RTI ஆணைக்குழுவின் தீர்ப்பிற்கு எதிராக கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியினால் மேன் முறையீடு

RTI ஆணைக்குழுவின் தீர்ப்பிற்கு எதிராக கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியினால் மேன் முறையீடு

றிப்தி அலி

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் (சுவுஐ) வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஒரு பகிரங்க பொது அதிகார சபை என்ற ஆணைக்குழுவின் தீர்மானத்தினையும் மூன்று கேள்விகளுக்கு தகவல் வழங்குமாறு ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை ரத்துச் செய்யுமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

சட்டத்தரணி துசாரி ஜயவர்த்தனவின் ஊடாக கடந்த டிசம்பர் 5ஆம் திகதி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மேன்முறையீட்டு பிரதிவாதியாக சம்மாந்துறையினைச் சேர்ந்த எம்.ஏ.ஹசனும், பிரதிவாதியாக தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிகள் பிரதிவாதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஜனவரி 28, 31 மற்றும் பெப்ரவரி 5 ஆகிய திகதிகளில் ஒரு தினத்தினத்தில் இந்த மனுவினை ஆதரிப்பதற்காக பட்டியலிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் சட்டத்தரணி துசாரி கோரியுள்ளார்.

சம்மாந்துறையினைச் சேர்ந்த எம்.ஏ ஹசனினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பான விசாரணைகளை அடுத்து 2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் '43 (ஓ)' பிரிவின் கீழ் கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஒரு பகிரங்க பொது அதிகாரசபை என தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இதனால், குறித்த முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரிக்கு மேன்முறையீட்டு பிரதிவாதியினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கையிலுள்ள ஒன்பது கேள்விகளில் மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும் ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.

இவற்றுக்கு எதிராகவே கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியினால் தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, மேன்முறையீட்டு பிரதிவாதியினால் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டினை தள்ளுபடி செய்வதற்கான உத்தரவினை பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.