20க்கு ஆதரவளித்தவர்கள் தொடர்பில் அடுத்த உயர் பீட கூட்டத்தில் தீர்மானம்: ஹக்கீம்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அடுத்த உயர் பீட கூட்டத்தில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடக் கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எழுத்து மூலம் விளக்கம் கோர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் தீர்மானித்துடன் அதற்கான கால எல்லை கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், கல்முனை பிராந்தியத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.யூ.தாஹா செய்னுதீன் கடந்த வெள்ளிக்கிழமை (05)  கொழும்பில் காலமானார்.

இதற்கமைய கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில்  இவருக்குறிய ஜனாஸா தொழுகை இன்று (07) சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்ட பேரணிக்கு எமது கட்சியினர் ஆதரவளிக்க கூறியுள்ளேன். இந்த பேரணி என்பது நாட்டில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் மாத்திரம் அல்ல இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சி நீதித் துறையின் சுயாதீனம் என்ற விவகாரங்களில்  நாட்டமுள்ள சகல தரப்பும் குறிப்பாக இந்த  நாட்டின் பேரின சமூகம் இந்த நாட்டில் அராஜகம் ஒன்று நடப்பதாக இருந்தால் அந்த அராஜகத்துக்கு எதிராக நடக்கின்ற எந்த ஆர்ப்பாட்டத்திலும் அந்த பேரின சமுத்துக்கும் பங்கு உண்டு.

இது வெறுமென தமிழ் பேசும் சமூகத்தின் போராட்டம்  மாத்திரம் அல்ல இந்த நாட்டில் உள்ள சகல இனங்களும்  சேர்ந்து நாட்டில் நேர்மையான நியாயமான ஆட்சி நடை பெற வேண்டும் அராஜகம் நீங்க வேண்டும்.

சட்டத்தின் ஆட்சி சரியாக இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் போராட்டம் என்பதால் இந்த போராட்டத்தை  ஆதரிப்பதில் வெறும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினை மாத்திரம் அல்ல இந்த நாட்டின்; பெரும்பான்மை மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினையும் இதில் உள்ளடங்கியுள்ளது என்ற காரணத்தால் இதை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.