இடைநிறுத்தப்பட்ட சந்தாங்கேணி மைதான உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை தொடர அனுமதி

இடைநிறுத்தப்பட்ட சந்தாங்கேணி மைதான உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை தொடர அனுமதி

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்முனை சந்தாங்கேணி மைதான உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் நாயகம் அமில எதிரிசூரியவினால் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை சந்தாங்கேனி விளையாட்டு மைதானம் தொடர்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு கல்முனை பிரதேச விளையாட்டு கழகங்களினால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த மைதானத்தில்  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சினால் 270 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விளையாட்டரங்களின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இவ்வாறான நிலையில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்தியை மீள ஆரம்பிக்க கோரி கல்முனை பிராந்தியத்திலுள்ள  26 விளையாட்டு கழகங்களின் கோரிக்கை கடிதமொன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதி விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.  

குறித்த மைதானத்தில் எல்லைப் பிரச்சினையில் தீர்வு காணப்பட்டுள்ளமையினால், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு அனுப்பி கடிதத்தினை வாபஸ் பெறுவதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, இடைநிறுத்தப்பட்டிருந்த கல்முனை சந்தாங்கேணி மைதான உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மைதான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை அமைப்பாளர் றிஸ்வி முஸ்தபா ஆகியோர் விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினை இன்று (02) தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தினர்.