'செப்டம்பர் 11 தாக்குதல்களின் இழப்புக்களை விட அமெரிக்கா படைகளின் எதிர்த் தாக்குதல்களின் இழப்புக்கள் பாரியது'

'செப்டம்பர் 11 தாக்குதல்களின் இழப்புக்களை விட அமெரிக்கா படைகளின் எதிர்த் தாக்குதல்களின் இழப்புக்கள் பாரியது'

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

ஆயுத உற்பத்தியாளர்கள் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் தொடர்ந்த போர்கள் மூலமாக 7 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளனர். இத்தொகையானது இலங்கையின் அடுத்துவரக்கூடிய 350 ஆண்டுகளுக்குரிய வருடாந்த அந்நிய செலாவணி வருமானத்திற்கு சமனாகும்.

உலகின் மிக சக்திவாய்ந்த வல்லரசு நாடான அமெரிக்கா, இரட்டை கோபுரத் தாக்குதலின்  20 ஆம் ஆண்டு நினைவு தினத்தை கடந்த (11/9/2021) சனிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடியது.

9/11 நினைவுகூறும் இத்தருணத்தில் இலங்கை அரசாங்கம் தனது ஆதரவையும் அமரிக்க நிர்வாகத்துடனான தனது ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் 9/11 க்குப் பின்னர் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளினால் தொடுக்கப்பட்ட பதில் தாக்குதல்கள் மூலம் ஏற்பட்ட விளைவுகளை நோக்கும்போது மிகுந்த வேதனையும் பேரதிர்ச்சியும் தருவதாகவே உள்ளது.

உண்மையில் இரட்டை கோபுரத் தாக்குதலின் இழப்புக்களோடு ஒப்பிட்டு நோக்கும் போது வல்லரசு படைகளின் தாக்குதலால் இறந்தவர்களினதும் அகதிகளினதும் எண்ணிக்கை மற்றும் அப்பாவிகளின் இரத்தத்தை உறிஞ்சிய போர்களினால் பயனடைந்த சுயநலமிகளின் எண்ணிக்கைகள் பேரதிர்ச்சியை இரட்டிப்பாக்கிறது.

அமெரிக்க - நேட்டோ படைகள் மேற்கொண்ட 'பயங்கரவாதத்திற்கு' எதிரான தாக்குதல்கள் 9/11 தாக்குதல்களை விட சகிக்க முடியாத அளவிற்கு அவலங்களையும் பேரழிவுகளையும் தந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். உலகை அதிர வைத்த இரட்டை கோபுர தாக்குதல் என்பது அழித்து நாசமாக்க வேண்டும் என்று திட்டமிட்டு மேற்கொண்ட பயங்கரத் தாக்குதலாகும்.

செப்டம்பர் 11 அன்று 19 பேர் கொண்ட நான்கு குழுக்கள் ஒருங்கிணைந்து நான்கு பயணிகள் விமானத்தை கடத்திச் சென்றனர். இரண்டு விமானங்கள் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீது மோதியது.

இரண்டே மணி நேரத்தில் 110 மாடி கட்டிடம் முழுவதுமாக சரிந்து விழுந்தது. ஒரு விமானம் இராணுவத் தலைமையிடமான பென்டகன் மீது மோதியது. நான்காவது விமானம் கட்டுப்பாட்டை இழந்து பென்சில்வேனியாவில் உள்ள வெட்டவெளியில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

அமெரிக்காவை நிலைகுலைய வைக்கும் அளவுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 2,799 பேர் கொள்ளப்பட்டனர். நியூஸ்வீக் சஞ்சிகை தரும் தகவலின் படி ஏப்ரல் 2021 வரை அமெரிக்க - நேட்டோ எதிர் தாக்குதல் காரணமாக அமரிக்க மற்றும் நேச நாடுகளின் 7,442 படைவீரர்கள் பலியாகியுள்ளனர்.

கூட்டுப் படையினர் பயங்கரவாதத்திற்கு எதிராக ஆரம்பித்த போராட்டமானது 9/11 தாக்குதலின் போது பலியானோரை விட இரண்டரை மடங்கு அதிகமான அமெரிக்க உயிர்களை காவு கொண்டுள்ளன. இலங்கையின் புகழ்பெற்ற பாடகர் அமரர் சுனில் பெரேராவின் 'ஏன் என்று எனக்குப் புரிய வில்லை” ( I don’t know why!) என்ற பாடல் இதற்கு பதிலாக அமையலாம்!

கூட்டுப் படையினால் தாக்கியழிக்கப்பட்ட அப்பாவி நாடுகளின் சேதங்கள் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? அமெரிக்காவின் தலைமையில் அரங்கேற்றப்பட்ட போராட்டத்தில் கொல்லப்பட்ட சிவிலியன்கள் உட்பட ஆப்கானிகளின் எண்ணிக்கை பற்றி ஆப்கானிய வட்டாரங்களில் இருந்து தெளிவான தரவுகளோ பதிவுகளோ கிடைக்கவில்லை.

மேற்கத்திய மதிப்பீடுகள் கூறும் தகவலின் படி 1/4 தொடக்கம் 1/2 மில்லியன் வரை உயிர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அறியக்கிடைக்கிறது. மிண்ட் பிரஸ் செய்திக்கு எழுதிய நிக்கோலஸ் டேவிஸின் கூற்றுப்படி, 'பேரழிவு தரும் ஆயுதங்களை ஈராக் வைத்திருக்கிறது' என்று ஈராக் மீது பொய்யான குற்றம் சாட்டி, பாதுகாப்பு கவுன்ஸிலின் ஒப்புதலும் இல்லாமல், புஷ் மற்றும் பிளேயர் இணைந்து மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போராட்டத்தில் 2.4 மில்லியன் ஈராக்கிய பொதுமக்கள் பலியானார்கள்.

அமெரிக்காவின் முன்னாள் 'நியூரம்பேர்க்' வழக்கறிஞர் பெஞ்சமின் பெரென்ஸை மேற்கோள் காட்டி டேவிஸ் எழுதுகிறார், "குற்றங்கள் எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும் அந்தக் குற்றச் செயல்களோடு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மக்கள் மீதும் நாடுகள் மீதும் படையெடுப்பதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது"

அமெரிக்க இராணுவத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 9/11 தாக்குதல்களுக்கு பின்னர் நாடு திரும்பிய இராணுவ சிப்பாய்கள் மத்தியில் 30,177 தற்கொலைகள் நடந்துள்ளதாக அமரிக்காவின் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான வாட்சன் ஆய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்தத்தில் மரணித்த 7,441 அமெரிக்க இராணுவத்துடன் 30,177 தற்கொலைகள் என்பது உண்மையில் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையாகும். இது இப்படி இருக்க அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கைகளை என்னவென்று சொல்வது? வாட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை பின்வரும் தகவல்களை தருகிறது.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மேற்கொண்ட படையெடுப்பின் விளைவாக 2.61 மில்லியன் அகதிகள், 1.84 மில்லியன் உள்நாட்டில் இடம்பெயர்ந்தேர், 0.33 மில்லியன் புகலிடம் கோரியோர் என மொத்தமாக 4.78 மில்லியன் பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஈராக்கில் அகதிகளவானோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கை 3.25 மில்லியனாகும். அவ்வாறே சிரியாவின் தொகை 12.59 மில்லியனாகும். இந்த பேரவலம் யாவும் 9/11 தாக்குதல்களுக்கு பிறகு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பொய்களை கூறி அத்துமீறிய ஆக்கிரமிப்பு போர்களின் விளைவாக உருவானதாகும்.

மேற்கத்திய வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு படையெடுப்பு காரணமாக துயரங்களுக்கு முகம் கொடுக்கும்  நாடுகளின் சவால்கள் எண்ணிலடங்காதவை. அமெரிக்க கூட்டுப்படைகளின் படையெடுப்பால் மூன்று மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். பல மில்லியன் பேர் அகதிகளாக முகாம்களில் வாடுகின்றனர்.

இன்னும் பல மில்லியன் கணக்கானோர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து நாதியற்றவர்களாக வாழ்கின்றனர். இத்தனைக்கும் இவர்களுக்கும் 9/11 தாக்குதல்களுக்கும் எந்தத் தெடர்பும் கிடையவே கிடையாது.

எனவே இந்த நிலையில் எஞ்சியுள்ள மில்லியன் கணக்கான சிவிலியன்களை பாதுகாத்து அவர்களின் பொது வாழ்கையை எவ்வாறு மீள்கட்டியெழுப்புவது என்றும், ஆப்கானிஸ்தானை பொருத்தவரை அதன் பயங்கரமான பொருளாதார வீழ்ச்சியை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்றும் திட்டம் வகுத்து செயற்படுவதே மிக முக்கியமான முன்னுரிமைபடுத்தி செய்ய வேண்டிய பணிகளாகும்.
 
மேற்படி அகதிகளில் 1.3 மில்லியன் பேர் பாகிஸ்தானிலும் ஈரானில் 2 மில்லியன் அகதிகளும் துருக்கியில் 3.2 மில்லியனும் மீதமுள்ள தொகையினர் ஐரோப்பாவிலும் பரந்துபட்டுள்ளனர். உண்மையில் அவர்கள் நிரபராதிகள். புஷ் மற்றும் பிளேயரின் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் மனிதம் பறிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாத்திற்கு எதிரான போரை தொடங்குவதாக அமரிக்கா அறிவித்தது. 9/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என நம்பப்படும் ஒஸாமா பின்லேடனை பிடிக்க ஆப்கானுக்கு படையெடுத்தது அமெரிக்கா.

ஆனால் பின்லேடனை பிடிப்பதற்கு மீட்புப் பணியில் விசேட பயிற்சி பெற்ற இஸ்ரேலிய விமானப்படை மற்றும் மொஸாட்டுன் துணை ஒப்பந்தமொன்றை செய்திருந்தால் இலகுவாக அவரை கைது செய்திருக்க முடியும். 1976ஆம் ஆண்டு எயா பிரான்ஸ் பயணிகள் விமானம் ஒன்று கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு உகண்டாவில் உள்ள என்டெப்பே விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ஸ்தலத்திற்கு விரைந்த இஸ்ரேல் விமானப்படை பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டனர். அவர்கள் எதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 106 பணயக்கைதிகளில் 102 பேரை உயிருடன் மீட்டனர். இந்த பிரசித்தி பெற்ற பணயக்கைதிகள் மீட்பு நிகழ்வை புஷ் மற்றும் பிளேயர் அறியாதவர்கள் அல்ல.

நிஜமாகவே செப்படம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதலின் 'உலகை மாற்றிய'  சூத்திரதாரியாக பின்லேடன் இருந்திருந்தால் அது வரலாறாக எழுதப்பட்டிருக்கும். பாகிஸ்தானில் வைத்து ஒஸாமாவை கைது செய்யும் வாய்ப்பு நூறுவிதும் இருந்தது.

அதனை தடுக்கும் சக்திகள் உலகில் யாருக்கும் இருக்கவில்லை என்பதும் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். அப்படி கைது செய்தால் அவருடைய சகல நடவடிக்கைகளுக்குமான விலை மதிக்க முடியாத அபூர்வ நுண்ணறிவையும் நெட்வேர்க் தொடர்பாடல்களையும் கண்டுபிடிக்க வாய்ப்பு இருந்தது. அவர் நிராயுதபாணியாக இருந்தும் கூட அவர் கைது செய்யப்படவில்லை.

அமெரிக்க கடற் படையினரின் கைகளில் இருந்த போது ஏன் அமெரிக்கா அவரை பிடிப்பதற்கு விரும்பவில்லை. இதற்கான உண்மையான நியாயங்கள் வெளிப்படும் காலம் தூரத்தில் இல்லை.

கடத்தலில் ஈடுபட்ட பத்தொன்பது கடத்தல்காரர்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த யாரும் இருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 9/11 தாக்குதலை வன்மையாக கண்டித்த தாலிபான்களை மேற்கத்திய சக்திகள் புறக்கணித்தமை கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

அதனைத் தொடர்ந்து ஒஸாமா பின்லேடனை நடுநிலை போக்கை கடைப்பிடிக்கும் ஒரு நாட்டில் வைத்து விசாரணை செய்வதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (OIC) அனுமதி வழங்க வேண்டும் என்ற தாலிபான்களின் முன்மொழிவைக் கூட அமெரிக்கா நிராகரித்தது.

அமெரிக்காவின் ஒரே இலக்கு போர் தான் என்பதை இது காட்டுகிறது. எதிரியை பிடிப்பது அமெரிக்காவின் எண்ணத்தில் இல்லை. முடிந்தளவு போர்களை தொடர்வது தான் அவர்களின் இலட்சியம். அமெரிக்கா போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்தால் அது ஆயத உற்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவானது.

பிலிக்ஸ் சாலமன் 2021 செப்டம்பர் 11 ஆம் திகதியன்று எக்ஸியோஸ் செய்தி இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் *அமெரிக்காவின் இரட்டை முகத்தை தோலுரிக்கும் செய்தியை தந்துள்ளார். பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களான ஆயுத உற்பத்தியாளர்கள் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிந்தைய போர்களில் இருந்து 7 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளனர்.

இத்தொகையானது இலங்கையின் 350 ஆண்டுகளுக்குரிய வருடாந்த அந்நிய செலாவணி வருமானத்திற்குஇ வருடாந்தம் 21 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில்,  சமனாகும்.

எனினும் ரொய்டர் செய்தி நிறுவனம் செப்டம்பர் 14 ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில் 9/11 பிந்தைய ஆக்கிரமிப்பு படையெடுப்புகளுக்கு பென்டகனுக்கு 14 டிரில்லியன் டொலர் செலவ் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் சரிபாதித் தொகையானது அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களுக்கே சென்றுள்ளது. பின்வரும் ஐந்து ஆயுத உற்பத்தியாளர்கள் செப்டமபர் 11 தாக்குதல்களினால் பெரும் இலாபமீட்டிய பயனாளிகளில் முதன்மையானவர்களாகும். லூக்ஹீட் மார்ட்டின், ரேதியான் டெக்னாலஜிஸ், போயிங் நார்த்ரோப், க்ரூம்மன், ஜெனரல் டைனமிக்ஸ்.  

மற்றும் ஆயுதங்கள் வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, எமிரேட்ஸ், நோர்வே, ஸ்வீடன், கனடா, துருக்கி, சிங்கப்பூர், பிரேசில், ஸ்பெயின், இத்தாலி மற்றும் உக்ரைன் ஆகியவை அடங்கும். அவர்கள் மிகப் பெரும்பாலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் அடுத்த நாடுகளில் நடைபெற்ற போர்களின் பயனாளிகளாகவே உள்ளனர்.

பல முன்னணி நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆயுதத் தொழிற்சாலைகள மூலம் நிதி வளங்களை பெற்று இயங்குகின்றன என குற்றம் சாட்டப்படுகிறது. அதேவேளை மேற்கத்திய ஊடகங்கள் முன்னணியில் இருந்து கொண்டு போர் முரசு கொட்டியவண்ணம் உள்ளன.

அவர்களின் நலன்களுக்காகவென்றே தயார் செய்யப்பட்ட கட்டுக் கதைகள் இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் சந்தைப்படுத்தப்படுகின்றன. இத்தகைய பொய் பிரசாரம் செய்யும் ஊடக கருத்தாடல்களை மற்றும் கலந்துரையாடல்களை மக்கள் நம்புகிறார்கள்.

பெரும்பாலும் சுய நலன்களுக்காக விதைக்கப்படும் பொய்யான கதைகளை பிரித்தறிவதற்கான அவகாசம் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. காலப்போக்கில் யுத்தத்தாலும் மோதல்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக வெறுப்பும் தப்பெண்ணமும் வளர்க்கப்படுவது வேடிக்கையாகும்.

வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு படையெடுப்புகளை நியாயப்படுத்துவும் நிம்மதியாக உள்ள நாடுகள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தவும் அதிகார வர்க்கத்தின் முகவர்கள் அல்லும் பகலும் விஷக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இந்த வகையில் முன்னாள் போர் வீரர்கள், கல்வியாளர்கள், துறைசார்ந்தவர்கள் என அழைக்கப்படுவேர் அமைதி நிலவும் நாடுகளின் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களையும் வெறுப்புணர்வையும் மோதல்களையும் உருவாக்கிவிடுகின்றனர்.

இவர்களின் மனச்சாட்சியற்ற கபட நாடகம் காரணமாக ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்கும் மக்கள் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

உண்மையில் சமாதான சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையும் கண்டிப்பாக தேவையுள்ள நாடுகள் தங்கள் நாடுகளில் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த வரிந்து கட்டிக் கொண்டு செயற்படவேண்டிய தருணத்தில் அர்த்தமற்ற மோதல்களில் சிக்கித் தவிக்கின்றன.

இந்த மோதல்கள், குறிப்பாக நலிவடைந்த பலவீனமான நாடுகளிலுள்ள ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களை தவறாக வழிநடாத்தும் முகவர்களால் வடிவமைக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் கறைபடிந்த வரலாற்றில் சில விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. 2001 ஆம் ஆண்டில் பர்பரா லீ என்பவர் அமெரிக்க காங்கிரஸ் கொண்டுவந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பிரகடனத்திற்கு எதிராக வாக்களித்தார்.

அவ்வாறே 9/11 க்கு மூன்று நாட்கள் கழித்து செப்டம்பர் 17 அன்று புஷ்ஷின் 2001 பயங்கரவாதிகள் சட்டத்திற்கு எதிரான இராணுவப் படையை பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை (AUMF) எதிர்த்து லீ வாக்களித்தார்.

இந்த அங்கீகாரம் தான் செப்டம்பர் 11 தாக்குதல் குறித்து நம்பகமான விசாரணைகள் தொடங்குவதற்கு முன்பே ஆப்கானிஸ்தானில் 20 வருட கால போராட்டத்திற்கு வழிவகுத்தது. சரியாக இருபது வருடங்களுக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் அங்கே தோல்வி கண்டதன் பிறகு 2021 ஆகஸ்ட் 15 அன்று பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள ஆப்கானிஸ்தானை விட்டும் வாபஸ் பெற்றுச் சென்றன.

பர்பரா லீ அவர்கள் 9 செப்டம்பர் 2021 அன்று கூறிய வார்த்தைகள் அவலத்தின் யதார்த்தத்தை பிரதிபளிக்கிறது. அவர்: 'வரி செலுத்தும் ஒவ்வொரு அமெரிக்கரும் ஒவ்வொரு மணிநேரமும் 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ந்த மொத்த போர்களுக்கான விலையாக 32 மில்லியன் டொலர்களை செலுத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்கள் அமெரிக்காவின் பாதுகாப்பை பலப்படுத்தவுமில்லை அல்லது மத்திய கிழக்கில் ஜனநாயகத்தையோ, ஸ்திரத்தன்மையையோ கொண்டுவரவும் இல்லை' என்று கூறினார்.