கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் கடமைகள் நிறைவு
முகுது விகாரை காணி சர்ச்சை தீர்த்துவைப்பு
தீகவாபியிலும் தூபி நிர்மாணிக்க நடவடிக்கை
றிப்தி அலி
கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் கடமைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 2178/17ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக 2020.06.02ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த செயலணியினை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த ஓகஸ்ட் 22ஆம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி செயலத்தின் தகவல் அதிகாரியான சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.கே. ஹேனாதீர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த நவம்பர் 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை (06) வழங்கிய பதிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இந்த செயலணியினால் ஜனாதிபதிக்கு எதுவித அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை. அத்துடன், இந்த ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு சம்பளமோ, கொடுப்பனவோ எதுவும் ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படவில்லை.
இந்த செயலணி செயற்பட்ட காலப் பகுதிக்குள் தீகவாபி மற்றும் லஹுகலயிலுள்ள நீலகிரி ஆகியவற்றின் தூபிகளை நிர்மாணிப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் பொத்துவில் முகுது மஹா விகாரைக்குரிய காணிகள் தொடர்பான சிக்கல்களை தீர்த்து வைத்தல், கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய தொல்பொருள் இடங்களை இனங்கானுதல் மற்றும் அவற்றை பேணிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஆகிய மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஜனாதிபதி செயலணியின் விடயப் பரப்பிற்குள் வரும் கடமைகள் அனைத்தும், கடந்த ஜுலை 22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட 2289/43ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனால், மேற்படி கடமைகள் உட்பட இந்த ஜனாதிபதி செயலணியினால் நிறைவு செய்யப்படாத மிகுதி விடயங்கள் இருப்பின் அவற்றை மேற்படி அமைச்சிற்கு கையளிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் PS/CSA/00/1/14/17ஆம் இலக்க கடிதத்தின் மூலம் செயலணியின் செயலாளருக்கு கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதிய அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, மிகுதியாக இருந்த பணிகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக குறித்த ஜனாதிபதி செயலணியின் செயலாளரினால் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு குறிப்பிட்ட ஆவணங்கள் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்த செயலணியின் தலைவராக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும், செயலாளராக முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்கவும் செயற்பட்டனர்.
தொல்பொருள் சக்ரவர்த்தி எல்லாவல மேதானந்த தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் தமன்கடுவ பிரதேசம் ஆகியவற்றுக்கான பிரதம சங்கநாயக்க, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், காணி ஆணையாளர் நாயகம், நில அளவையளார் நாயகம், களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவ, பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் கபில குணவர்த்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், கிழக்கு மாகான காணி ஆணையாளர், தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர், மல்வத்து பீடத்தின் நிருவாக சபை உறுப்பினரொருவர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் ஆகிய 15 பேரும் இந்த செயலணியின் உறுப்பினர்ளாக செயற்பட்டன.
எனினும், கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் எவரும் இந்த செயலணியில் உள்வாங்கப்பட்டாமை தொடர்பில் பாரிய விமர்சங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, வட மாகாண முன்னாள் பிரதம செயலாளர் ஏ. பத்திநாதன் மற்றும் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் முபீஸால் அபூபக்கர் ஆகியோர் இந்த ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். எனினும் ஏ. பத்திநாதன் குறித்த பதவியினை பொறுப்பேற்கவில்லை.
Comments (0)
Facebook Comments (0)