'சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகளை நம்ப வேண்டாம்'
-றிப்தி அலி-
கொரோனா வைரஸினால் பரப்பப்படும் கொவிட் 19 நோயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு உயர்ந்த பட்ச முயற்சிகளை சுகாதார அமைச்சு பல்வேறு வழிகளிலும் முன்னெடுத்து வருகின்றது.
கொரோனா சவாலை ஆங்கில மருத்துவ முறையினால் மாத்திரமன்றி ஆயுர்வேத மருத்துவத்தினாலும் முறியடிக்கலாமா என்பதற்கான தேடல்களையும் அமைச்சு முடக்கியுள்ளது.
இதற்கமைய ஆயுர்வேத திணைக்களத்தினால் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் சதுர குமாரதுங்க தெரிவிக்கிறார்.
"பண்டைய காலத்தில் கொரோனா போன்ற பல்வேறு விதமான நோய்கள் காணப்பட்டுள்ளன. இதற்கான மருந்துகள் ஆயுர்வேத பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறித்த நோய்களுக்கு காணப்பட்ட அறிகுறிகளே தற்போது கொரோனா வைரஸினால் பரப்படும் நோய்க்கும் காணப்படுகின்றன. இதனால் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளை இந்த நோய்க்கும் பயன்படுத்தலாம் என ஆயுர்வேத வைத்தியர்கள் நம்புவதாக" ஆணையாளர் குறிப்பிட்டார்.
சீனாவின், வூஹான் நரத்தில் இந்த நோய் உருவான போது, இந்த நோய் தொடர்பில் ஆராய ஆயுர்வேத வைத்தியர்களை உள்ளடக்கிய குழுவொன்று ஆயுர்வேத திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டது.
இந்த குழுவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டியொன்று கடந்த கடந்த ஜனவரி 28ஆம் திகதி வெளியிடப்பட்டது. வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் என வௌ;றோக தயாரிக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டி ஆயுர்வேத திணைக்களத்தின் இணையத்தம் மற்றும் முகநூல் பக்கம் ஆகியவற்றில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அதுபோன்று, மாகாண ஆயுர்வேத ஆணையளார்களின் ஊடாக சமூக வைத்திய அதிகாரிகளுக்கும் இந்த வழிகாட்டி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த வழிகாட்டி தொடர்பில் மக்கள் மத்தியில் ஊடகங்களின் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கொரோனா நோய் தொடர்பில் ஆராய்வதற்காக சுதேச மருத்துவ துறையினரை உள்ளடக்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் விசேட ஆயுர்வேத வைத்தியர்கள் ஆகியோர் உள்ளடக்கியுள்ளனர்.
இந்த குழுவினால் ஆயுர்வேத மருத்துவ அடிப்படையில் இந்த நோய்க்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான வழிகாட்டியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் மற்றும் கொரோனா என அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கும் வழங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் வகையிலான விசேட உணவுகள் மற்றும் பொருத்தமான குடிபானங்கள் தொடர்பில் இந்த வழிகாட்டியில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
சுகாதர அமைச்சின் செயலாளர் ஊடாக கொரேனோ ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தின் தலைவரான இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"சுகாதார அமைச்சினால் ஆயுர்வேத வைத்திய சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டிலுள்ள அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளும் விடுமுறை மற்றும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக" ஆயுர்வேத ஆணையாளர் கூறினார்.
தனிமைப்படுத்தல் (Quarantine) சட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு ஆயுர்வேத வைத்தியர்களினால் ஒருபோதும் சிகிச்சையளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த நோயிற்கான நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் வகையினால் மாத்திரைள் மற்றும் குடிபானங்கள் ஆகியவற்றினை ஆயுர்வேத வைத்தியர்கள் சிபாரிசு செய்யலாம் என ஆணையாளர் கூறினார்.
"கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் வைத்தியர்களின் சிபாரிசின்றி எந்தவிதமான மருந்து வகைகளையும் பயன்படுத்த முடியாது" என அவர் தெரிவித்தார்.
குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருத்துவம் எனக் கூறி இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பல்வேறு மருத்துவ முறைகள் தெரிவிக்கப்படுகின்றன. இதனை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்' என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
"இது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் இது உடலுக்கு தீங்கும் விளைவிக்கும். இவ்வாறு சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் தேவையற்ற பிரசாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக ஆயுர்தே சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்" என ஆயுர்வேத ஆணையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா சர்ச்சையினை அடுத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட விசேட குடிபானங்களை தயாரித்து வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இரண்டு மணித்தியலாங்களுக்கு ஒரு தடவை ஆயுர்வேத வைத்தியசாலைகளை சுத்தம் செய்யுமாறு ஆயுர்வேத திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டிகளை பின்பற்றி மதித்து நடக்கும் பட்சத்தில் இந்த நோய் தொடர்பில் எந்தவித அச்சமும் அடைய தேவையில்லை என்ற ஆணையாளர், இதன் ஊடாக எமது நாட்டிலிருந்து விரைவாக இந்த நோயினை ஒழிக்க முடியும் என்றார்.
Comments (0)
Facebook Comments (0)