விரைவில் அரபுக் கல்லூரிகளுக்கு பொதுவான பாடத்திட்டம்
றிப்தி அலி
இஸ்லாமிய மார்க்க அறிஞ்சர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டத்தினை விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
அரபு மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடத்திட்டம் தற்போது ஆங்கில மொழிக்கு மொழி மாற்றப்பட்டுள்ளதுடன் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் அனுமதிக்காக ஒருரிரு தினங்களில் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசல் தெரிவித்தார்.
இந்த பாடத்திட்டத்திற்கமைய, கல்விப் பொதுத் தராதரம் (சாதாரண தரம்) பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் மாத்திரமே அரபுக் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், புதிய பாடத்திட்டத்திற்கினங்க, பரீட்சைத் திணைக்களத்தினால் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கான பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் பைசல் கூறினார்.
அரபு மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்த விரைவில் சட்டமூலமொன்றினை கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இடம்பெற்ற குருத்தலாவ மத்திய மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிகழ்வில் உரையாற்றும் போது அறிவித்திருந்தார்.
இதற்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து பாரிய வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அரபுக் கல்லூரிகளுக்கான பொதுப் பாடத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுப்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டாலுவல்கள் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே அதன் பணிப்பாளர் பைசல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"முஸ்லிம் சமய பண்பாட்டாலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான ஏ.பீ.எம். அஷ்ரபினைடைய காலப் பகுதியில் அரபுக் கல்லூரிகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற விடயம் தீர்மானிக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டமொன்றினை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 34 பேரைக் கொண்ட குழுவொன்று முன்னாள் பணிப்பாளர் இப்றாஹீம் அன்சாருடைய காலப் பகுதியில் நியமிக்கப்பட்டது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், அரபுக் கல்லூரிகளின் ஒன்றியங்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, சூரா சபை, ஷரீஆ கவுன்ஸில் மற்றும் சூபி கவுன்ஸில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டனர்.
அரபுக் கல்லூரிகளின் பதிவு, பாடத்திட்டம், நிர்வாகம் மற்றும் கண்கானிப்பு ஆகிய நான்கு தலைப்புக்களில் உப குழுக்களும் இந்த குழுவிலிருந்து உருவாக்கப்பட்டன.
இதற்கு மேலதிகமாக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என் கபூர்டீன், திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜே.டி. கரீம்தீன், மல்வானை பின்பாஸ் மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ஹர், பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஜே. ஷிஹான் உள்ளிட்ட ஆறு பேரைக் கொண்ட தொழிநுட்பக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
கடந்த பல மாதங்களாக இக்குழு பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டமொன்றினை தயாரித்துள்ளது.
இந்த பாடத்திட்டத்திற்கமைய, கல்விப் பொதுத் தராதரம் (சாதாரண தரம்) பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் மாத்திரமே அரபுக் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படுவர்.
எனினும், தரம் 10 இல் அரபுக் கல்லூரிகளுக்கு இணைக்கப்படுபவர்கள் முதல் இரண்டு வருடங்களில் பாடசாலைக் கல்வியினை கற்று கல்விப் பொதுத் தராதரம் (சாதாரண தரம்) பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
புதிய பாடத்திட்டத்திற்கமைய அரபுக் கல்லூரிகளின் கல்வி ஆண்டுகள் ஆறு வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் இரண்டு வருடங்களில் அரபு மொழி மாத்திரம் போதிக்கப்படும்.
இதனை மாத்திரம் நிறைவு செய்துவிட்டு அரபுக் கல்லூரிகளிலிருந்து வெளியேறுபவர்களுக்கு விசேட சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இச்சான்றிதழை வைத்து மத்திய கிழக்கு நாடுகளில் சிறந்த தொழில் வாய்ப்பினை பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதே போன்று, சான்றிதழ், மேலதிக சான்றிதழ், டிப்ளோமா, உயர் டிப்ளோமா என நான்கு மட்;டங்களை உள்ளிடக்கிய வகையில் அரபுக் கல்லூரிகளின் கல்வியாண்டுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதற்காக கற்பிக்க வேண்டிய புத்தகங்களையும் இந்தக் குழு தெரிவு செய்துள்ளது. அதேபோன்று, அரபுக் கல்லூரிகளில் கற்பிக்கும் விரிவுரையாளர்களின் கல்வித் தரத்தினை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், அரபுக் கல்லூரி மாணவர்களுக்கான பரீட்சைகளை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் தற்போது திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறு பல்வேறு சிறப்பான விடயங்களைக் கொண்டுள்ள இந்த பாடத்திட்டம் அரபுக் கல்லூரி மாணவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளன.
அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன், அரபுக் கல்லூரிகளின் அதிபர்களை அழைத்து இது தொடர்பில் விரிவாக கலந்துரையாட எண்ணியுள்ளேன். எவ்வாறாயினும், இந்த பாடத்திட்டத்தினை வினைத்திறனாக அமுல்படுத்த அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்பு மிக அவசியமாகும்" என்றார்.
நாடளாவிய ரீதியில் தற்போது 317 பதிவுசெய்யப்பட்ட அரபுக் கல்லூரிகள் செயற்படுகின்றன. இதற்கு மேலதிகமாக சுமார் 120 அரபுக் கல்லூரிகள் பதிவிற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)