அதானியின் மின் உற்பத்திக்கு வலுக்கும் எதிர்ப்பலைகள்
றிப்தி அலி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படும் பிரபல கோடிஸ்வரரான கௌதம் அதானியினால் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி செயற்த்திட்டத்திற்கான எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.
தற்போது, இந்த திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையிலேயே இரண்டாவது தடவையாகவும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். ஜெய்சங்கர், கடந்த வியாழக்கிழமை (மே 20) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் விஜயம் தொடர்பான முன்னேற்பாடுகளை ஆராயவே ஜெய்சங்கர் கொழும்பு வந்ததாக இலங்கை அரசாங்கத்தின் தகவல் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த ஒரு நாள் விஜயத்தின் போது இந்தியாவின் நிதியினால் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் அவர் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கில் அமையவுள்ள அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் திருகோணமலையில் நிறுவப்படவுள்ள கைத்தொழில் வலயம் ஆகியவற்கு இதன்போது முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளன.
2030ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதத்தினை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதே இலங்கையின் இலக்காகும்.
இதற்கமைய, இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், வட மாகாணத்தின் மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பிரதேசங்களில் 484 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் பணி இந்தியாவின் 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்திடம் கடந்த 2022ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.
சுமார் 442 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டினை இத்திட்டத்திற்காக இலங்கையில் மேற்கொள்ள குறித்த நிறுவனத்திடமிருந்து அடுத்த 20 வருடங்களுக்கு மணித்தியாலத்திற்கு ஒரு கிலோவாட் மின்சாரத்தினை 8.26 அமெரிக்க டொலரினைச் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை கடந்த மே 7ஆம் திகதி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்திற்கு இலங்கையில் சூழலியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புக்களை வெளியிட்டு வரும் பின்னணியிலேயே, இந்த அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 202 ஹெட்டெயர் காணியில் அதானி நிறுவனத்தினால் மன்னாரில் நிறுவப்படவுள்ள 250 மெகா வேட் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக பல அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எந்தவித விலைமனுக் கோரலும் மேற்கொள்ளப்படமால் வழங்கப்பட்டுள்ள இந்த செயற்த்திட்டத்தினால் பாரிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு எதிராக மன்னார் மாவட்ட ஆயர் கலாநிதி எப்.எல்.ஈ.எப்.எக்ஸ் பெஸ்டின், சூழலியலாளர்களான பேராசிரியர் நிமல் குணதில்லக, பேராசிரியர் சரத் கொடகம மற்றும் ரொஹான் பெட்டியகொட, சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம், வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் எனப் பல்வேறு தரப்பினரினாலேயே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனத்திடமிருந்து 4.6 அமெரிக்க டொலரில் மின்சாரத்தினை கொள்வனவு செய்ய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட்டுள்ள சமயத்தில் பேச்சுவார்த்தை மூலம் தயாரிக்கப்பட்ட கட்டணம் 20 ஆண்டுகளுக்கு அதிக விகிதத்தில் நிர்யிக்கப்பட்டுள்ளதாக குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டிற்கு கணிசமான நிதி இழப்பை ஏற்படுத்துடன் நுகர்வோருக்கு சுமையாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனால் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் தற்போது கேள்விக்குரியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொது அக்கறையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களில் விலைமனுக்கோரல் மற்றும் அதானி கிறீன் எனர்ஜி திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள நிர்மாணம் ஆகியன சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் நிலைபேறத்தகு அதிகார சபை என 60க்கு மேற்பட்டோர் இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறப்படுவதாகவும், அதானிக்கு திட்டத்தை வழங்க எடுக்கப்பட்ட முடிவு தவறானவை என்றும் இது தொடர்பி;ல எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று அறிவிக்குமாறும் இதன் மனுவொன்றில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த செயற்த்திட்டம் தொடர்பான வெளிப்படைத்தன்மை, சட்டபூர்வமான தன்மை, மதிப்பீட்டு செயல்முறை, விலை நிர்ணயம், அரசின் ஈடுபாடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான தகவல்களை கோரி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது.
காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தின் தற்போதைய உலகளாவிய விலைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள விலைக்கும் இடையே பாரிய வித்தியாசம் உள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தெரிவிக்கின்றது.
மேலும், உலகின் இடம்பெயர்ந்த பறவைகளின் முக்கியமான பாதையான மன்னார் வழித்தடத்தில் காற்றாலை விசையாழிகள் நிறுவப்படுவது சுற்றுச்சூழலுக்கு மீள முடியாத தீங்கு விளைவிப்பதாக சிரேஷ்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்தும் அவர்களினால் கரிசனை எழுப்பப்பட்டுள்ளன.
இந்த குறிப்பிடத்தக்க விடயங்கள் காரணமாக, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மொத்தமாக 11 விண்ணப்பங்களை முக்கிய அரச அமைப்புகளிடம் தாக்கல் செய்துள்ளது.
இதில் அமைச்சரவை அலுவலகம், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, நிலையான எரிசக்தி அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, இலங்கை மின்சார சபை, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகிய அரச நிறுவனங்கள் அவற்றில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
விலைமானுக்கோரல் செயன்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டபூர்வத் தன்மை, மதிப்பீடு மற்றும் தேர்வு செயன்முறை, விலை நிர்ணயம் மற்றும் செலவு நன்மைகள், தேவை மற்றும் அபாய மதிப்பீடுகள், முடிவெடுக்கும் செயன்முறை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, காணி கையகப்படுத்துதல் போன்றன பற்றிய தகவல்களே கோரப்பட்டுள்ளன.
இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்கு வருகைதரும் வலசைப் பறவைகளுக்கு இந்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக பாதிப்பு ஏற்படும் என சூழலியலாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இலங்கைக்குள் வலசைப் பறவைகள் பிரவேசிக்கும் பிரதான நுழைவாயிலாக மன்னார் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், வட மாகாணத்திற்கு உரித்தான மன்னார் தீவானது, புவிசார் அரசியல் ரீதியாக உணர்திறன் மிக்கப் பகுதியாகும்.
இது மீனவ சமூகம் வாழும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு காரணமாக இலங்கையின் வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையமானது, பறவைகளுக்கு மாத்திரம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திட்டம் கிடையாது என சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், மன்னார் தீவில் ஏற்கனவே இலங்கை மின்சார சபையினால் காற்றாலை மின் உற்பத்தி நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
வலசைப் பறவைகள் இலங்கைக்குள் வருகைதராத காலப் பகுதியில் சுற்றுசூழல் அறிக்கை தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் அதானி நிறுவனத்திற்கு அனுமதி வழங்க அரச நிறுவனங்கள் செயற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், ரமணி எல்லேபொல தலைமையிலான விசேட குழுவினாலேயே இந்த திட்டத்திற்கான சுற்றாடல் பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பான அறிக்கையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தேவக்க வீரகோனும் மூலிகைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான அறிக்கையை கலாநிதி ஹிமேஷ் ஜயசிங்கவும் நீர் நிலைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான அறிக்கையை டி.ஏ.ஜே.ரன்வலவும் தயாரித்துள்ளனர். எவ்வாறான எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டாலும் இந்த திட்டத்தினை முன்கொண்டு செல்வதே இலங்கை அரசாங்கத்தின் இலக்காகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)