தற்போதைய நிலைமை இன்னும் சில நாட்களில் சீராகிவிடும்: ஜனாதிபதி

தற்போதைய நிலைமை இன்னும் சில நாட்களில் சீராகிவிடும்: ஜனாதிபதி

எரிபொருள், எரிவாயு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உடனடியாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய நிலைமை இன்னும் சில நாட்களில் சீராகிவிடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (08) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

.நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு, ஏற்றுமதி மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து புதிய முதலீடுகளுடன் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

ஆனால் உலகம் முழுவதும் எதிர்கொண்ட கொவிட் தொற்றுநோய் நிலைமை அனைத்து நாடுகளையும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது. பெரும் செல்வந்த நாடுகள் கூட தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு தேடுகின்றன.

அந்த நிலைமை, நிதிக் கையிருப்பு இல்லாத நம்மைப் போன்ற ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாரியளவில் பாதிக்கிறது. இந்தப் பின்னணியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு சர்வகட்சி அரசாங்கத்தின் மூலம் தீர்வு காண ஜனாதிபதி  அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடினார்.

ஆனால் அதற்குக் கிடைத்த பதில் சாதகமாக அமையாததால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை ஏற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் கடன் உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்புலம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில், அரச தலைவர்களுடன் தொலைபேசி மூலமாகவும் அதேபோன்று பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடனும் கலந்துரையாடி அந்நாடுகளின்  ஆதரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு அதன் பிரதிபலன்கள் தற்போது நாட்டுக்குக் கிடைத்து வருகின்றது.  

1. அத்தியாவசிய மருந்துகள் தொகை ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

2. இந்திய கடன் வசதியின் கீழ் 65,000 மெட்ரிக் டொன் உரங்களுக்கான கேள்வி விடுக்கப்பட்டுள்ளன. அதன் முதலாவதாக 44,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றிச் செல்லும் கப்பல் நாளை (09) நாட்டை வந்தடையவுள்ளது.

3. ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து பெறப்படவுள்ளன.

4. பல்வேறு விவசாயத் திட்டங்களின் கீழ், நாட்டில் உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

5. 21வது திருத்தம் ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ள இவ்வேளையில், மக்களை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் வேலைத்திட்டம் மிகவும் வருந்தத்தக்கது. இதன் மூலம்  நாடு மீண்டும் பின்னோக்கித் தள்ளப்படும்.

சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக இருப்பது மக்களின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

எனவே, தற்போதைய நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு, தவறான சித்தாந்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.