கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு

கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் அமைச்சரும் பிரதமரின் மட்டு. – அம்பாறை இணைப்பாளரான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கபினை அண்மையில் தனித் தனியாக சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போதே கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி தொடர்பில் இவர்களினால் இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்த இரு சந்திப்புக்களிலும் இலங்கையுடனான நீண்ட அபிவிருத்தி பங்குடைமையை பேணுவதற்கான  இந்தியாவின் உறுதிப்பாட்டினை பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப் வலியுறுத்தியிருந்தார்.

பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மாகாண சபைகள் மற்றும் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடினர்.

இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புக்கள், கல்வி மற்றும் புலமைப்பரிசில் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் எதிர்கால அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது விநாயகமூர்த்தி முரளிதரன் எடுத்துரைத்துள்ளார்.

மாகாண சபை மற்றும் 13ஆவது திருத்தத்தினை  முழுமையாக அமுல்படுத்துதல் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழி அர்த்தப்புஷ்டியான பரவலாக்கம் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதனை பிரதி உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.