பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல: மஹிந்த
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இனவாத கட்சியொன்று அல்ல என்பது தெளிவாகக் காணப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எனினும், தமது கட்சி இனவாத கட்சி என முத்திரை குத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நாட்டிற்காக பணியாற்ற தாயாராகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்.
பேருவளை பிரதேசத்தில் இன்று (10) வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவடைந்த காரணத்தினால் தற்போது நாடளாவிய ரீதியிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியினர் திக்கற்ற நிலையில் காணப்படுகின்றனர்.
1946ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியினுள் இதற்கு முன்னர் சிற்சில சந்தர்ப்பங்களில் பிளவுகள் ஏற்பட்ட போதிலும், தற்போது எந்த வகையிலும் சரிசெய்ய முடியாத வகையில் கட்சி பிளவடைந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது புதிய அரசியல் தலைமைத்துவமொன்றை ஏற்படுத்தியுள்ளதால், நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியினருக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
தற்போது ஐக்கிய தேசிய கட்சி கிராம மட்டத்தில் அரசியல் கூட்டமொன்றை ஏற்பாடு செய்வதற்கேனும் முடியாததொரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமது கையாலாகாத நிலையை மறைத்துக் கொள்வதற்காக அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றி பல்வேறு தவறான கருத்துக்களை பிரசாரம் செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர்.
தமது அரசாங்கத்தின் கீழ் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை பிரதேச மட்டத்திலும் செயற்படுத்தியமை காரணமாக வடக்கிலும், நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதேசங்களிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் குடியேறுவதற்கு வாய்ப்பு கிட்டியதுடன், எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள எமது அரசாங்கத்தின் மூலம் இந்த வாய்ப்பு மீண்டும் மக்களுக்கு ஏற்படுத்தப்படும்" என்றார்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வேட்பாளர் பியல் நிஷாந்த உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
Comments (0)
Facebook Comments (0)