ஊடகவியலாளர்களின் காப்புறுதிக்காக 100 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் செலவு

ஊடகவியலாளர்களின் காப்புறுதிக்காக 100  மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் செலவு

றிப்தி அலி

ஊடக அமைச்சினால் முதற் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான எசிதிசி இலவச காப்புறுதி திட்டத்திற்காக அரசாங்கத்தினால் 100 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டுள்ள விடயம் தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்தது.

இக்காப்புறுதி திட்டத்தினை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் கடந்த டிசம்பர் 1ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்தத் திட்டம் தொடர்பில்  ஊடக அமைச்சிற்கு கடந்த டிசம்பர் 7ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதில் கடந்த மார்ச் 11ஆம் திகதி அமைச்சின் அபிவிருத்தி, திட்டமிடல் மற்றும் தகவலறியும் உரிமை ஆகியவற்றுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ.ஜயசுந்தரவினால் வழங்கப்பட்டது.

இதற்கமைய இந்த காப்புறுதி திட்டத்திற்காக ஏறத்தாழ 4,044 விண்ணப்பங்கள் ஊடக அமைச்சிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் 1,200 விண்ணப்பங்கள் ஊடகவியலாளர்களிடமிருந்து நேரடியாகவும், ஊடக நிறுவனங்களினால் ஊடகவியலாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட 2,000 விண்ணப்பங்களும், அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து 844 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதிலிருந்து 3,844 விண்ணப்பங்கள் எசிதிசி இலவச காப்புறுதி திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. 19 – 70 வயதுக்குட்பட்ட இலங்கையினைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மாத்திரமே இந்த காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஒரு வருட காலப் பகுதிக்கான இந்த காப்புறுதி திட்டத்திற்காக ஒரு ஊடகவியலாளருக்கு 25,935 ரூபா அரசாங்கத்தினால் செலவளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதற்கமைய, 9 கோடி 96 இலட்சத்து 94 ஆயிரத்து 140 ரூபா அரசாங்கத்தினால் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிதி, தேசிய வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்வனவு செயன்முறையின் கீழ் இந்த காப்புறுதி திட்டத்தினை செயற்படுத்துவதற்காக சொப்லொஜிக் லைப் காப்புறுதி நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

"ஊடகவியலாளர்களுக்கான சுயாதீன மற்றும் சிறந்த வேலைச் சூழலை உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் கொள்ளைக் திட்டமான 'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கின்' கீழ் இந்த காப்புறுதி திட்டம் வழங்கப்பட்டுள்ளது" என ஊடக அமைச்சு மேலும் தெரிவித்தது.

இந்த காப்புறுதி திட்டத்தின் கீழ் ஊடகவியலாளரொருவர் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரையான உள்ளக மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த காப்புறுதி திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள ஊடகவியலாளரொருவர், இயற்கை அல்லது திடீர் மரணமடைந்தால், பயங்கரவாதம், வேலைநிறுத்தம், கலவரம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டால் ஐந்து இலட்சம் ரூபாவும், இயற்கை அல்லது திடீர் மரணத்தின் இறுதிச் சடங்கு செலவிற்காக 50,000 ரூபாவும் வழங்கப்படுகின்றது.

அத்துடன், சத்திரசிகிச்சை உள்ளிட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்காக 150,000 ரூபா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது ஒரு நாளைக்கு 2,000 ரூபாவும் (ஆகக்கூடியது 30 நாட்களுக்கு மாத்திரம்) வழங்கப்படும்.

இதற்கு மேலதிகமாக மூக்கு கண்ணாடி, பற் சிகிச்சை, வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறல் போன்றவற்றிற்காக 20,000 ரூபா வரை வழங்கப்படுவதுடன் குழந்தை பிரசவத்திற்காக 135,000 ரூபாவும்  பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, இந்த காப்புறுதி திட்டத்தின் கீழ் முதலாவது திடீர் மரணத்துக்கான காப்புறுதியை கொவிட் தொற்றுக்குள்ளாகி அண்மையில் உயிரிழந்த களுத்துறை, தொடங்கொடையினைச் சேர்;ந்த பிராந்திய ஊடகவியலாளர் சுனில் பத்தேவித்தானவின் (63) பெயரில் அவரது மனைவியிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான இக்காப்புறுதி ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் கடந்த 16ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.