கல்முனை பொது நூலகத்தை திறன்பட இயக்க மாநகர சபை முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை

கல்முனை பொது நூலகத்தை திறன்பட இயக்க மாநகர சபை முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை

நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர பிரதம நூலகமாக இருந்துவரும் ஏ.ஆர். மன்சூர் நூலகம் அறிவீனர்களால் கவனிப்பாரற்று குப்பை மேடாக காட்சி தருகின்றது.

1977 முதல் 1994 வரை கல்முனையில் உள்ளூராட்சி என்றாலும், பாராளுமன்றம் என்றாலும் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களது கண்காணிப்பிலேயே இருந்தது. 1980 முதல் 1983 ஆகிய காலத்துள் கல்முனை சந்தை, கல்முனை வாசிக சாலை என்பன கல்முனை நகரை அழகு படுத்தி நின்றன.

அதன் வெளிப்பாடாக முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீது, பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த வாசிகசாலையை திறந்து வைத்தார். அக்காலத்தில் அந்த நூலகத்தில் மிகவும் பெறுமதியான நூல்கள் இருந்தன.

இப்போது மூட்டைகளில் அறிவுநூல்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ.ஆர். மன்சூரின் சேவைகளை பாராட்டி இந்த வாசிகசாலைக்கு அவரது பெயரே வைக்கப்பட்டது.

1994 முதல் கல்முனையின் உள்ளுராட்சி, முஸ்லிம்களது விடுதலை, உரிமை, அபிவிருத்தி என்பவைகளை நோக்காக கொண்டு நிர்வகிப்பதற்கான மக்கள் ஆணையை பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரம் செய்கின்றது.

ஒரு அறிவுள்ள சமுகத்தின் உயிராக விளங்கும் வாசிக சாலை கட்டிடம் மாநகர நிர்வாகத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வாசகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை முதல்வர், கல்முனை பிரதி முதல்வர், ஆணையாளர், நிர்வாக உத்தியோகத்தர் போன்றோரின் அலுவலகங்கள் அடங்களாக கல்முனை மாநகர சபையின் நிர்வாகம் இடம்பெற்றுவரும் வளாகத்தில் அமைந்துள்ள இந்த வாசிகசாலையை கூட ஒழுங்காக நிர்வாகிக்க முடியாத அளவில் கல்முனை மாநகர சபை நிர்வாகம் இயங்குவதாகவும், இது தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் யாரும் கணக்கில் எடுக்காமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் வாசகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இது விடயமாக சிறந்த தீர்வை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக பெற்றுத்தருமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.