விமானப் படையின் 70ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்க இந்திய விமானப் படையினர் வருகை
இலங்கை விமானப் படையினர் இன்று (02) செவ்வாய்க்கிழமை 70ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடும் விழாவில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படையினர் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை விமானப் படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி வர்ண விருதுகள் இதன்போது வழங்கப்படவுள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை முன்னிட்டு மார்ச் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரையில் காலி முகத்திடலில் முதற் தடவையாக பாரியளவிலான வான் சாகச கண்காட்சி ஒன்றும் அதேபோல வேகமாக பறத்தல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் கூட்டொருமைப்பாட்டின் சமிக்ஞையாகவும் இராணுவ ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் தோழமையை குறிப்பிடும் முகமாக சரங் (அதிநவீன இலகுரக ஹெலிகொப்டர்), சூர்ய கிரண், தேஜாஸ் தாக்குதல் விமானம், தேஜாஸ் பயிற்சி மற்றும் டோனியர் சமுத்திர ரோந்து விமானம் ஆகியவற்றுடன் இந்திய விமானப் படையினரும் இந்திய கடற் படையினரும் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றனர்.
இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினரின் 23 விமானங்கள் இந்த பாரிய நிகழ்வில் பங்கேற்க உள்ளன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்திய விமானப் படை மற்றும் கடற் படை விமானங்கள் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தன.
இந்திய விமானப் படையின் சி17 குளோப் மாஸ்டர் மற்றும் சி-130ஜே போக்குவரத்து விமானங்களும் இதற்கு ஆதரவாக வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பல வகையிலான தயாரிப்புக்களும் பாரிய எண்ணிக்கையிலான விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருப்பது இந்திய மற்றும் இலங்கை படையினரிடையிலான நட்பு மற்றும் பகிரப்பட்ட இயங்குதிறன் அதேபோல வலுவான பிணைப்புக்களையும் எடுத்தியம்புகின்றது.
இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் சகல இந்திய விமானங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதேநேரம் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் சுதேச தொழில்நுட்ப வலிமை மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைகிறது.
தேஜாஸ் பயிற்சி விமானம் முதற் தடவையாக இந்த கண்காட்சியில் கலந்துகொள்வதுடன் இலங்கை விமானப் படையின் விமானிகள் இந்திய விமானிகளுடன் இணைந்து சுதந்திரமான பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக அமைகின்றது.
அதே நேரம் இந்த நிகழ்வுகளின்போது சகல சுகாதார நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையின் சமுத்திர ரோந்து விமான டோனியரில் முதற் தடவையாக அனுபவங்களைப் பெற உள்ளனர்.
இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற் படையினர் இந்திய விமானிகளுடன் இணைந்து விமானங்களில் பயணிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையினருக்காக அரையாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் டோர்னியர் பயிற்சி நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இது அமைகின்றது.
பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவைப் பொறுத்தவரையில் 'முதல் முன்னுரிமை' நாடாக இலங்கை அமைகின்றது. 2020 நவம்பர் மாதம் இலங்கையால் நடத்தப்பட்ட இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் கலந்துகொண்டதுமான முத்தரப்பு கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டிற்காக வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், இலங்கையின் தலைமைத்துவத்திற்கு பாதுகாப்புதுறை சார்ந்த விடயங்களில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பானது வலியுறுத்தி கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இந்திய விமானப் படையினரும் இந்திய கடற்படையினர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை இரு நாடுகளினதும் ஆயுதப் படைகள் இடையிலான நட்புறவு, தோழமை மற்றும் வளர்ந்துவரும் ஒத்துழைப்பு ஆகியவற்றினை பிரதிபலிப்பதாகவே அமைகின்றது.
Comments (0)
Facebook Comments (0)