அலிகம்பையில் சுகாதார நிலையம் நிர்மாணிக்க ஜப்பான் நிதியுதவி

அலிகம்பையில் சுகாதார நிலையம் நிர்மாணிக்க ஜப்பான் நிதியுதவி

அம்பாறை மாவட்டத்தின் அலிகம்பை பிரதேசத்தில் 89,168 அமெரிக்க டொலர்கள் (சுமார் ரூ. 17.7 மில்லியன்) செலவில் சிறுவர் புனருத்தாரண நிலையமொன்றை நிறுவுவதற்கு ஆதரவளிக்க ஜப்பான் முன்வந்துள்ளது.

“அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை இனத்தவர்களுக்கான வெளி நோயாளர் மருந்தகம் நிறுவும் திட்டம்” என்பதன் கீழ் இந்த உதவியை வழங்க ஜப்பான் முன்வந்திருந்தது.

இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த மார்ச் 21ஆம் திகதி இடம்பெற்றது. இந்த உடன்படிக்கையில் ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் சிறுவர் புனருத்தாரண நிலையத்தின் தவிசாளர் சமில கோதாகொட ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

அம்பாறையில் அடிப்படை சுகாதார நிலையமொன்றை நிர்மாணித்து, அலிகாம்பை எனும் பின்தங்கிய கிராமத்தையும், அதனைச் சூழ்ந்த ஏனைய இனங்காணப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு சுகாதார சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

இந்த கிராமங்களில் தற்போது அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் காணப்படாத நிலையில், அருகாமையிலுள்ள அரச வைத்தியசாலைக்கு செல்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

இந்த புதிய நிலையம் முறையான சுகாதார பராமரிப்பு வசதிகளை அணுகுவதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் பங்களிப்பு வழங்கும் என்பதுடன், பிரதேசத்தின் சுகாதார மற்றும் தூய்மை மேம்படுத்துவதிலும் பங்களிப்பு வழங்கும்.

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் பூர்த்தி 2022 ஆம் ஆண்டில் கொண்டாடப்படுகின்றது. “Grant Assistance for Grassroots and Human Security Projects (GGP)” எனும் திட்டத்தினூடாக ஜப்பானிய அரசாங்கத்தினால், 1989 ஆம் ஆண்டு முதல் 53.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டில் 307 செயற்திட்டங்களுக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பாக சிறுவர் புனருத்தாரண நிலையத்தின் தவிசாளர் கோதாகொட கருத்துத் தெரிவிக்கையில்,

"சுகாதார நிலையமொன்றை நிறுவுவதற்கு நீங்கள் வழங்கிய இந்த ஆதரவுக்கு சிறுவர் புனருத்தாரண நிலையத்தின் சார்பாக உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தத் திட்டத்தில் உங்களின் ஆதரவும் உண்மையில் மிகவும் பெறுமதி வாய்ந்தது.

இந்த நன்கொடையினூடாக, அலிகாம்பை கிராமத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்படும் என்பதுடன், இவர்களின் குறைந்த சமூக நிலை காரணமாக, சமூகத்தின் பிரதான கட்டத்தினுள் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுமில்லை.

இந்த பெறுமதி வாய்ந்த நன்கொடையினூடாக, இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தினால் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமன்றி, அடிப்படை மனித உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதியும், பாரதூரமான நோய்களுக்கு எதிராக போராடுவதற்கு பரிபூரண இலவச பாதுகாப்பை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

இந்த மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதில் நாம் வெற்றிகரமாக அமைந்திருந்தால், ஜப்பானிய தூதரகம் மற்றும் சிறுவர் புனருத்தாரண நிலையம் ஆகியவற்றுக்கு சிறந்த சாதனையாக அமைந்திருக்கும்.

அலிகாம்பை கிராமத்தைச் சேர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆட்சியிலிருந்த சகல அரசாங்கங்களும் கவனம் செலுத்தியிராத நிலையில், உங்களின் பங்களிப்பு என்பது எமக்கு ஒரு வித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார நிலையத்திடமிருந்து இந்த அன்பளிப்பைப் பெற்றுக் கொள்வதில் அனுகூலம் பெறுவோர் உண்மையில் மகிழ்ச்சியடைவார்கள் என நான் கருதுகின்றேன். அவர்களுக்கு உங்களின் ஆதரவு பெரும் சொத்தாகும்” என்றார்.