கொவிட்-19 பாதிப்புக்களிலிருந்து மீளுவதற்காக இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு அமைச்சு உதவி
கொவிட்-19 தொற்றுநோயின் காரணமாக, இலங்கையின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை நிவர்த்தி செய்து, தணிப்பதற்காக முக்கியமான அரச பொருளாதார முகவர் நிலையங்கள் மற்றும் தனியார் துறையினருடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மேற்கொண்ட விரிவான நடவடிக்கைகள் புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திய அதேவேளை, இலங்கையின் பாரம்பரியமான ஏற்றுமதி உற்பத்திகளின் இழந்த சந்தை வாய்ப்புக்களைத் தக்கவைத்து, மீட்டெடுப்பதற்கும் உதவியுள்ளன.
2020 ஏப்ரல் மாதத்தில் 277 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்த ஏற்றுமதிகள், மே மாதத்தில் 606 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளதுடன், மறுசீரமைக்கப்பட்ட கணிப்புக்களுக்கு அமைய, எதிர்வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொவிட்-19 தொற்றுநோயின் பொருளாதாரத் தாக்கங்களும், இலங்கைக்கான அதன் கேள்விகளும் சவால்களும் என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடுவதற்காக 2020 ஜூன் 10ஆந் திகதி தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நேர்காணலின் போது, வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் பிரிவின் மேலதிக செயலாளர் பி.எம். அம்சா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுநோய் நிலைமை முதல், அதன் பாதிப்புக்களிலிருந்து மீளுவதற்காக, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் தேயிலை சபை போன்ற முகவர் நிறுவனங்களுடன் இணைந்து அமைச்சின் 'பொருளாதார இராஜதந்திரத் திட்டம்' இலங்கை ஏற்றுமதியாளர்கள் கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்புக்களிலிருந்து மீண்டு, ஏற்றுமதிகளை மேற்கொள்வது தொடர்பில் ஒரு முக்கிய வினையூக்கியாக செயற்பட்டு வருகின்றது என மேலதிக செயலாளர் தெரிவித்தார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் பரிமாற்றம் செய்து விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளுக்கான இடையூறுகள் உட்பட சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களின் உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக, புதிய சந்தை இலக்குகள் தோற்றுவிக்கப்பட்டு, தேயிலை, ரப்பர் மற்றும் புதிய / பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களுக்கான சந்தைகளை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் கொவிட்-19 சூழ்நிலையின் விளைவாக, குறிப்பாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரப்பர் சார்ந்த தயாரிப்புக்கள் (முகமூடிகள் - 12 சந்தைகள், பாதுகாப்பு ஆடைகள் - 17 சந்தைகள், ரப்பர் கையுறைகள் - 12, கை தொற்று நீக்கி சுத்திகரிப்பான்கள் - 12) போன்ற புதிய தயாரிப்புக்கள் மற்றும் சந்தைகளை இலக்காகக் கொள்வதற்கு இலங்கைக்கு இயலுமாக அமைந்தது. அமைச்சின் தலையீடுகளினால், இந்த சவாலான சூழ்நிலையில், 344 மெட்ரிக் டொன் மற்றும் 220 மெட்ரிக் டொன் இலங்கைத் தேயிலை முறையே துருக்கி மற்றும் எகிப்துக்கும், 30 மெட்ரிக் டொன் உறைந்த உணவுகள் ஓமானுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இலங்கையின் இணைந்த ஆடை மன்றத்தின் வேண்டுகோளின் பேரில், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை இலங்கைத் தூதரகங்களுடன் இணைந்து அமைச்சு வெற்றிகரமாக ஒருங்கிணைப்பதனால், பல நாடுகளின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வழிவகுக்கின்றது.
குறிப்பிட்ட மூலப்பொருட்களுக்கான 53 சாத்தியமான விநியோகஸ்த்தர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்குப் பிந்தைய சூழலில், புதிய சந்தைகளை கைப்பற்றுவதற்கும், தற்போதுள்ள சந்தைகளில் தேவையை வலுப்படுத்துவதற்குமான நோக்கத்துடன் ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து அமைச்சு மேலதிகமாக 15 சாத்தியமான துறைகளை அடையாளம் கண்டுள்ளது.
தற்போதைய தடைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புக்களை கருத்தில் கொண்டு, தேங்காய், பதப்படுத்தப்பட்ட உணவு, கடல் உணவு, சுவையூட்டிகள் மற்றும் செறிவூட்டிகள், மின்னணுவியல் மற்றும் இலத்திரணியல், பரிமாற்றம் செய்து விநியோகித்தல், அச்சிடுதல், மட்பாண்டம் மற்றும் பீங்கான், ஆயுர்வேதம் மற்றும் மூலிகைகள், ஆரோக்கியம், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் / வர்த்தக செயன்முறை நிர்வாகம், சமுத்திரம் மற்றும் கடல் பொறியியல், கட்டுமானம், படகு மற்றும் கப்பல் கட்டும் துறைகளை இலக்கு வைத்து விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னோக்கிச் செல்லும் ஒரு சந்தர்ப்பமாக, தேவைகள் அதிகரித்துள்ள ஆயுர்வேதம் மற்றும் மூலிகை, மட்பாண்டம் மற்றும் பீங்கான், படகு மற்றும் கப்பல் கட்டுமானம், மின்னணுவியல் மற்றும் இலத்திரணியல் உள்ளிட்ட முன்னுரிமை மிகுந்த துறைகளுக்காக வெபினார்கள் மற்றும் இணைய வழி பி 2 பி சந்திப்புக்கள் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் திட்டமிடப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் சரக்கு விமானங்களை தொடர்ச்சியாக இயக்கி வரும் விமான சேவைகள் சிலவற்றுள் ஒன்றான ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸூடன் இணைந்து அமைச்சு, வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் தனியார் துறை ஆகியன செயற்படுகின்றன.
நாட்டிற்கு மீளத் திரும்பி வர விரும்பும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்து வருவதன் காரணமாக, பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து ஆகிய இரண்டையும் அனைத்து தரப்பினருக்கும் ஏதுவான செலவுகளில் மேற்கொள்வதற்கு வழிவகுப்பதனால் இந்த விமானங்களின் நம்பகத்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)