பிக்குமார்களுக்கான காப்புறுதி திட்டம் ஒக்டோபரில் அறிமுகம்
இதுவரை செயற்படுத்தப்படாத 15,000 பிக்குமார்களை உள்ளடக்கும் வகையிலான 'புதுபுன் சுரக்ஷா சுகாதார காப்புறுதி' திட்டத்தினைஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் அலரி மாளிகையில் நடைபெற்ற புத்தசாசன நிதியத்தின் 84ஆவது நிர்வாக சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு நிதியத்தின் தலைவர் என்ற வகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
அதற்கமைய புதுபுன் சுரக்ஷா சுகாதார காப்புறுதி திட்டத்திற்கு ஆரம்பத்தில் புத்தசாசன நிதியத்திலிருந்து ரூபாய் 40 மில்லியன் நிதியை வழங்குவதற்கு பிரதமர் அறிவுறுத்தல் விடுத்தார்.
அதற்கு மேலதிகமாக இந்த நிதியத்திற்கு அரசாங்கத்தினால் ரூபாய் 50 மில்லியன் வழங்கப்படவுள்ளது. இந்த நிதியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது பிரதமரின் ஆலோசனைக்கமைய கீழ்காணும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1. இதுவரை 100 வயதிற்கு மேற்பட்ட பிக்குமார்கள் மாத்திரம் வழங்கப்பட்ட வைத்திய கொடுப்பனவு மற்றும் பராமரிப்பு முறைகளை 90 வயதாக குறைத்தல்.
2. மூன்று ஆண்டுகளுக்கு இளம் பிக்குமார்களுக்கு (சாமனேர ஹிமிவருன்) வழங்கப்படும் புலமைப்பரிசில் எண்ணிக்கையை 800 இலிருந்து 1,500 வரை அதிகரிப்பதற்கும் 750 ரூபாவாக காணப்பட்ட அந்த புலமைப்பரிசில் தொகையை 1,000 ரூபாவாக அதிகரித்தல்.
3. குறைந்த வசதிகளைக் கொண்ட விகாரைகளின் சுகாதார நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் நிதியை கலாநிதி திவியாகஹ யசஸ்தி தேரரின் விசேட கோரிக்கைக்கு அமைய ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தல்.
4. நாடு முழுவதும் காணப்படும் 20 இளம் பிக்குமார்களுக்கான அமைப்புகளை மேம்படுத்துதல்
5. சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும், சீன மொழி பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்கு கொவிட-19 தொற்று கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் நூறு பிக்குமார்களை ஈடுபடுத்துதல்
6. விகாரைகளை அண்மித்த பகுதிகளில் காணப்படும் ஓய்வு மண்டபங்களில் கட்டணங்கள் அறவிடப்படாமல், அங்கு தங்குபவர்களினால் வழங்கப்படும் தொகையை மாத்திரம் பெற்றுக் கொள்ளுதல்
7. பிக்குமார்களுக்கு மொழி கல்வியை (விசேடமாக தமிழ் மொழி) வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தல்
புத்தசாசன நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினரான கலாநிதி. திவியாகஹ யசஸ்தி தேரர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, புத்தசாசன நிதியத்தின் செயலாளர் டப்ளிவ்.டி.எச்..ருசிர விதான, புத்தசாசன நிதியத்தின் பொது அறங்காவலர் சட்டத்தரணி ஜீ.கரவிட்ட ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
Comments (0)
Facebook Comments (0)