பலாலி விமான நிலையத்தினை மீள ஆரம்பிக்க நடவடிக்கை
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளிடம் இன்று (14) செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுற்றுலாத் துறையின் பங்குதாரர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று கலந்துரையாடிய போதே மேற்கண்ட கோரிக்கையினை விடுத்தார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) ஆண்டு முழுவதும் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகவும், இதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் திட்டத்தைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டளவில் இலங்கை 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு 3.5 பில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்க்கும் நிலையில், சுமார் 1.5 மில்லியன் உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறு அனைத்து பங்குதாரர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
ஹோட்டல் துறையில் உள்ள பல ஊழியர்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டதாலும், நாட்டில் உள்ள ஹோட்டல் கல்லூரிகளுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாலும் இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடுமாறு சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் கலாச்சாரங்களில் தங்களை இணைதுக்கொள்ளவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பிரதமர் விவாதித்தார்.
உலகெங்கிலும் உள்ள அதிகமான எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் காலி இலக்கிய விழாவை மேம்படுத்துவதற்கு பொதுத்துறை சுற்றுலாத்துறை அதிகாரிகள் உழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, இலங்கையில் தற்போதுள்ள சுற்றுலாத் தடைகளை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை வற்புறுத்துவதற்கு இராஜதந்திர சமூகத்துடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்திய சுற்றுலா பயணிகளை மையமாக வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச பிரபலங்களுடன் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலா அமைச்சின் பிரதிநிதிகள், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சபை, இலங்கை ஹோட்டல் முகாமைத்துவம் மற்றும் சுற்றுலா நிறுவனம், இலங்கை ஹோட்டல் சங்கம், இலங்கை உள்நாட்டு சுற்றுலா ஆர்வலர்கள் சங்கம், சிலோன் ஹோட்டல் பள்ளி பட்டதாரிகள் சங்கம், இலங்கை நிபுணத்துவ கருத்தரங்குகள் மற்றும் திருவிழாக்கள், அமைப்பாளர்கள் சங்கம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவு ஆகியவை இந்த கலந்துரையாடலில் பங்கேற்றன.
Comments (0)
Facebook Comments (0)