பாரிய பரிசுத் தொகைகளுடன் சவூதி தூதரகம் நடாத்திய அல்குர்ஆன் மனன போட்டி
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம், புத்த மத, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பிலான முதலாவது அல் குர்ஆன் மனனப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் இந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றன.
இலங்கையின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாகாணங்களைச் சேர்ந்த போட்டியாளர்களின் பங்கேற்புடன், இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று, கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள மூவன்பிக் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் நிறைவு விழா இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் அனுசரணையில் கடந்த திங்கட்கிழமை மாலை கொழும்பில் உள்ள ஷங்கரிலா ஹோட்டலில் நடைபெற்றது.
ஆண்களுக்கும் பெண்களுக்குமாக வெவ்வேறாக முழுக் குர்ஆன், 20 ஜுஸ்உக்கள், 10 ஜுஸ்உக்கள், 5 ஜுஸ்உக்கள் என 4 பிரிவுகளாக இப்போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.
இப்போட்டியில் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரபு மத்ரஸாக்களிலும், ஹிப்ழ் மத்ரஸாக்களிலிலும் கல்வி கற்கும் இலங்கையின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 1,500 போட்டியாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 240 போட்டியாளர்களுக்கு இறுதிச் சுற்று இடம்பெறறது.
அவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் ஆண்களிலிருந்தும் பெண்களிலிருந்தும் வெவ்வேறாக மூவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 24 பேர் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
அதிகூடுதல் பரிசாக 823,000 ரூபாவும் குறைந்த பரிசாக 83,000 ரூபாவும் வழங்கப்பட்டன. இலங்கையில் அல்குர்ஆன் மனன போட்டி ஒன்றில் இவ்வாறு பாரிய பரிசுத் தொகை வழங்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
கண்பார்வையை இழந்த புத்தளத்தைச் சேர்ந்த மாணவி அஷ்பா நான்காம் பிரிவில் முதலாம் பரிசைப் பெற்றமை நிகழ்வில் அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.
இவ்வைபவத்தில், சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி உரையாற்றுகையில், சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சஊத் ஆகியோரின் தலைமையின் கீழ், புனித அல் குர்ஆன் பிரதிகளை அச்சிடுதல், உலகளாவிய ரீதியில் அதனைக் கற்பிப்பவர்கள் மற்றும் அதனை மனனம் செய்வோர்களை கெளரவித்தல் போன்ற விடயங்களில், சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை விளக்கினார்.
அத்தோடு, சில தீவிரவாதிகளால் புனித அல்குர்ஆன் பிரதிகளை எரித்த சம்பவம் தொடர்பாக சவூதி அரேபிய இராச்சியம் மற்றும் இலங்கைக் குடியரசு உட்பட உலகின் சில நாடுகளால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது உரையில், இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அல் குர்ஆன் மனனப் போட்டி போன்ற போட்டிகளை நடத்துவது மிகவும் முக்கியமானது என்றும், அதனை ஆழ்ந்து கற்பது நல்லொழுக்கத்தையும், மதப்பற்றையும் விதைக்க உதவுவதோடு, பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சிறந்த சமூக வாழ்வொன்றை ஏற்படுத்த உதவும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன் பௌத்த பெரும்பான்மையினர் ஆரம்பத்தில் இருந்தே முஸ்லிம்களுடன் நட்புறவைப் பேணி அவர்களுடன் இணைந்து வாழ்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அவ்வாறே, இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுக்கும் சவூதி அரேபிய அரசுக்கும் நன்றிகளைத் தெரிவித்ததோடு, இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் சுட்டிக்காட்டினார்.
சவூதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் பிரதிநிதி பத்ர் அல்-அனஸி உரை நிகழ்த்துகையில், இப் போட்டியையும் அதன் நிறைவு விழாவையும் வெற்றிகரமாக நிறைவடையச் செய்வதில் உதவிய அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், உலமாக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)