Lockdown காலப் பகுதியில் மின்சார கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும்?

Lockdown காலப் பகுதியில் மின்சார கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும்?

மின் மானி வாசிப்பில் ஏற்படும் தாமதம், மின் பாவனையாளர்களின் மின்பட்டியல் கணிப்பீட்டில் எந்த விதமான பாதிப்பையோ, கட்டண அதிகரிப்பையோ ஏற்படுத்தாது
என இலங்கை மின்சார சபை இன்று (20) திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளரொருவர் விடியல் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

"சாதாரனமாக வீட்டு மின் பாவனைக்கான மாதாந்த மின் பட்டியல் ஒரு மாத (30 நாட்கள்) இடைவெளியில் கணக்கிடப்படுகிறது. இதன் பெருட்டு மின்சார சபையின் ஊழியர்கள் மாதம் தோறும் பாவனையாளர்களின் வீடுகளுக்கு வருகைதந்து, மின் மானி வாசிப்புக்களை பெற்று, அந்த மாதத்திற்கு உரிய மின் பட்டியலை விநியோகிப்பர்.

தற்போது நிலவும் அசாதாரன சூழ்நிலையால், எமது ஊழியர்கள் குறித்த கால இடைவெளியில் பாவனையாளர்களின் வீடுகளுக்கு சென்று மின் மானி வாசிப்பை பெற்று, பட்டியலை விநியோகிக்க முடியாத நிலை நிலவுகிறது.

இதனால் இறுதியாக மின் வாசிப்பை பெற்ற தினத்திலிருந்து 30 நாட்களுக்கு மேல் கடந்தும், இதுவரை அடுத்த மாதத்திற்கான மின்பட்டியலை விநியோகிக்க முடியாத நிலை உள்ளது.

தற்போதைய நிலமை சீரானதும், மின்சார சபை ஊழியர்கள் வழமை போன்று பாவனையாளர்களின் வீடுகளுக்கு வருகைதந்து மாத மின்பட்டியலை விநியோகிப்பர். இதன்போது புதிய மின் வாசிப்புக்கான காலம் ஒரு மாத கால இடைவெளியை தாண்டி இருந்தாலும், அது பாவனையாளர்களின் மின்பட்டியல் கணிப்பீட்டில் எந்த விதமான பாதிப்பையோ, கட்டண அதிகரிப்பையோ ஏற்படுத்தாது.

மாதத்திற்குரிய மின்சார விதிப்பனவு படிகளின் அலகுகள், நாட்களின் எண்ணிக்கைக்கு நேர் விகித சாமானாக கணிப்பிடப்படுவதால், உங்களின் மின்பட்டியல் கட்டணத்தில் எதுவித அசாதாரன அதிகரிப்பும் ஏற்படாது.

உதாரனமாக, சாதாரனமாக 30 நாட்கள் இடைவெளியில் உங்கள் வீட்டு மின்சார பாவனையின் அளவு 150 அலகுகுள் என்றால், உமது மாத மின்கட்டணம் ரூபா 3,043.50 ஆக கணிப்பிடப்படும்.

அதுவே மின் வாசிப்பை 30 நாட்களில் பெற்றுக்கொள்ள முடியாமால், 60 நாட்கள் இடைவெளியில் உங்கள் வீட்டு மின் பாவனையின் அளவு 300 அலகுகளாக இருக்கும் என்றால், உமது மின்கட்டணம் ரூபா 6,087.00 ஆக கணிப்பிடப்படும். இது 60 நாட்களுக்குமான (இரண்டு மாதங்களுக்குமான) மொத்த கட்டணமாகும்.