'இம்முறை இலங்கையர்களுக்கும் ஹஜ் செய்ய வாய்ப்பில்லை'

'இம்முறை இலங்கையர்களுக்கும் ஹஜ் செய்ய வாய்ப்பில்லை'

ஏ.ஆர். ஏ.பரீல்

இலங்கையிலிருந்து இவ்வருடம் ஹஜ் யாத்திரையை அனுமதிப்பதற்கான வாய்ப்பில்லை என இலங்கை ஹஜ் குழு தனது உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும் என அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் அஹ்கம் உவைஸ் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.

சவூதி இவ்வருட ஹஜ்ஜை அனுமதித்தாலும் இந்தியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, புரூணே போன்ற நாடுகள் - தங்கள் நாட்டின் நிலைமை மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி ஹஜ்ஜிற்கு அனுமதிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

என்றாலும் சவூதி அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமான அறிவிப்பொன்றினை வெளியிடவில்லை. சவூதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பினையடுத்தே இது தொடர்பில் இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

"சவூதி அரேபியாவின் விமான நிலையமும், இலஙகை விமான நிலையமும் ஆகஸ்ட் 1ஆம் திகதியே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்வருட ஹஜ்ஜுக்கான சாத்தியமில்லை. மேலும் இலங்கை மற்றும் சவூதி அரேபியா என்பன ஒரே அளவிலான சனத்தொகையைக் கொண்ட நாடுகள்.

ஆனால் இலங்கையை விட சவூதி அரேபியா கொவிட் 19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 1,900க்கு இடைப்பட்டவர்களே இந்த வைரஸ் தொற்றுக் குள்ளாகியுள்ளார்கள். ஆனால் சவூதி அரேபியாவில் தினமும் சுமார் 1,800 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். இறப்பு வீதமும் அதிகரித்துள்ளது.

இவ்வருடம் மக்காவாசிகளுக்கு மாத்திரமே ஹஜ் அனுமதிக்கப்படுமெனவும் தெரிய வருகிறது. இந்நிலையில் எமது நாட்டில் இவ்வருட ஹஜ் கடமைக்காக ஹஜ் முகவர்களிடம் முற்கொடுப்பனவு வழங்கியுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் தங்களது கொடுப்பனவுகளை முகவர் நிலையங்களிடமிருந்து மீளப்பெற்றுக் கொள்ளும் படி வேண்டப்படுகிறார்கள்.

மேலும் எமது நாட்டில் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தலொன்று நடைபெறவுள்ளது. ஆகஸ்ட்1 ஆம் திகதி ஹஜ் பெருநாளாகும் . இந்நிலைமையை கருத்திற் கொண்டு ஹஜ் கடமைக்கு சவூதியில் அனுமதி வழங்கப்பட்டாலும் இலங்கையிலிருந்து பெரும்பாலானோர் ஹஜ் கடமையை மேற்கொள்வது சாத்தியமில்லை.

இலங்கையர்கள் இவ்வருட ஹஜ் கடமையை மேற்கொள்ள வாய்ப்புக்கிட்டாது. எனினும் சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பினை அடுத்து இலங்கை அரச ஹஜ் குழு தனது உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிடும்" என்றார்.