ACJU இன் தலைவர் பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் 7 நாட்களுக்குள் அறிவிப்பேன்: றிஸ்வி முப்தி
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் (ACJU) தலைவர் பதவியினை பொறுப்பேற்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தினை ஏழு நாட்களுக்குள் அறிவிப்பேன் என அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தெரிவித்தார்.
"இப்பதவியானது தனக்கு பாரிய சுமையானதொன்றாகும். இந்த தெரிவு தொடர்பில் எனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் கலந்துரையாடிய பின்னரே, இப்பதவியினை பொறுப்பேற்பது தொடர்பிலான இறுதி முடிவினை அறிவிப்பேன்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜம்இய்யதுல் உலமாவின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த சனிக்கிழமை (18) கண்டியில் நடைபெற்றது. இந்த நிர்வாகத் தெரிவிற்கு முன்னர் மத்திய சபையிடம் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி பகிரங்க வேண்டுகோளொன்றினை முன்வைத்திருந்தார்.
அதாவது, புதிய நிர்வாகத்தில் தன்னை மீண்டும் தலைவராக தெரிவுசெய்ய வேண்டாம் என என்பதே அந்த வேண்டுகோளாகும். எனினும், குறித்த வேண்டுகோளினையும் மீறி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
இதன் பின்னர், மத்திய குழுவினர் மத்தியில் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி விசேட உரையொன்றினை நிகழ்த்தினார். இதன்போது, "அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் பதவியானது தனக்கு மிகவும் சுமையானதொன்றாகும்.
இன்றைய தெரிவு தொடர்பில் தொடர்பில் தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் கலந்துரையாடி ஏழு நாட்களுக்குள் முடிவினை அறிவிப்பேன். இப்பதவிக்கு பொருத்தமான பலர் புதிய நிறைவேற்றுக் குழுவில் உள்ளனர். அவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்" என அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)