முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் கண்ணி வெடி அகற்றலுக்கு ஜப்பான் உதவி
இலங்கையின் வட பிராந்தியத்தில் கண்ணி வெடி அகற்றும் மனித நேய செயற்பாட்டுக்காக அந்நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தியுள்ள Skavita Humanitarian Assistance and Relief Project (SHARP) அமைப்புக்கு 604,412 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 120 மில்லியன்) வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்த நிதி வழங்கலுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 2022 மார்ச் 25ஆம் திகதி, கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இந்த உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் SHARP அமைப்பின் பணிப்பாளரும்/கள அறிக்கையிடல் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுமதி ரஞ்ஜன் பாலசூரிய ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இதுவரையில் ஜப்பானின் Grassroots Human Security Project (GGP) ஊடாக பகிரப்பட்டிருந்த நிதியைக் கொண்டு 1.9 km2க்கும் அதிகமான கண்ணி வெடி காணப்பட்ட பகுதி SHARP இனால் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டுக்கான செயற்திட்டத்தினூடாக, இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கண்ணி வெடி ஆபத்து காணப்படும் பகுதிகளை விடுவித்து, சுமார் 2,000 இடம்பெயர்ந்து வசிக்கும் குடும்பங்களுக்கு தமது சொந்தப் பகுதிகளில் பாதுகாப்பான முறையில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும்.
குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த இந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக பங்களிப்புச் செய்வதாகவும் அமைந்திருக்கும்.
இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஜப்பானிய அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக இந்தப் பணிகளுக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 41.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், இரு நாடுகளுக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருட பூர்த்தியை கொண்டாடும் நிலையில், யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதில் பங்களிப்பு வழங்குவது, இலங்கைக்கான ஜப்பானினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் முக்கிய பங்கைப் பெறும் அங்கமாக அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் “கண்ணி வெடி பாதிப்பற்ற இலங்கை” எனும் இலக்கை எய்துவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும்.
இந்த நிதி உதவியைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில், SHARP அமைப்பின் பணிப்பாளரும்/கள அறிக்கையிடல் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுமதி ரஞ்ஜன் பாலசூரிய கருத்துத் தெரிவிக்கையில்,
"தொடர்ச்சியான ஆறாவது வருடமாகவும் ஜப்பானிய தூதரகத்தினால் ரூ. 119,975,848.00 (US$. 595,857) தொகை ஜப்பானின் GGP நிகழ்ச்சித் திட்டத்தினூடாக SHARP க்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனூடாக இலங்கையின் வட மாகாணத்தில் நாம் முன்னெடுக்கும் கண்ணி வெடி அகற்றும் பணிகளை முன்னெடுக்க உதவியாக அமைந்திருக்கும். 2016 ஆம் ஆண்டு முதல் SHARP அமைப்புக்கு கண்ணி வெடி அகற்றும் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஜப்பானிய அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவுக்கு நாம் மிகவும் நன்றியுடையவர்களாக திகழ்கின்றோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக SHARP அமைப்பின் ஏக நிதி வசதி வழங்குநராகவும் ஜப்பானிய அரசு திகழ்கின்றது. இதுவரையில் SHARP இனால் மொத்தமாக 1,983,108 சதுர மீற்றர் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 10,226 anti-personnel கண்ணி வெடிகள், 138 anti-tank கண்ணி வெடிகள், 3,741 UXOகள் மற்றும் 18,696 க்கு அதிகமான SAA க்கள் மீட்கப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 2100க்கும் அதிகமான குடும்பங்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக பயன்பெற்றுள்ளன. SHARP இனால் தொடர்ந்தும் செயற்பாடுகள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படும்.
தொடர்ச்சியாக வழங்கி வரும் இந்த ஆதரவுக்காக ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சகல GGP ஊழிய அங்கத்தவர்கள் மற்றும் ஜப்பானிய தூதரகத்தின் சகல ஊழிய அங்கத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஜப்பானிய தூதரகம் முக்கிய பங்களிப்பு வழங்கி வருவதுடன், எமது நாட்டுக்கும், நாட்டு மக்களினதும் நலன் கருதி அவர்கள் தொடர்ச்சியாக வழங்கும் ஆதரவு மற்றும் உதவி என்றும் பாராட்டப்பட வேண்டியதாகும்” என்றார்.
Comments (0)
Facebook Comments (0)