SLBC முஸ்லிம் சேவையின் பொறுப்பாளர் இராஜினாமா
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன (SLBC) முஸ்லிம் சேவையின் பொறுப்பாளர் பதவியிலிருந்து ஸனூஸ் முஹம்மத் பெரோஸ் இராஜினாமாச் செய்துள்ளார்.
முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், கடந்த டிசம்பர் 7ஆம் திகதியிடப்பட்ட இராஜினாமா கடிதத்தினை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவரிடம் கையளித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி முதல் முஸ்லிம் சேவையின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக இராஜினாமாக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினை வினைத்திறனாக முன்னெடுக்கும் நோக்கில் தகவல் மற்றும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் ஆலோசனை சபையொன்று கடந்த டிசம்பர் 9ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சரூக், பிரபல வாத்தகரும் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல் உப தலைவருமான முஸ்லிம் சலாஹுத்தீன், பிரபல வர்த்தகரும் கண்டி லைன் பள்ளிவாசல் தர்மகர்த்தாவுமான அப்ஸால் மரிக்கார், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர் மற்றும் கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவரும் வக்பு சபை உறுப்பினருமான மௌலவி பஸ்லுர் ரஹ்மான் ஆகியோர் இந்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களாவார்.
இந்த நிலையிலேயே, முஸ்லிம் சேவையின் பொறுப்பாளர் பதவியிலிருந்து சனுஷ் முஹம்மத் பெரோஸ் இராஜினாமாச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டின் பிரபல உலமாக்களான மௌலவி யூசுப் முப்தி, மௌலவி அப்துல் ஹாலிக், அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் மற்றும் மௌலவி முர்ஷித் முழப்பர் ஆகியோரின் உரைகளுக்கும் ஜும்ஆ பிரசங்கத்திற்கும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கூட்டுத்தாபன தலைவரின் உத்தரவிற்கமையவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் மேற்படி உலமாக்களின் நிகழ்ச்சிகளையோ, உரைகளையோ ஒலிபரப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தயாரிப்பாளர்களுக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் சேவையின் பொறுப்புதாரியினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், "குறித்த உலமாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் நீக்கப்படும்" என புதிய ஆலோசனை சபை உறுப்பினரான பணிப்பாளர் எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)