அரச ஹஜ் குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அரச ஹஜ் குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஏ.ஆர்.ஏ.பரீல்

இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­கான ஏற்­பா­டு­க­ளின்­போது, ஏற்­க­னவே 2013 ஆம் ஆண்டு உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­காட்­டல்கள் மீறப்­பட்­டமை உட்­பட மேலும் பல கார­ணங்­களை முன்­வைத்து நான்கு ஹஜ் முக­வர்கள் அரச ஹஜ் குழு­விற்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்­றினைத் தாக்கல் செய்­துள்­ளனர்.

கடந்­த­ மாதம் 22 ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இம்­ம­னு­வினை விசா­ர­ணைக்கு ஏற்­றுக்­கொள்­வதா? இல்­லையா? என்­பது தொடர்பில் எதிர்­வரும் 20 ஆம் திகதி உயர்­நீ­தி­மன்றம் ஆரா­ய­வுள்­ளது.

கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த ஹாதி டிரவல்ஸ், கன்­ஸுல்லா டிரவல்ஸ், எச்.எம்.எச். டிரவல்ஸ், அல் உமைரா டிரவல்ஸ் ஆகிய முகவர் நிலை­யங்­களே உயர் நீதி­மன்றில் இம்­ம­னு­வினை தாக்கல் செய்­துள்­ளன.

உயர்­நீ­தி­மன்றில் SC-/FR/142/2023 எனும் இலக்­கத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஹாதி டிரவல்ஸ் உரி­மை­யாளர் என். சுபைல் முஹம்மட் ‘விடி­வெள்­ளி’க்கு விளக்­க­ம­ளிக்­கையில்,

"அரச ஹஜ் குழு எம்மை இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முக­வ­ராக தெரிவு செய்­தி­ருந்தும் எமக்கு ஹஜ் கோட்டா வழங்க மறுத்­தமை, ஹஜ் முக­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தும் முகவர் நிய­மனம் தொடர்பில் 2023.04.28ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட பத்­தி­ரிகை அறி­வித்­தலில் 81 முக­வர்­களின் பெயர் விப­ரங்கள் மாத்­தி­ரமே இடம் பெற்­றமை, எங்­க­ளது பெயர் விப­ரங்கள் பிர­சு­ரிக்­கப்­ப­டாமை, இதன் கார­ண­மாக 30 வரு­ட­கால எங்கள் முகவர் நிலைய நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­பட்­டமை மற்றும் ஹஜ் பய­ணத்­துக்கு எம் முகவர் நிலையத்தில் பதிவு செய்து கொண்­டி­ருந்­த­வர்கள் இதனால் பதி­வினை ரத்து செய்­ததால் பாரிய நஷ்டம் ஏற்­பட்­டமை ஆகிய கார­ணங்­களை முன்­வைத்து நீதி­மன்­றுக்கு மனு­தாக்கல் செய்­துள்ளோம்.

இதே­வேளை நாம் இது தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்­த­தை­ய­டுத்து ஹஜ் குழு 2023.05.10 ஆம் திகதி எமது முகவர் நிலை­யங்­களின் பெயர்­க­ளையும் உள்­ள­டக்கி 104 முகவர் நிலை­யங்­களின் பெயர் பட்­டி­யலை பத்திரிகையில் விளம்பரம் செய்தது.

இதேவேளை ஹஜ் யாத்திரிகர்களின் நலன் கருதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் விண்ணப்பமொன்றினையும் சமர்ப்பிக்கவுள்ளோம்" என்றார்.