பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூறக் கோரி உயர் நீதிமன்றத்தில் TISL நிறுவனம் மனு தாக்கல்
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் உட்பட மேலும் மூவரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் (ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்), முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் S.R ஆட்டிகல மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உட்பட 13 பிரதிவாதிகள் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உயர்மட்டங்களில் தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் போது முறையான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இன்மையே இன்று இலங்கையின் அவல நிலைக்குக் காரணம் என்பதனை கருத்திற் கொண்டு இம்மனுவானது நாட்டு மக்களின் பொது நலனின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ள பல காரணிகள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் முக்கிய சில காரணிகள் பின்வருமாறு:
1. 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான வரிச்சலுகைகளால் இழக்கப்பட்ட அரச வரி வருமானம்.
2. சட்டவிரோத வரிச்சலுகைகளைத் மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை
3. இலங்கை கடன் தரப்படுத்தலில் தரங்குறைக்கப்பட்டமையினை கட்டுப்படுத்த அவசியமான முறையான தீர்வுகள் அல்லது நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை.
4. இலங்கை ரூபாவின் பெறுமதியினை குறைக்க வேண்டும் என பரவலாக அழைப்பு விடுக்கப்பட்ட வேளையில் குறித்த நேரத்தில் மற்றும் பொருத்தமான முறையில் ரூபாவின் பெறுமதியினை குறைக்கத் தவறியமை.
5. எந்தவொரு மறுசீரமைப்பு முறைமைகளும் இன்றி அரசின் இறையாண்மை கடனைத் திரும்பிச் செலுத்தும் தீர்மானம்.
6. பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட மறுத்தமை.
நாட்டின் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளான சமத்துவம், கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை என்பன பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் அல்லது அவர்களின் செயலற்ற தன்மையினால் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களின் சுமை, குறித்த கடனை மீளச் செலுத்துவதில் காணப்படும் சிரமம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை என்பவற்றுக்கு இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளே நேரடிப் பொறுப்புடையவர்கள் என குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
குறித்த பொறுப்புவாய்ந்த நபர்களின் நடவடிக்கைகளும் அவர்களின் செயலற்ற தன்மையும் நாட்டில் தற்போது காணப்படும் உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலைமையானது நாட்டு மக்களை முன்னொருபோதும் இல்லாதவாறு பெரிதும் பாதித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தை அடைய காரணமான குறித்த பிரதிவாதிகளின் சட்டவிரோத, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புக்கள் தொடர்பில் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திர ஜயரத்ன, ஜெஹான் கனக ரட்ன மற்றும் ஜூலியன் போல்லிங் ஆகியோர் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்துடன் இணைந்து குறித்த மனுவினை தாக்கல் செய்தனர்.
Comments (0)
Facebook Comments (0)