RTI ஆணைக்குழுவின் தீர்ப்பிற்கு எதிரான துறைமுக அதிகார சபையின் மேன் முறையீடு தள்ளுபடி
தகவல் வழங்கலின் போது அமெரிக்க டொலரில் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கட்டணம் அறவிட முடியாது என தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பினை மேன் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியதுடன் குறித்த தீர்ப்பிற்கு எதிராக துறைமுக அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் பொது அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற தகவலுக்கு ஒரு கட்டண எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாறாக, வேறு எந்தக் கட்டணத்தினையும் அதிகார சபையொன்றினால் தனிநபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ அறவிட முடியாது எனவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.
இலங்கை துறைமுக அதிகார சபையின் 2022ஆம் ஆண்டுக்கான கட்டண அட்டவணையின் பிரகாரம் தகவல் கோரிக்கைக்கு அமெரிக்க டொலரில் குறித்த அதிகார சபையினால் கட்டணம் அறிவிடப்படுகின்றமை 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் 4ஆவது உப பிரிவிற்கு இணங்கிச் செல்லவில்லை என தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு முன்னர் தீர்ப்பளித்திருந்தது.
அத்துடன் தகவல் கோரிக்கைக்கு துறைமுக அதிகார சபையின் சொந்தக் கட்டண அட்டவணையினை பயன்படுத்துவது தகவலறியும் சட்டத்திற்கு எதிரானது எனவும் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளரும் ஆர்.டி.ஐ செயற்பட்டாளருமான றிப்தி அலியினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் விண்ணப்பத்திற்கு பதிலளிப்பதற்கான மேலதிக இரண்டு பக்கங்களுக்கு நான்கு அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் 812 ரூபாவும் அதற்கான வரியாக 64 ரூபாவும் 12 சதமும் துறைமுக அதிகார சபையினால் அறவிடப்பட்டிருந்தது.
இந்த அறவீட்டுக்கு எதிராக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் அவர் மேற்கொண்ட மேன் முறையீட்டின் போதே மேற்படி தீர்ப்பு வெளியாகியது. இதற்கு எதிராகவே துறைமுக அதிகார சபையினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
தகவல் அடங்கிய பக்கங்களின் எண்ணிக்கைக்கு பொது அதிகார சபையினால் அவறவிடக்கூடிய கட்டணம் தொடர்பிலேயே இந்த மனு காணப்பட்டது.
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு பிரதிவாதியாகவும் ஊடகவியலாளர் றிப்தி அலி மேன் முறையீட்டு பிரதிவாதியாகவும் கொண்ட இந்த மனு மீதான விசாரணைகள் நீதியரசர் டி.என். சமரக்கோன் முன்னிலையில் இடம்பெற்றது.
பரந்த அனுபவம் கொண்ட இரண்டு தொழில்சார் நீதிபதிகளையும் திறமை நிரூபிக்கப்பட்ட உறுப்பினர்களையும் உள்ளிடக்கியதாக காணப்படுகின்ற இந்த ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட உத்தரவில் எந்தவித சந்தேகமுமின்றி தெளிவு காணப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்டண அட்டவணை 1979ஆம் ஆண்டு முதல் காணப்பட்டலும் வருடாந்தம் அதற்கு தேவையான அமைச்சரின் கட்டாய ஒப்புதலை பெற பொது அதிகார சபை தவறியுள்ளது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
'சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுக்கு' கட்டணம் அறவிடுவது தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள 1998ஆம் ஆண்டுக்கான கட்டண அட்டவணையும் அமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கவில்லை என நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் மற்றும் சட்டத்தரணி சுபுன் திசாநாயக்க ஆகியோர் மேன் முறையீட்டு பிரதிவாதி சார்பில் மன்றில் ஆஜராகினர்.
Comments (0)
Facebook Comments (0)