புர்கா தடை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது: அலி சப்ரி றஹீம்
சில்மியா யூசுப்
புர்கா தடை முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமான ஒன்றாகும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் புர்கா என்பது முஸ்லிம்கள் மீது பயங்கரவாத பழி சுமத்தும் சாதனமாக அமையக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"கடந்த பல தசாப்தங்களாக புலிகளின் காலம் தொட்டு ஸஹ்ரான் எனும் பயங்கரவாதியின் ஈஸ்டர் தாக்குதல் வரை நமது நாடு பயங்கரவாத நிலமைக்கு முகம் கொடுத்து வந்துள்ளது.
அதனால் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் இன ஒருமைப்பாடு போன்றவை சீர் குலைந்து நாட்டில் அமைதியின்மை இன்று வரை நிலவுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாறியுள்ள புர்கா பற்றிய தெளிவான பார்வை எம் சமூக மட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டியுள்ளது.
எமது நாட்டு முஸ்லிம் பெண்களில் பத்து வீதத்துக்கும் குறைவானவர்களே புர்கா அணிகிறார்கள். குறிப்பிட்ட புர்க்கா அணிதல் இஸ்லாத்தில் கட்டாயமாக்கப்பட்ட ஒன்றல்ல என்பதே பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாக உள்ளது.
தட்ப வெப்ப நிலைமைக்கேற்ப அணியப்பட்ட பாலைவன மகளிரின் கலாசார ஆடையே அதுவாகும். ஆனால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எம் குல பெண்களுக்கு குறிப்பிட்ட முகத்திரை மார்க்க அடையாளமாக குத்தபட்டதன் விளைவே இன்று முஸ்லிம் மக்களின் மானசீக போராட்டமாக மாறியுள்ளது.
அவ்ரத்தை மறைத்தல் என்பது இஸ்லாத்தில் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. மணிக்கட்டு, முகம் தவிர ஏனைய பகுதிகளை மறைத்தலே இஸ்லாமிய பெண்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெண்கள் முகத்தை மறைப்பது ஓர் அடையாளமே அன்றி மார்க்க கடமையல்ல என்னும் உண்மையை எம் அறிஞர்கள் சமூக மட்டத்தில் எடுத்தியம்ப வேண்டும்...எல்லாம் வல்ல அல்லாஹ் உள்ளத்தை பார்ப்பவனாக இருக்கிறான்.
ஆனாலும் ஓர் உண்மையை சொல்லி ஆக வேண்டும். இதுவரை எம் நாட்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களில் புர்கா அல்லது ஹபாயா அணிந்து எவரும் தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பதே அந்த உண்மையாகும்.
இதே விதமாக புர்கா அணிந்து தற்கொலை குண்டுதாரிகள் பயங்கரவாதி சஹ்ரானின் கும்பலில் செயல்படவுமில்லை. ஆனால் எதிர்காலத்தில் வெளிநாட்டு சக்திகளும் உள்ளூர் ஏஜெண்டுகளும் பிற பயங்கரவாதிகளும், குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் புர்காவை தமது மிலேச்சத்தனமான செயல்களுக்கு பயன்படுத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தலாம்.
முகத்தை மறைத்தவர்களாக பயங்கரவாத நடவடிக்கை, தற்கொலை தாக்குதல், குண்டு வெடிப்பு இன்னோரன்ன கொடூர கொலை பாதக செயல்களில் ஈடுபடலாம். அதேபோல புர்கா அணிந்து பல்வேறு குற்ற செயல்களிலும் ஈடுபடலாம். இவை நேரடியாகவும் மறைமுகமாகவும் இங்கு வாழும் எமது முஸ்லிம் மக்களை பாதிக்கும் என்பது தெளிவான உண்மையாகும்.
அது மட்டுமல்லாது கேளிக்கை விடுதிகள், வாடி வீடுகள் மற்றும் உல்லாச நிலையங்களில் விலை மாதர்களில் சிலர் முகத்திரையிட்டு தங்கள் அடையாளங்களை மறைத்து பாலியல் தொழிலில் ஈடுபடவும் செய்கிறார்கள்.
புர்காவை தவறான நோக்கத்துக்காக பெண்கள் பயன்படுத்துகின்றபோது அந்த பாவத்தின் பங்காளிகளாக நாமும் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மையாகும். புர்கா இன்றைய கால கட்டத்தில் அனாவசியமான ஒன்றாகும்.
தமது அரசியலுக்காகவும் வேறு சுய லாபங்களுக்காகவும் தவறான புரிதலினாலும் பலரும் அதனை சர்ச்சைக்குரிய ஒன்றாக மாற்றியுள்ளமை கண்டிக்க வேண்டிய ஒன்றாகும்.
இந்த வகையில் முஸ்லிம் மதத்தலைவர்கள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தாமாகவே அரசாங்கத்திடம் புர்காவை தடைசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும்.
ஆனால் சமூக பழியை அஞ்சி அவர்கள் மௌனம் காக்க, தற்போது அரசாங்கமே தீர்க்கமாக கலந்தாலோசித்து புர்காவை தடைசெய்துள்ளது. இதனால் எமது முஸ்லிம்களுக்கு பாதுகாப்பே அன்றி அவர்களுக்கு எதிரான ஒரு செயலல்ல என்பதே உண்மையாகும்.
இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால் புர்க்கா என்னும் முகத்திரை தடை செய்யப்பட்டுள்ள அதேவேளை மாஸ்க் என்னும் முகக் கவசத்தை அணியும்படி உலகெங்கும் வலியுறுத்தப்படுகின்றது. இங்கே முகத்தை மறைப்பதில் இன, மத வேறுபாடில்லை. இறைவனின் விந்தைகளில் இதுவும் ஒன்று என்றே நினைக்க தோன்றுகிறது.
எமது பாதுகாப்பும் அமைதியான வாழ்வும் பிரதானமானது என்பதை கருத்தில் கொண்டு ஏனைய சகோதர சமூகங்களோடு ஒன்றித்து இன மத மொழி பேதமின்றி இலங்கை தாய் மக்கள் என்ற வகையின் அனைவரும் ஒற்றுமையாக பயணித்து சமாதான சக வாழ்வை நிலை நிறுத்துவோமாக என்று வேண்டுகிறேன்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)