மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமிற்கு மாற்றுமாறு உத்தரவு

மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமிற்கு மாற்றுமாறு உத்தரவு

கியாஸ் ஷாபி

படகு மூலம் இலங்கை வந்த மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமிற்கு மாற்றுமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

115 அகதிகளை ஏற்றிய குறித்த படகு கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் ஒதுங்கியது. குறித்த படகினை கடற் படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த படகில் இருந்த அனைத்து அகதிகளும் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் கற்பிணித் தாய் ஒருவர் உட்பட  39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும் காணப்பட்டனர்.

இதில் பயணித் ஐந்து பேர் ஆழ் கடலில் வைத்து, உயிரிழந்ததாகவும் அவர்களின் சடலங்களை கடலிலே வீசியதாகவும் அகதிகள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் தெரிவித்தனர். 2 ஆண்களும் 2 பெண்களும் 1 சிறுவனுமே உயிரிழந்துள்ளனர்.

இரண்டு குடும்பங்களை சேர்ந்த இவர்கள் ஐந்து பேரும் பசியினால் உயிரிழந்ததாகவும் அந்து குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அகதிகள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை துறைமுகத்திற்கு நீதவான் அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருருந்தார். அதனைத் தொடர்ந்து அகதிகள் அனைவரும் திருகோணமலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில் காணப்பட்ட படகின் உத்தியோகத்த்பன் 12 பேரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, ஏனைய 103 அகதிகளையும் திருகோணமலை, நிலாவெளி பிரதேசத்திலுள்ள ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்றிரவு தங்கவைத்துவிட்டு இன்று மிரிஹான தடுப்பு முகாமிற்கு மாற்றுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிஸாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

கடந்த 12 வருட காலமாக தாம் மியன்மாரில் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை ஐ.நா பாராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழ முடியாத சூழ்நிலையில் இலங்கை நாட்டுக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் அனைவரும் ஒரு படகிற்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் எட்டு இலட்சம் ரூபாய் வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா குறித்த நபர்களை பார்வையிட்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் கலந்துரையாடியிருந்தார்.