நூர்தீன் மசூரின் முன்மாதிரிகள்: நாகரிக அரசியலின் பிரதான நுழைவாயில்
அஹமட் கபீர்
வட மாகாண மக்களின் அரசியல் பிரதிநிதிகளில் பிரதான இடத்தைப் பிடித்து மறைந்தவர் முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூர். அன்னார் மறைந்து இன்று 12 வருடங்கள் கடந்துவிட்டாலும் (2010.12.02) அவரது பண்புகள் வரலாற்றில் தடம் பதித்திருக்கிறது.
புன்முறுவலுடனும், தயாள மனதுடனும் பழகிய இவர், காலப் போக்கில் மக்கள் தலைவனாகத் தெரிவாகும் அளவுக்கு இங்கிதங்களால் தன்னை உயர்த்தியவர். அரசியல் பிரவேசத்துக்கு முன்னரும் வன்னிப் பிரதேச மக்கள் இவரது மனோபாவங்களால் கவரப்பட்டனர்.
பிரதேசத்தின் பிரபலமிக்க சட்டத்தரணியாகவும், செல்வந்தராகவும் திகழ்ந்தவர் இவரது தகப்பனாரான நூர்தீன். செல்வம் மற்றும் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்தாலும், சாதாரண மக்களதும், வறிய நிலையிலுள்ளவர்களதும் வாழ்வாதாரத்தைப் பற்றியே சிந்தித்த பெருந்தகை நூர்தீன் மசூர்.
இந்தச் சிந்தனைகள் தான் அவரை அரசியலுக்குள் நுழைத்தது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபுடன் பயணிப்பது தான், தான் சார்ந்த வன்னி மக்களுக்கும் பிரயோசனமளிக்கும் என உணர்ந்து 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.
ஆனால், அஷ்ரபுடன் பயணிக்கும் சந்தர்ப்பத்தை இறைவன் அவருக்கு வழங்கவில்லை. அஷ்ரபின் இழப்பால் ஏற்பட்ட முஸ்லிம் சமூக அரசியல் இடைவௌியை நிரப்பும் நல்ல நோக்குடன் இருந்த நூர்தீன் மசூர்,தொடர்ந்தும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பயணித்து மக்கள் பணியை முன்னெடுத்தவர்.
இன நல்லிணக்கப் பிரதியமைச்சராகப் பதவியேற்ற இவர், வடக்கில் வேறுபட்டிருந்த தமிழ், முஸ்லிம் உறவுகளை ஒன்றிணைத்து நல்ல நாகரீகவாதியாகத் திகழ்ந்தார். பின்னர் 2002 முதல் 2004 வரை வன்னிப் புனர்வாழ்வு அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் தான், வடபுல அகதிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு விடிவுகள் கிட்டத் தொடங்கின.
அப்பாவிச் சமூகமொன்று ஆயுதமுனையில் அகதிகளாக்கப்பட்ட துயரம் ஆயுள் வரைக்கும் இவரை, ஆட்கொண்டிருந்தது. இந்நிலையை ஒழிக்கவென ஆயுத அமைப்புடன் ஜனநாயக வடிவில் முயற்சிகள் மேற்கொண்டதுடன், சர்வதேசம் வரை வடபுலத்து முஸ்லிம்களின் பிரச்சினைகளை அம்பலப்படுத்தினார்.
வௌிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட சர்வதேச உறவுகளூடாக ஒரு தொடர்பாடலை ஏற்படுத்தியதால்தான், வடபுல முஸ்லிம்களின் நியாயங்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தன. மீன்பிடி, மீள்குடியேற்றம், கிராமிய கைத்தொழில்களூடாக வன்னி மக்களின் பொருளாதாரப் புரட்சிக்கு அத்திவாரமிட்ட ஆளுமை நூர்தீன் மசூர்.
தனது உழைப்பின் அயராத முயற்சியால், செல்வாக்கின் உச்சத்துக்குச் சென்ற நூர்தீன் மசூருக்கு அவரது மண்ணிலிருந்தே பொறாமையாளர்கள் பெருக்கெடுத்தனர். பதவி ஆசைகளின் பாரிய எதிர்பார்ப்பிலிருந்த சிலர், இவரது பதவியைக் குறிவைத்துச் செயற்பட்ட காலத்தை வன்னி மக்கள் இன்னும் மறப்பதற்கில்லை.
இவ்வாறனவர்களை மறுகணமே மறந்துவிடுவதுதான், நூர்தீன் மசூரின் மானிடப்பண்பாக இருந்தது. எதுவானாலும், சொந்த மாவட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் ஆவலில் செயற்பட்டு, மற்றுமொரு பிரதிநிதியும் வெல்லுமளவுக்கு வியூகம் வகுத்த பெருமைக்குரியவர்.
இவரின் இந்த முயற்சிக்கு அன்று கட்சியின் உயர்பீடத்தில் உச்ச எதிர்ப்பு வௌியிடப்பட்டது. அனைத்தையும் அன்பு, அமைதியால் சாதித்த ஒரு சாத்வீகவாதி நூர்தீன் மசூர்.
ஆனால், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்களால் கிடைத்த நற்பெயரை இவர், ஒருபோதும் அரசியல் மூலதனமாக்கியதில்லை. நன்றி, நல்லுணர்வு தான் இவரது அரசியல் முதலீடுகளாக இருந்தன.
இவ்வுலகை விட்டுப் பிரியும் நியதிக்குள், நாம் எல்லோரும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இந்த நிர்ப்பந்தம் அவரது தவணைக் காலத்தையும் அழைத்து வந்தது. இதனால், "தவணை வந்தால் முற்படுத்தவோ அல்லது பிற்படுத்தவோ மாட்டோம்" என்ற இறைமறைக்கு ஏற்ப, அன்னார் எம்மை விட்டுப்பிரிந்தார்.
இன்றுள்ள அரசியல்வாதிகளுக்கு நூர்தீன் மசூரின் முன்மாதிரிகள் மிகப் பொருத்தமானது. மாற்று சமூகங்களையும் சகோதரர்களாக அணுகி, பவ்வியமாக பழகும் அவரது பக்குவம் தான் வன்னிச் சமூகத்துக்கு இன்று வரைக்கும் வழிகாட்டுவதாக உள்ளது.
எல்லாம் வல்ல இறைவன், அன்னாருக்கு தகுந்த சன்மானம் வழங்கி அவரது ஆத்மாவைப் பொருந்திக் கொள்ளப் பிரார்த்திப்போம். துவே, அவருக்கு நாம் செய்யும் கைங்கர்யமாகும்.
Comments (0)
Facebook Comments (0)