பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடல்: நீதிமன்ற இணக்கப்பாட்டின் பின்னரும் அமுலுக்கு வராததேன்?

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடல்: நீதிமன்ற இணக்கப்பாட்டின் பின்னரும் அமுலுக்கு வராததேன்?

றிப்தி அலி

 

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு பணம் அறவிடுவதற்கு உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டினை அமுல்படுத்த அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சுமார் இரண்டு மாதங்கள் கழிந்தும் குறித்த இணக்கப்பாட்டினை அமுல்படுத்த பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆகியன அரச நிறுவனங்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமைக்கு சூழலியலாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் 10(1)ஆ பிரிவின் கீழ் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவரினால் 2008ஆம் ஆண்டு  ஒக்டோபர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 26ஆம் இலக்க பணிப்புரையின் பிரகாரம், பொருட்களை விற்பனை செய்யும் பொழுது வியாபாரிகளினால் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் எந்த வகையான கொண்டு செல்லும் பைகள் அல்லது உறைகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் எதுவும் விதிக்க முடியாது.

'நுகர்வோரின் உரிமை' என்ற அடிப்படையிலேயே இந்த பணிப்புரை தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவிக்கின்றது.

இதனால், நாட்டில் தற்போது பைகளின் பாவனை அதிகரித்துள்ளதாகவும் இதன் மூலம் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து காலநிலை மாற்றத்திற்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 12 நிமிட ஆயுட் காலத்தினை மாத்திரம் கொண்ட 20 மில்லியன் பொலித்தீன் பைகள் தினந்தோறும் குப்பையில் வீசப்படுவதாக சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே தெரிவிக்கின்றார்.

இதனால், வன விலங்குள் உயிரிழப்பதுடன் மனித சுகாதார சீர்கேடுகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் தாக்கங்களும் ஏற்படுகின்றன. வெளியேற்றப்படும் பொலித்தீன் பைகள், கழிவுநீரில் கலப்பதனாலும் கால்வாய்கள் மற்றும் வாவிகள் அடைக்கப்படுவதனாலும் பல்வேறு உயிரினங்கள் அழிவடைவதுடன் 1,000 ஆண்டுகள் வரை பெருங்கடல்கள் மற்றும் நிலப்பரப்புகளை அழிக்கும் நச்சு மைக்ரோ பிளாஸ்டிக்களாக சிதைவடைந்து போகின்றன.

இவ்வாறான நிலையில், பொலித்தீன் பைகளின் உற்பத்தியினையும் பாவனையினை குறைக்கும் நோக்கில் சாத்தியமான நடைமுறைகளை உருவாக்கவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் ஏனைய தரப்பினரினால் எடுக்கப்படும் முயற்சிகளை இலகுபடுத்தும் பொருட்டு தற்போதுள்ள வர்த்தமானி அறிவித்தல் அல்லது சட்டங்களை திருத்தவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே ஆகியோரினால் சட்டத்தரணி சமாதி ஹன்சானியின் ஊடாக 2021ஆம் ஆண்டு ஜுலை மாதம் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அடிப்படை உரிமை மனுவின் பிரதிவாதிகளாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், சுற்றாடல் அமைச்சர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகிய தரப்பினர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்களை வாங்கும் போது நுகர்வோருக்கு கடைகளில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளினால் சுற்றுச்சூழலிற்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும், இதற்கு கட்டணம் வசூலித்தால், அவற்றின் பயன்பாடு குறைவடையும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடும் முறை வெளிநாடுகளில் பாரியளவில் வெற்றியளித்துள்ளதுடன் அந்நாடுகளில் பொலித்தீனின் பாவனை குறைவடைந்துள்ளதாகவும் இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல், பொலித்தீன் பைகளுக்கு அறிவிடப்படுகின்ற கட்டணங்களை வைத்து சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு வினைத்திறனான செயற்த்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை,  'நுகர்வோர் உரிமை' என்ற அடிப்படையில் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு பணம் அறவிடுவதில்லை என்று உயர் நீதிமன்றத்தில் இணக்கம் காணப்பட்ட விடயம் இந்த மனு மீதான விசாரணை இடம்பெற்ற சமயத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மனுவினை தாக்கல் செய்தவரையும் இந்த மனுவின்  பிரதிவாதியாக உள்ளடக்குமாறு நீதிமன்றம் அறிவுத்தியது. இதன் பிரகாரம், மன்றில் ஆஜராகிய குறித்த நபரின் சட்டத்தரணி, சூற்றுச்சுழலை பாதுகாப்பதற்காக  பொலித்தீன் பைகளிற்கு கட்டணம் அறவிடுவதற்கு எந்த எதிர்ப்புமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், இந்த மனு மீதான விசாரணைகள் கடந்த மார்ச் 28ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திருமதி அவந்தி பெரேராவினால் இந்த அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குறித்த மனு இணக்கப்பாட்டுடன் முடிவுக் கொண்டுவரப்பட்டது.

இதனுடன் தொடர்புடைய தரப்பினர்கள் குறித்த இணக்கப்பாடு தொடர்பான ஆவணத்தில் கையொழுத்திட்டுள்ளனர். எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது போன்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் இன்னும் மீளப்பெறப்படவில்லை.

'இந்த இணப்பாடு தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவே நாங்கள் அறிந்துகொண்டோமே தவிர இது தொடர்பில் எங்களுக்கு இன்று வரை நீதிமன்றத்தினால் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை' என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டப் பிரிவினைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சட்டத்தரணியொருவர் தெரிவித்தார்.

எமது அதிகார சபைக்கு இந்த விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை எம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

'இந்த இணக்கம் தொடர்பில் நீதிமன்ற நாளேடுகளில் பார்த்த போதும் அது தொடர்பான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கப்படும் பட்சத்தில், எமது அதிகார சபையின் பணிப்பாளர் சபையின் அனுமதியுடன் குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற முடியும்' என சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உயர் நீதிமன்றத்தின் இந்த இணக்கப்பாடு தொடர்பாக அண்மையில் நடைபெற்ற சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் இடம்பெற்ற இக்குழுவின் கூட்டத்தில் சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து உரிய நடவடிக்கையை எடுப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை என்பவற்றின் அதிகாரிகளது முன்னாயத்தம் தொடர்பில் கண்டறிவதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பின் பிரதி கிடைக்கும் வரை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய முடியாமல் இருப்பதாக இதன்போதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய பொலித்தீன் பைகளுக்கான கட்டணம் உற்பத்தியாளர்களிடமிருந்தா அல்லது பாவனையாளர்களிடமிருந்தா அறவிடுவது என்பது தொடர்பில் சிக்கல் காணப்படுவதாகவும் இக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.

வர்த்தக நிலையங்களில் இலவசமாக வழங்கப்படுகின்ற பொலித்தீன் பைகளுக்கு ஒரு கட்டணம் அறவிடுவதன் மூலம் பாவனையாளர்கள் பொலித்தீன் பைகள் கொள்வனவு செய்வதை தவிர்ந்து வீடுகளிலிருந்து உறைகளை கொண்டுவரும் பழக்கத்தை ஏற்படுத்துவதே உயர் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக ஏற்படுத்த வேண்டிய சமூகத் தாக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

"கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் போது உக்காத பொலித்தீன் பைகளே அதிகம் காணப்படுகின்ற விடயம் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. இவ்வாறான நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்ட இணக்கப்பாட்டினை வரவேற்கின்றோம்" என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் வெணுர பெர்னான்டோ தெரிவித்தார்.

எனினும், பாவனையாளர் அலுவல்கள்; அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறாத வரை எமது அதிகார சபையினால் இந்த விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைளை எமது திணைக்களம் உடனடியாக மேற்கொள்ளும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உறுதியளித்தார்.  

பொலித்தீன் பைகளின் பாவனையினைக் குறைப்பது தொடர்பில் பாரிய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் தற்போது பேச்சு நடத்தி வருகின்றேன். இது தொடர்பில் சாதகமான பதில்கள் விரைவில் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு இதுவரை தீர்ப்பின் பிரதி கிடைக்கப் பெறவில்லை என்பதை நிராகரித்த சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே, உயர் நீதிமன்றத்தில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டினை  பிரதியினை ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும மற்றும் சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் எம்முடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் வர்த்தமானி அறவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மீளப் பெற்றால், மத்திய சுற்றாடல் அதிகார சபை அடுத்த கட்ட நடவடிக்கைளை உடனடியாக முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கட்டண அறவீட்டினை செயற்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியமொன்று திறைசேரியின் அனுமதியுடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் உருவாக்கப்பட வேண்டும் என ஹேமந்த விதானகே கூறினார்.

ஒரு பொலித்தீன் பைக்கான கட்டணமாக ஒரு ரூபாவினை அறவிட்டால், ஒரு நாளைக்கு சுமார் 20 மில்லியன் ரூபா நிதி இந்த நிதியத்திற்கு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

'நாட்டில் தற்போது பாரிய பிரச்சினையாகவுள்ள கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்ப்பதற்;கு இந்த நிதியை பயன்படுத்த முடியும்' என ஹேமந்த விதானகே மேலும் கூறினார்.

காலநிலை மாற்றத்திலிருந்து இலங்கையினை பாதுகாப்பதற்கு பொலித்தீன் பைகளின் பாவனையினை குறைக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும். இதற்குத் தேவையான ஒரு பொறிமுறையாக பொலித்தீன் பை பாவனைக்கு கட்டணம் அறிவீடல் காணப்படுகின்றது.

இந்த பொறிமுறையினை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது சம்பந்தப்பட்ட தரப்பினரின் பொறுப்பாகும்.