இலஞ்சம் பெறும் அரச ஊழியர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர்: ஜனாதிபதி
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், அவர்கள் எந்தத் தரத்தினைச் சேர்ந்தவர்களென்றாலும் தண்டனை வழங்கப்பட்டு சேவையிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலஞ்சம் பெற்றுக் கொள்வதும், இலஞ்சம் வழங்குவதும் சட்டவிரோதமானதாகும்.இவ்வாறானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அரச சேவையை மேலும் செயற்திறன் மிக்கதாக மாற்றுவதற்காக அதன் சட்டவிதிகள் விரைவில் திருத்தியமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
போக்குவரத்து அமைச்சு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அதிகாரிகள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில்,
"அனைத்து அரச சேவைகளும் மக்களுக்கு இலகுவாகவும், செயற்திறன் மிக்கதாகவும் அமையவேண்டும். அரச சேவையில் ஊழல்களும், மோசடிகளும், தாமதங்களும் தவிர்க்கப்பட வேண்டும்.
அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஒழுங்கீனங்களை கண்டறிந்து, அவற்றுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் பிடியில் சிக்கவைப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கும் உளவுப் பிரிவின் உயரதிகாரிகளுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரச துறைகளின் செயற்திறனற்ற செயற்பாடுகள் காரணமாகவே இதுவரை அதிகாரத்திலிருந்த அரசாங்கங்கள் மீது மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். இந்த நிலைமை எனது பதவிக்காலத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அனைத்து அரச நிறுவனங்களும் செயற்திறன் மிக்கதாகவும் மக்களுக்கு மிகவும் நெருக்கமுடையதாகவும் தூய்மையானவைகளாகவும் மாற்றம்பெற வேண்டும்.
அரச சேவை மீது மக்கள் நம்பிக்கையை உறுதிசெய்யவேண்டியது 15 இலட்சம் அரச ஊழியர்களது முக்கியமான கடமையாக அமையவேண்டும். அரச சேவையின் உயர் பதவிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு திறமை மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களைத் தெரிவுசெய்வதற்கு புத்திஜீவிகள் குழுவொன்று இதற்காகவே நியமிக்கப்பட்டது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்பட அனைத்து உலக நாடுகளும் எமது நாடு தொடர்பில் நல்லபிப்பிராயம் கொள்வது எமது அரச ஊழியர்களின் செயற்பாடுகளிலே தங்கியுள்ளது. அரச சேவையின் செயற்திறனை அதிகரிப்பதற்கு நவீன தொழில்நுட்ப நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அனைத்து அரச நிறுவனங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது அவசியமாகும்.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மற்றும் விவசாயத்துறை உட்பட தொழில்களில் ஈடுபடும் மக்கள் பெற்றுக்கொள்ளும் வருமானத்திலிருந்தே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது" என்றார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர்கள் மஹிந்த அமரவீர, திலும் அமுனுகம மற்றும் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
Comments (0)
Facebook Comments (0)