ஹஜ் குழுவிற்கு எதிராக முஸ்லிம் சமய திணைக்கள உத்தியோகத்தர்கள் போர்க்கொடி
றிப்தி அலி
ஓய்வுபெற்ற இராஜதந்திரியான இப்றாஹீம் அன்சார் தலைமையிலான 2023ஆம் ஆண்டுக்கான ஹஜ் குழுவிற்கு எதிராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் புத்தசாசன மற்றம் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் எழுத்து மூல முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான ஹஜ் ஏற்பாட்டில் குறித்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலான முறைப்பாடே அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஆகிய தரங்களிலுள்ள பல உத்தியோகத்தர்கள் கையெழுத்திட்டே இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ஹஜ் கடமையினை மேற்கொள்ளச் செல்லும் யாத்திரீகர்களின் நலன்களை கவனிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு வருடம் சவூதி அரேபியா செல்வது வழமையாகும்.
எனினும், கொவிட் பரவல் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியன காரணமாக 2019ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக இந்த வருடமே அந்த வாய்ப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இரு ஆண் உத்தியோகத்தர்களும், பெண் உத்தியோகத்தர் ஒருவரும் இவ்வாறு சவூதி அரேபியா அனுப்பப்படுவது வழமையாகும். எனினும், இம்முறை பெண் உத்தியோகத்தர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாது மூன்று ஆண் உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் பெண் ஹஜ் யாத்தீரிகளின் நலன்களை கவனிப்பதற்கு இம்முறை யாருமில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாராம்பரியமாக வருடாந்த அனுப்பப்பட்டு வந்து பெண் ஹஜ் யாத்தரீகர்களுக்கான நலன்புரி உத்தியோகத்தர் இந்த வருடமே முதற் தடவையாக புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஹஜ் நலன்புரி கடமைகளை மேற்கொள்வதற்கான உத்தியோகத்தர்களை தெரிவுசெய்வதற்கான வழிகாட்டியொன்று திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
குறித்த வழிகாட்டி பின்பற்றப்படாமலும், திணைக்களத்தின் பணிப்பாளருடைய எந்தவித சிபாரிசுமின்றியே ஹஜ் குழுவின் தலைவரினால் தன்னிச்சையாக ஹஜ் நலன்புரிக்கான உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
எந்தவொரு தடவையும் ஹஜ் கடமையினை நிறைவேற்றாத பல உத்தியோகத்தர்கள் திணைக்களத்தில் உள்ள நிலையில், மூன்றாவது தடவையாக ஹஜ் கடமையினை நிறைவேற்றும் ஒருவர் நலன்புரி உத்தியோகத்தராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அது மாத்திரமல்லாம், அரச தொழில் நியமனம் பெற்று இதுவரை நிரந்தரமாகாத இரண்டு வருடங்களே பூர்த்தியான கனிஷ்ட உத்தியோகத்தர் ஒருவரும் இம்முறை ஹஜ் நலன்புரி உத்தியோகத்தராக சவூதி அரேபியா சென்றுள்ளார்.
இதனால், அதிருப்தியடைந்த திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஒன்றிiணைந்தே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.
ஹஜ் குழுவின் தலைவர் தொடர்ச்சியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயற்பாடுகளில் தலையிடுவதாகவும், உத்தியோகத்தர்களுக்கு பாரிய அழுத்தங்களை வழங்குவதாகவும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹஜ் குழுவின் தலைவராக இப்றாஹீம் அன்சார் நியமிக்கப்படுவதற்கு முன்னர் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக சில வருடங்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினாலேயே ஹஜ் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சராக செயற்பட்ட காலப் பகுதியில் அவருடைய ஆதரவாளர்கள் சிலருக்கு பதவி வழங்கப்பட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ஹஜ் குழு நியமிக்கப்பட்டது.
குறித்த குழு நியமிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை ஹஜ் விடயத்தில் பல மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் பல்வேறு தரப்பினர்கள் விடயத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட அமைச்சர்களிடம் பல முறைப்பாடுகளை மேற்கொண்ட போதிலும் அவர்கள் இக்குழு தொடர்பில் கண்டும் காணாமலுமே இருந்தனர்.
இவ்வாறன நிலையில், இந்த வருடத்திற்கான ஹஜ் குழுவும், ஹஜ் நிதியத்திலுள்ள நிதியினை துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துள்ளது. கடந்த மார்ச் 28ஆம் திகதி வரை இந்நிதியத்தில் 14 கோடி 59 இலட்சத்து 29 ஆயிரத்து 8 நூற்று 58 ரூபாவும் 83 சதமும் காணப்பட்டது.
இந்த நிதியினை பயன்படுத்தியே ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் இந்த வருடம் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வருடம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்ற சவூதி அரேபியா அனுமதிக்கவில்லை. இதனால், அப்போது திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய அன்சாரினால் ஹஜ் கடமைக்கு செல்ல முடியாதிருந்தது.
இதனால், குறித்த திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் யாரும் ஹஜ் நிதியத்தின் நிதியில் ஹஜ் கடமையினை நிறைவேற்ற அப்போதைய பணிப்பாளரினால் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் காரணமாக கடந்த வருடம் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நடவடிக்கைக்காக சென்ற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அவர்களின் சொந்த நிதியில் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.
இந்த வருடத்திற்கான ஹஜ் குழுவின் உறுப்பினரான அர்ஹம் உவைஸ் கடந்த வருடம் ஹஜ் குழுவின் தலைவராக செயற்பட்டார். அச்சமயம் பேஸாவினை (Bessa) பயன்படுத்தி ஹஜ் கடமையினை நிறைவேற்றிய நிலையில், இந்த வருடம் ஹஜ் நிதியத்தின் ஊடாக ஹஜ் கடமையினை நிறைவேற்றத் தயாராகி வருவதாக தெரிய வருகின்றது.
இதேவேளை, இலங்கைக்கு இந்த வருடம் கிடைக்கப் பெற்ற 150 பேஸாக்களும் 45 ஹாஜிகளுக்கு ஒன்று என்ற அடிப்படையில் ஹஜ் முகவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதன் பின்னர் மீதமுள்ள பேஸாக்கள் மருத்துவக் குழு மற்றும் நிர்வாக தன்னார்வர்களை அனுமதிக்கப்பட்ட அளவுகோலின் அடிப்படையில் தெரிவுசெய்து வழங்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முன்னர் அறிவித்திருந்தது.
எனினும், குறித்த நடைமுறை பேணப்படாமல் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மாத்திரமல்லாமல், அரசியல்வாதிகள் மற்றும் ஹஜ் குழுவின் உறுப்பினர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் ஹஜ் பேஸாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது போன்றே 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற ஹஜ் பேஸாக்கள் அரசியல்வாதிகள் மற்றும் அப்போதைய ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு நெருக்கமானவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறும் நோக்கில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு கடந்த மே 9ஆம் திகதி மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கு இதுவரை எந்தப் பதிலுமில்லை.
இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெறும் நோக்கில் ஹஜ் குழுவின் தலைவரான இப்றாஹீம் அன்சாரை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.
எனினும், "முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி விரைவில் தீர்வொன்றினை வழங்குவேன்" என புத்தசாசன மற்றம் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
அது மாத்திரமல்லாமல், திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் இலவசமாக உம்ரா கடமையினை நிறைவேற்றுவதற்கான விசேட திட்டமொன்றினை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"கடந்த வருடம் இலங்கையிலிருந்து 900 பேர் மாத்திரமே ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்றமையினால் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எவரையும் ஹஜ் நிதியத்தின் நிதியிலிருந்து செல்ல அனுமதிக்க வேண்டாம் என நானே உத்தரவிட்டேன்.
எனினும், இந்த வருடம் இலங்கையிலிருந்து 3,500 பேர் ஹஜ் யாத்திரீகர்கள் செல்கின்றமையினால் அவர்களின் நலன்களைப் பேணுவதற்கு அதிக எண்ணிக்கையானோர் தேவை. இதனால், ஹஜ் நிதியத்தின் நிதியிலிருந்து அவர்களைச் செல்ல அனுமதி வழங்கியுள்ளேன்" என்றார்.
எவ்வாறாயினும் முஸ்லிம் சமூகத்தின் சொத்தான ஹஜ் நிதியத்திலுள்ள நிதி, சில தனிநபர்களின் சொகுசுக்காக தவறான வழியில் கையளாப்பட்டு வருகின்றது.
அது மாத்திரமல்லாமல், சவூதி அரேபியாவினால் இலவசமாக வழங்கப்படுகின்ற பேஸாக்கள் தொடர்ச்சியாக பிழையான வழியிலேயே பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாக மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் அக்கறை செலுத்தி, இந்த செயற்பாடுகளுக்கு எதிராக அழுத்தம் பிரயோகித்து சமூகத்தின் சொத்தினை பாதுகாப்பாது இன்றியமையாததொன்றாகும்.
Comments (0)
Facebook Comments (0)