ஒரு கோடி 15 இலட்சம் ரூபா நிதியில் முழுமை பெறாத அபிவிருத்தித் திட்டங்கள்

ஒரு கோடி 15 இலட்சம் ரூபா நிதியில் முழுமை பெறாத அபிவிருத்தித் திட்டங்கள்

றிப்தி அலி

பொதுமக்களின் வரிப் பணமான ஒரு கோடி 14 இலட்சத்து 37 ஆயிரத்து 721 ரூபா மற்றும் 48 சதம் ரூபா செலவில் கல்முனை பிரதேசத்தில் மூன்று அபிவிருத்தித் திட்டங்கள் இன்று வரை மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாமலேயே சேதமடைந்து வருகின்றன.

ஒழுங்கான திட்டமிடல்கள் எதுவுமின்றி கல்முனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 'சந்தாங்கேணி மைதான அபிவிருத்தி' உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் இதுவரை பூர்த்தியாக்கப்படாமல் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், இப்பிரதேச மக்களின் இன்றியமையாத தேவைகளாக மைதானம், பூங்கா மற்றும் கடற்கரையில் ஓய்வினைக் கழிப்பதற்கான இடம் போன்றன காணப்படுகின்றன.

இவற்றினை நிர்மாணிப்பதற்காக கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் எதுவும் இன்று வரை முழுமையாக நிறைவு செய்யப்படாமல் காணப்படுகின்றன.

இது தொடர்பில் விரிவான தகவல்களை ஆராயும் நோக்கில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்டட பதிலினை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதில் 14  அல்லது 28 வேலை நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 25ஆவது பிரிவின் முதலாவது சரத்தில் குறிப்பிடப்பட்டது.

எனினும், மேற்படி செயற்திட்டங்கள் தொடர்பில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு பதில் வழங்க சுமார் 80 நாட்கள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை பீர்ச் பாகின் முதல் கட்டப் பணிக்காக கடந்த 2014ஆம் ஆண்டு கிராமத்திற்கான ஒரு வேலைத்திட்டத்தின் ஆறு இலட்சத்து 58 ஆயிரத்து 515 ரூபா மற்றும் 48 சதம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நிதியின் கீழ் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தினை கல்முனை பிரதேச செயலகம் குறிப்பிடவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் 2015.12.31ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டுள்ளது. கல்முனைக்குடி – 11 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தரின் ஆலோசனை, மேற்பார்வையுடன் ஆரம்பிக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, கல்முனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மைதானத்திற்காக 60 இலட்சத்து 62 ஆயிரத்து 765 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதான அபிவிருத்தி என்ற செயற்திட்டத்தின் கீழ் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் 2015ஆண்டில் 17 இலட்சத்து 61 ஆயிரத்து 757 ரூபாவும், விளையாட்டு அமைச்சினால் 43 இலட்சத்து 999 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிதிக்கான செயற்திட்டங்கள் கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், சகுரா கொன்ஸ்ரக்ஷன் மற்றும் எம்.எப்.எஸ். இன்ஜினியரின் ஆகிய நிறுவனங்களினால் செயற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் மண்டபம் மற்றும் சுற்று மதில் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கல்முனை பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தரினால் மேற்பார்வை செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த செயற்திட்டங்கள் இன்று முற்றாக சேதமடைந்து மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் நிர்மாணப் பணிகள் 2017.12.31ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலகம் தெரிவித்த போதிலும், குறித்த மைதானம் இதுவரை உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை.

இக்காலப் பகுதியில் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், விளையாட்டுத் துறை இராஜாங்க அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலுக்கு முன்பாக மக்கள் ஓய்வெடுக்கும் கடற்கரை பகுதியினை அழகுபடுத்துவதற்காக 48 இலட்சம் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் எட்டு இலட்சம் ரூபா நிதி அமைச்சினாலும் 40 இலட்சம் ரூபா கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினாலும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 47 இலட்சத்து 16 ஆயிரத்து 450 ரூபா நிதி இந்த செயற்திட்டத்திற்கு செலவளிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது.

கல்முனைக்குடி பிரதேசத்திலுள்ள பிராந்திய அபிவிருத்தி சங்கங்களினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கல்முனை பிரதேச செயலகத்தினால் குறிப்பிட்டாலும், பிரதேச அரசியல்வாதியின் நெருங்கிய ஆதரவாளரினால் குறித்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டதை நேரடியாக அவதானிக்க முடிந்தது.

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பிரதேசத்தில் கடலரிப்பைத் தடுத்தல், மீனவர்களின் பயன்பாடு மற்றும் மீனவர்களிதும் பொதுமக்களினதும் போக்குவரத்தினை இலகுபடுத்தல் போன்ற இன்னோரன்ன பயன்பாடுகளுக்காக கடற்கரை பள்ளிவாசல், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் விடுத்த கோரிக்கைகள் காரணமாக இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டதாக கல்முனை பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது.

எனினும், இதுவரை நிறைவு செய்யப்பட்ட இந்த செயற்திட்டத்திம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே கல்முனை கடற்கரை பள்ளிவாசலை அண்டிய பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் வெள்ளிக்கிழமை தினங்களில் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்றத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத் திட்டம், இதுவரை நிறைவுசெய்யப்படாத நிலையில் அடுத்த கொடியேற்ற நிகழ்வு இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ளது.

இது போன்று அரச நிதியில் நிர்மாணிக்கப்பட்ட பல செயற்திட்டங்கள் கல்முனைப் பிரதேசத்தில் இதுவரை நிறைவுசெய்யப்படமால் கைவிடப்பட் நிலையில் காணப்படுகின்றன. இதன் ஊடாக பொதுமக்களின் வரிப்பணமே வீணடிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக நிறைவு செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கல்முனை வாழ் மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் உரிய அரசியல்வாதிகளிடமும், அரச நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.