சபையில் சூடு பிடித்தது ஜனாஸா விவகாரம்

சபையில் சூடு பிடித்தது ஜனாஸா விவகாரம்

றிப்தி அலி

கொரேனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே இந்த விடயம் சூடு பிடித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இந்த பலவந்த எரிப்பு இடம்பெற்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலையும் மீறியே இந்த எரிப்பு இடம்பெற்றது.

சீனாவிற்கு அடுத்ததாக இலங்கையில் மாத்திரமே கொரேனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களின் எதிர்ப்புகளையும் மீறியே பலவந்த எரிப்பு இடம்பெற்றது.

இதன் மூலம் அப்போதைய ஆட்சியாளரினால் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கூட எந்தவித விசாரணைகளுமின்றி தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கான பிரதான காரணம் சுகாதார அமைச்சினால் அப்போது நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் தீர்மானமாகும். வைத்திய நிபுணர் சன்ன பெரேரா தலைமையிலான குறித்த குழுவின் தீர்மானம் இரவோடு இரவாக மாற்றப்பட்ட விடயமும் யாவரும் அறிந்த உண்மையாகும்.

கொரேனா வைரஸ் தொற்றுக் காரணமாக இலங்கையில் உயிரிழப்பவர்களை தகனம் அல்லது அடக்கம் செய்ய முடியும் என குறித்த குழுவினால் வெளியிடப்பட்ட வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நீர்கொழும்பினைச் சேர்ந்த முஸ்லிமொருவர் மரணமடைந்ததை அடுத்து இலங்கையில் தகனம் மாத்திரமே செய்ய முடியும் குறித்த வழிகாட்டி இரவோடு இரவாக மாற்றப்பட்டது.

அது மாத்திரமல்லாது, குறித்த குழுவின் உறுப்பினரான பேராசிரியர் மெத்திகாவும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பினார். அதாவது, கொரேனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தால், அந்த உடல்களிலுள்ள வைரஸ் நீரின் ஊடாக பரவும் என்ற கருத்தினை முன்வைத்தார்.

எனினும், குறித்த விடயம் தற்போது பொய்ய என நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், இனமொன்றினை இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விடயத்திற்கு இன்று வரை யாரும் பொறுப்புக் கூறவில்லை.

இவ்வாறான நிலையில் கடந்த 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றினை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினையும் சுட்டிக்காட்டினார். அது மாத்திரமல்லாமல்,  பலவந்தமாக உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி மன்னிப்பும் கோரினார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"உலக சுகாதார நிறுவனத்திடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் இலங்கையில் நாங்கள் ஒரு குழுவை நியமித்தோம். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று குழு பரிந்துரைத்தது. உலக சுகாதார நிறுவனம் வேறுபட்ட கருத்தை எடுத்தது.

ஆனால் பின்னர் உயர் நீதிமன்றம் அந்தக் குழுவின் பரிந்துரையை உறுதி செய்தது. எனவே அதை அரசாங்கம் பின்பற்ற வேண்டியேற்பட்டது. அப்போது மாற்று வழி இருக்கவில்லை. ஆனால் இப்போது அவை அனைத்தும் முடிந்துவிட்டது.

மேலும், இவை அனைத்தையும் நாம்  எதிர்கொண்டோம். இந்த நாட்டில் அடக்கப்படுவதா அல்லது எரிக்கப்படுவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும்.

எனவே, இறந்தவரின் உடலை புதைக்கவோ, தகனம் செய்யவோ அல்லது மருத்துவ பீடத்திற்கு தானமாக வழங்கவோ உரிமை வழங்கும் சட்டத்தை இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கொண்டு வரவுள்ளார்.

இந்த காலக்கட்டத்தில், முக்கியமாக முஸ்லிம் மக்களுக்குப் மன ரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் எனக்கு தெரிந்த இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்வதை விரும்புகிறார்கள்.

எனவே நடந்ததற்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இது தொடர்பாக முன்வைக்கப்படும் சட்டமூலத்திற்கு இந்தச் சபை ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் இந்த விடயம் தொடர்பில் உரையாற்றினர்.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத அடிப்படையில் செயற்பட்டு ஜனாஸாக்களை எதிர்த்தது என எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டினார்.

தேசிய ரீதியாக நிபுணர் குழுவொன்றை நியமித்து அவர்களின் பரிந்துரை என்ற பெயரில் செயற்பட்டு, முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு நாம் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பேராசிரியர் மெத்திக்கா என்பவரின் பொய்யான இனவாத கருத்தினாலேயே கட்டாய தகனம் எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

அப்போதைய காலப் பகுதியில் அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்பன்வில ஆகியோர், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கை அடக்கம் செய்ய எந்த எதிர்ப்பினையும் வெளியிடவில்லை. நிபுணர் குழுவே எதிர்ப்பு வெளியிட்டது எனவும் அமைச்சர் கூறினார்.

மத நம்பிக்கைகளை மீறி பலவந்தமாக ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனுடன் தொடர்புடையவர்களை பகிரங்கப்படுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

எவ்வாறாயினும், நடந்து முடிந்த இந்த சம்பவத்தினை பேசிப் பேசி காலத்தினை வீணடிப்பதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. மாறாக, ஜனாதிபதியினால் கூறப்பட்டுள்ள புதிய சட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அனைவரதும் தலையாய கடமையாகும்.

அதாவது, இறந்தவரின் உடலை புதைக்கவோ, தகனம் செய்யவோ அல்லது மருத்துவ பீடத்திற்கு தானமாக வழங்கவோ உரிமை வழங்கும் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இது தொடர்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் ஜனாதிபதி அறிவிப்பொன்றை மேற்கொண்டிருந்தார். எனினும், குறித்த சட்டத்தின் வரைபு இன்று வரை வெளியாகவில்லை.

எமது நாட்டுக்கு மிகவும் இன்றியமையாததென்றான இந்த சட்டத்தினை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையினை கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.