வெளிநாட்டு அமைச்சரின் 7 வெளிநாட்டு விஜயங்களிற்கு 5 கோடி ரூபா செலவு

வெளிநாட்டு அமைச்சரின் 7 வெளிநாட்டு விஜயங்களிற்கு 5 கோடி ரூபா செலவு

றிப்தி அலி

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மேற்கொண்ட ஏழு வெளிநாட்டு விஜயங்களிற்கு சுமார் 5 கோடி ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக வெளியாகியுள்ளது.

இந்த ஏழு வெளிநாட்டு விஜயங்களும் அலி சப்ரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் ஏழு மாத காலப் பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக அலி சப்ரி கடந்த 2022.07.22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டார்.

குறித்த தினத்திலிருந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் கம்போடியா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்துள்ளார்.

இதில், சுவிட்ஸர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இரண்டு தடவைகள் இவர் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமல்லாமல், செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் தலா இரண்டு வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஏழு வெளிநாட்டு விஜயங்களுக்காக 5 கோடி 19 இலட்சத்து 47 ஆயிரத்து 7 நூற்று 32 ரூபா வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் செலவளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் அதிகளவிலான தொகையாக ஒரு கோடி 45 இலட்சத்து 21 ஆயிரத்து 8 நூற்று 92 ரூபா, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தில் பங்கேற்க ஆறு பேரைக் கொண்ட தூதுக்குழுவினருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜெனீவா சென்ற போது செலவளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கு கடந்த மே 16ஆம் திகதியே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் தகவல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும், கடந்த மார்ச் 1ஆம் திகதி தொடக்கம் இன்று வரை பிரித்தானியா, சுவீடன், இந்தியா, தென் கொரியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.