ஹஜ் கோட்டாக்களை பங்கீடுவதற்கான நேர்முகப் பரீட்சையினை மீண்டும் நடத்துமாறு உத்தரவு
றிப்தி அலி
ஹஜ் கோட்டாக்களை பங்கீடு செய்வதற்கான நேர்முகப் பரீட்சையினை மீண்டும் நடத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் 2013ஆம் ஆண்டு உயர் நீதின்மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட ஹஜ் அல்லது உம்ரா வழிகாட்டினையினை அடிப்படையாகக் கொண்டு இந்த நேர்முகப் பரீட்சையினை முன்னெடுக்குமாறும் நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக வேண்டி ஹஜ் முகவர்களிடமிருந்து புதிதாக விண்ணப்பம் கோரவும், ஜனவரியில் நேர்முகப் பரீட்சையினை மேற்கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா அரசாங்கத்தினால் 2025ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட 3,500 ஹஜ் கோட்டாக்கள் 88 ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு கடந்த ஓக்டோபர் 28ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதில் ஆகக்கூடிய 96 புள்ளிகளைப் பெற்ற ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு 75 கோட்டாக்களும் ஆகக் குறைந்த 52 புள்ளிகளைப் பெற்ற ஹஜ் முகவர் நிறுவனத்திற்கு 15 ஹஜ் கோட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் முதல் ஆறு அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு 75 ஹஜ் கோட்டாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த ஹஜ் கோட்டா பங்கீட்டுக்கு எதிராக 14 ஹஜ் முகவர்கள் இணைந்து உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதற்கு மேலதிகமாக நீதிமன்றத்தினை அவமதித்ததாக தெரிவித்து மேலும் இரண்டு மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர், புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் நேர்முகப் பரீட்சை நடத்திய குழுவின் தலைவர் உள்ளிட்டோர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் முன்னெடுத்திருந்தது. இவ்வாறான நிலையிலேயே கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விசாரணைகளின் போது இரு தரப்பினர்களினாலும் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்தே ஹஜ் கோட்டாக்களை பங்கீடு செய்வதற்கான நேர்முகப் பரீட்சையினை மீண்டும் நடத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)