குப்பைக்குள் சென்ற பெருந்தொகைப் பணம் மீட்பு; கல்முனை நகர மண்டப வீதியில் சம்பவம்
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டில் இருந்து ஒப்படைக்கப்பட்ட குப்பைப் பொதியினுள் தெரியாமல் சென்றிருந்த 150,000 ரூபா பணம், அவ்வீட்டு உரிமையாளருக்கு மீளக்கிடைத்த சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22) கல்முனை நகர மண்டப வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டு உரிமையாளர் இன்று தனது தங்க ஆபரணமொன்றை வங்கியில் அடகு வைத்து, 150,000 ரூபா பணம் வந்துள்ளார். அதேநேரம் திண்மக்கழிவுகளை சேகரிக்கும் வாகனம் வந்தபோது குப்பையோடு குப்பையாக பணமும் தெரியாமல் குப்பைப்பொதிக்குள் போயுள்ளது.
அக்குப்பைப்பொதி அவ்வாகனத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாகனம் சென்று நீண்ட நேரத்தின் பின்னர் இவ்விடயம் உணரப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதி திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
"அவர் உடனடியாக செயற்பட்டு, வாகன சாரதி மற்றும் ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்ட அனைத்து கழிவுக் குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து, பணத்தை தேடிக்கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார்" என மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார்.
"இந்த செயற்பாட்டின் காரணமாக கல்முனை மாநகர சபைக்கு நற்பெயரை ஈட்டித்தந்த குறித்த மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்களை பாராட்டுவதாகவும்" அவர் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)