கிழக்கு ஆளுநரின்புதிய நியமனங்களின் பின்னால் உள்ள சர்ச்சை

கிழக்கு ஆளுநரின்புதிய நியமனங்களின் பின்னால் உள்ள சர்ச்சை

றிப்தி அலி

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் பேராசியர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சில நியமங்கள் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தன. இந்நியமனங்களில் அம்மாகாணத்தில் வாழும் முஸ்லிம் சமூக புறக்கணிப்பட்டுள்ளதா என்ற கேள்வியை தேர்தல் மேடைகளில் கேட்கக்கூடியதாக இருந்தது.

முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் போன்று தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆளுநரும் முஸ்லிம் சமூகத்தினை புறக்கணித்து செயற்பட முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகப் பார்வையும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜயந்த லால் ரத்னசேகர, ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியராவர்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஊவா வெல்ஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக செயற்பட்டார். பின்னர் புனானையிலுள்ள முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினுடைய பல்லைக்கழகத்தின் உப வேந்தராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.

தமிழ் பேசக்கூடிய இவர், கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டமை இந்த மாகாணத்திலுள்ள அனைத்து மக்களினாலும் வரவேற்கப்பட்டது.

முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானினால் கிழக்கு முஸ்லிம்கள் கடுமையாக புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் இவரின் நியமனம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நல்லெண்ணமொன்றை உருவாக்கியது.

எனினும், தற்போதைய நியமன விவகாரம் ஆளுநருக்கு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. இதற்கு பிரதான காரணம் ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சில நியமனங்களாகும்.

மாகாண சபைகள் தற்போது நாட்டில் செயற்படாமையினால் அதன் அதிகாரங்கள் அனைத்தும் ஆளுநரின் கீழுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாண ஆளுநரின் கீழ் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு, மாகாண வீடமைப்பு அதிகார சபை, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, மாகாண சுற்றுல்லா பணியகம், மாகாண முன் பள்ளி கல்விப் பேரவை மற்றும் மாகாண கூட்டுறவு உத்தியோகத்தர்கள் ஆணைக்குழு ஆகியன காணப்படுன்றன.

குறித்த நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கடந்த வாரம் ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் நியமிக்கப்பட்டனர். இதற்கமைய, மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக பீ.எச்.என். ஜயவிக்ரமவும் மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக பொறியியலாளராக ஜீ. சுகுமாரனும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக கித்சிரி நவரத்னவும் மாகாண சுற்றுல்லா பணியகத்தின் தலைவராக பிரியந்த மல்லவனவும் மாகாண முன் பள்ளி கல்விப் பேரவையின் தலைவராக ஏ. விஜயானந்த மூர்த்தியும், மாகாண கூட்டுறவு உத்தியோகத்தர்கள் ஆணைக்குழுவின் தலைவராக ரஜினி கணேசபிள்ளையும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிறுவனத் தலைவர்கள் நியமனத்தில் முஸ்லிம்  சமூகத்தினைச் சேர்ந்த எவரும் உள்ளடக்கப்படாமை, கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலையினைத் தோற்றுவித்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் பாரியளவில் அனுர குமார திசாநாயக்கவிற்கு வாக்களித்திருந்தனர். இதனால் பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் பல முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் ஆளுநர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை முஸ்லிம் சமூகத்தில் பாரிய அச்சத்தினை ஏற்படுத்தியது. அத்துடன் எதிர்க்கட்சிகளின் பிரச்சார மேடைகளில் பேசுபொருளாகவும் இந்த விடயம் காணப்பட்டது.

முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் கிழக்கு முஸ்லிம்களை புறக்கணித்து செயற்பட்டிருந்தாலும் நிறுவனத் தலைவர்கள் நியமினத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமை உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆளுநர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் நியமனத்தில் தலா இரண்டு சிறுபான்மையினத்தவர்களை உள்ளிடக்கியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே கிழக்கு ஆளுநர் முஸ்லிம்களை புறக்கணித்து விட்டு நிறுவனத் தலைவர்கள் நியமினத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நியமனங்களின் காரணமாக தங்களின் வாக்கு வங்கியில் பாரிய சரிவினை ஏற்படுத்தும் என கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் சில முஸ்லிம் வேட்பாளர்கள் இக்கட்டுரையாளரிடம் அச்சம் வெளியிட்டனர்.

கிழக்கு மாகாண சுற்றுல்லா பணியகத்தின் தலைவராக திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு முஸ்லிமின் பெயர் அம்மாவட்டத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்களினால் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. 

எனினும், குறித்த சிபாரிசு ஆளுநரினால் நிராகரிக்கப்பட்டுள்ள விடயம் பின்னர் தெரியவந்தது. அதேபோன்று கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள நிறுவனமொன்றில் பிரதம நிறைவேற்று அதிகாரிய கடமையாற்றி போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த வேலைகளில் இடம்பெற்ற மோசடி காரணமாக நீண்ட காலம் எந்தப் பணிகளுமின்றி வைக்கப்பட்டிருந்த பொறியியலாளர் ஒருவரும், புதிய ஆளுநரின் நிறுவனத் தலைவர்களின் நியமனமத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறான விடயங்கள் காரணமாக புதிய ஆளுநரின் நியமனங்கள் தொடர்பில் பாரிய விமர்சனங்கள் சமூக ஊடகங்களிலும் பிரச்சார மேடைகளிலும் முவைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வேட்பாளர் அஷ்ஷெய்க் எம்.என். இக்ரமின் கவனத்திற்கும் இக்கட்டுரையாளரினால் கொண்டு செல்லப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கைகளை இக்ரம் முன்னெடுத்துடன் 'விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்' என இக்கட்ரையாளரிடம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண மாகாண முன்-பள்ளி கல்விப் பேரவையின் தலைவராக எம்.ஏ. அமீர்தீன் கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னரும் அமீர்தீன் இந்த பேரவையின் தலைவராக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு ஆளுரினால் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரம்:

மேற்படி நியமனங்களில் கிழக்கு மாகாண மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உறுப்பினர்களாக எந்தவொரு முஸ்லிமும் புதிய ஆளுநரினால் நியமிக்கப்படவில்லை. முன்னர் இந்த அதிகார சபையின் தலைவராக சம்மாந்துறை ரனுஸ் இஸ்மாயில் செயற்பட்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பதவி மாத்திரமே பூரணப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்கள் பதவிகள் வெற்றிடமாகக் காணப்படுகின்றன.

குறித்த அதிகார சபையின் உறுப்பினர்கள் நியமனமத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படக் கூடாது என ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மிகவும் ஒற்றுமையாக பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக இந்த மாகாணத்தின் நிர்வாக பங்கீடுகள் அனைத்தும் 2:2:2 என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக பகிர்ந்தளிக்கப்பட்டு வந்துள்ளது.

இதுவொரு எழுதப்படாத விதியுமாகும். எனினும், சிங்கள கடும்போக்குடைய முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் இந்த எழுதப்படாத விதி தகர்த்தெறியப்பட்டமையினை இங்கு நினைவுட்டுகின்றேன். அவரை தொடர்ந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டாமானும் இந்த எழுதப்படாத விதியினை மீறியே செயற்பட்டார்.

குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த பல சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளை முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கி விட்டு கனிஷ்ட தரத்திலுள்ள தமிழ் நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பதில் செயலாளர் பதவிகளை வழங்கினார். அது மாத்திரமல்லாமல், இவர்கள் - இரண்டு நிறுவனங்களின் தலைவர் பதவிகளை கடமையாற்றவரும் அவர் அனுமதி வழங்கினார்.

இதே நிலைமை புதிய ஆளுநரின் காலத்திலும் தொடரக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எனவே முன்னாள் ஆளுநரினால் மேற்கொள்ளப்பட்ட பிழையான நடவடிக்கைகளை சீர்செய்ய வேண்டியது புதிய ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவின் பிரதான கடமையாகவுள்ளது.

முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நியமனங்களும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ரத்துச் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீர்வு கிடைக்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் செயலக உயர் அதிகாரியொருவர் எமக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்னும் அதிக காலம் எடுக்காமல் கிழக்கு மாகாணத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் வினைத்திறனா தீர்மானங்களை பேரசாரியர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதன் ஊடாக முன்னாள் ஆளுநர்களினால் பாதிக்கப்பட்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு தீர்வு கிடைக்கும். அத்துடன் கிழக்கு மாகாணத்தின் நிர்வாகமும் வினைத்திறனாக கட்டியெழுப்பப்படும்.