட்டமைப்பு, முறைகேடான புலம்பெயர்வு செயற்பாடுகளின் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர், திரும்பிவருவோர் மற்றும் மீள் ஒருங்கிணைப்புக்கான உரிமைகள் உள்ளிட்ட தலைப்புகள் இந்த கற்கைநெறியில் உள்வாங்கப்பட்டன.
ஆட்கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை அவர்களது சமூகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு மேலதிகமாக, சான்றிதழலிப்பானது இந்த பட்டதாரிகள் அரசாங்க அதிகாரிகளுடனும், தனியார்துறை அதிகாரிகளுடனும் மற்றும் பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் சமூகங்களுடனும் செயலாற்றுவதை இயலுமாக்கி அவர்களது நம்பிக்கையை அதிகரிக்கும்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் பற்றிய அறிக்கையானது (Trafficking in Persons Report), இலங்கையை அதனது அடுக்கு - 2 (Tier 2) நிலையில் வைத்து ஆட்கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரித்துள்ளது.
ஆனாலும், ஏனைய நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆட்கடத்தல் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதிலும் குற்ற விசாரணைக்கு உட்படுத்துவதிலும் மற்றும் புலம்பெயர் பணியாளர்கள் மத்தியில் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதிலும் முயற்சிகளை வலுப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)