வர்த்தகம் – கல்வி; சில அவதானங்களும் யோசனைகளும்
எனது அண்மைய கட்டுரை கொரோனா சூழலில் எமது வர்த்தகம் பற்றிய சில விடயங்களைத் தொட்டுச் சென்றது. வர்த்தகம் எமது சமூகத்தின் உயிர்நாடி. அதனது உயிர்ப்பிளைப்பு தொடர்பில் ஆராய பட்டறைகள் (workshops), கலந்துரையாடல்கள், வழிகாட்டல்கள் என நிறையவே நேரம் செலவழிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
கூடிய சிந்தனையாளர்கள், துறைசார் நிபுணர்கள் இது தொடர்பில் பங்களிப்புச் செய்ய வேண்டும். ஒன்றுகூடல்கள் சாத்தியமாகின்றபோது அவை பற்றி யோசிப்போம்.
இன்று, இக்கட்டுரையின் மூலம் வர்த்தகம் மற்றும் உயர்கல்வி தொடர்பில் அவதானிப்புகளோடு கூடிய சில சிந்தனைகளை தூண்டி விடலாம் என தோன்றுகிறது. மனத்தில் பட்டவைகளை “அவதானம்” எனவும் “யோசனை” எனவும் வகைப்படுத்தி இலக்கமிட்டிருக்கிறேன்.
மீண்டும் சொன்னால், இது ஒரு சிந்தனைத் தூண்டல் மாத்திரமே. தீர்வு பற்றி மிக ஆழமாக ஆராய வேண்டியிருக்கும். பல நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவன அதிகாரிகளோடு எனக்கிருக்கின்ற தொடர்பு, தொழில் முயற்சிகள் மற்றும் வர்த்தகம் மீதுள்ள ஆர்வம், நான் அவதானிக்கின்ற மாணவர்களின் மனோ பாவம், உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் தொழில் புரிவோர்களுடன் கொண்டுள்ள தொடர்புகள், கொரோனா காலத்து எனது வாசிப்புக்கள், தேடல்கள் என பல விடயங்கள் இந்த சிறிய ஆக்கத்திற்கு துணை நிற்கின்றன.
அவதானம் - 1
கொரொனோ உலகப் போக்கை தலை கீழாய் புரட்டிப் போட்டிருக்கிறது! இந்நிலைகள் சீரடைகின்றபோது எந்த நாட்டில் என்ன தொழில் வாய்ப்பு இருக்கப்போகிறது? எந்த நாடு எம்மை தொழில் நிலைகளிலிருந்து வெளியேற்றப் போகிறது? எந்த நாடு உள்வாங்கப் போகிறது? என்பதெல்லாம் இப்போதைக்கு நாம் தீர்மானிக்க முடியாத விடயங்கள்.
அவதானம் – 2
உயர் கல்வி தொடர்பான சாத்தியங்களைப் பொறுத்தவரை இதுவரை காலமும் இலங்கையிலுள்ள வாய்ப்புக்களுக்கு மேலதிகமாக, எமது மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்றுக்கொண்ட சூழல் இருந்தது. இந்நிலை மீண்டும் திரும்பி வருமா என்பது இப்போது கேள்விக் குறி.
ஏனெனில் ஒவ்வொரு நாடும் தமது நாட்டுப்பணம் இன்னொரு நாட்டுக்கு செல்வதை இலேசாக அனுமதிக்கின்ற நிலை பற்றி மிகவுமே அக்கறையோடு சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றன. கொரோன காரணமாக வெளிநாடுகளிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அவதானிக்கின்ற நம் நாட்டு அரசுகூட இதுபற்றி சற்று அதிகமாகவே யோசிக்கத் தொடங்கியிருக்கிறது.
அவதானம் – 3
எந்த நாட்டிலாயினும் நாம் பெற்றுக் கொண்ட கல்வித்தகைமை நம்மை ஒருவகையான அடிமைத்தனத்தை நோக்கி நகர்த்தியிருக்கிது. உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ “நல்ல சம்பளத்தில் வேலை” என்கிற மனோநிலை “கல்வித்தகைமையோடு சொந்தக் காலில் நிற்றல்” என்கிற நிலையிலிருந்து மாற்றியுள்ளது.
வேலை தருகின்ற நிறுவனங்கள் தடுமாறுகின்ற நிலை வருகின்றபோது நாமும் வாழ்வை இழக்கின்ற நிலை உருவாகியுள்ளது. சிறந்த கல்வித்தகைமைகள் மற்றும் தொழில் தகைமைகள் கொண்ட பலர் இவ்வாறு தவிப்பதை அவதானிக்க முடிகிறது.
அவதானம் - 4
கொரோன சூழல் இலங்கை முஸ்லிம்களுக்கு அரச நிர்வாகம்சார் பாதகமான நிலைகளை தோற்றுவிப்பதுபோன்ற தோற்றப்பாடுகள் காணப்படுகின்றன. அரச உயர் பதவிகளில் முஸ்லிம்கள் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நிலைகளில் இருந்திருப்பின் சிறிதளவேனும் இந் நிலைமைகளை சீர்படுத்தியிருக்க முடியும்.
ஆக, நம் சமூகத்தைப் பொறுத்தவரை அரசியல் மற்றும் மார்க்கம்சார்ந்து வெவ்வேறு தளங்களில் இருந்து தர்க்கம் புரிவதை விடுத்து, தூர சிந்தனையோடு சில விடயங்களை விஞ்ஞான ரீதியாக திட்டமிட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
யோசனை – 1
எதிர்கால உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் முயற்சிகள், சந்தர்ப்பங்கள் பற்றிய ஆய்வுகள், வழிகாட்டல்கள், யோசனைகளை முன்வைக்கக்கூடிய கட்டமைப்புக்கள், முன்னெடுப்புக்களை சமூக நிறுவனங்கள் செய்தல் வேண்டும்.
யோசனை – 2
தாய் நாட்டிற்கும் சமூகத்திற்கும் குடும்பங்களுக்கும் உச்ச பயன்களைப் பெற்றுத்தரக்கூடிய படித்தவர்களையும் தொழில்சார் வல்லுனர்களையும் திட்டமிட்ட ரீதியில் உருவாக்கக்கூடிய முன்னெடுப்புக்களை சமூக ரீதியாக நாம் ஒழுங்கமைத்தல் வேண்டும்.
யோசனை – 3
சொந்தமாக தொழில் செய்வோருக்கு Multiple Stream of Income என்று அழைக்கப்படுகின்ற, பல வழிகளில் வருமானம் ஈட்டித்தருகின்ற தொழில் முனைவுகள் பற்றி அறிமுகம்செய்து, ஆராய்ச்சிகள் செய்து அவர்களை மேலும் சக்தி பெறச்செய்தல் வேண்டும்.
யோசனை – 4
படித்துவிட்டு எங்காவது வேலை செய்துதான் சம்பாதிக்க வேண்டும் என்ற மனோநிலையிலிருந்து விடுபடச்செய்து சொந்தக் காலில் நிற்கக்கூடிய தகைமைகளையும் நிலைமைகளையும் உருவாக்க பாடுபடல் வேண்டும்.
யோசனை – 5
பொருளாதாரத்தில் மறைத் தாக்கம் செலுத்திகின்ற சமூக கலாசார காரணிகளை கண்டறிந்து அவற்றிலிருந்து விடுபடக் கூடிய திட்டங்களை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
இவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியிருக்கிறது. இது சார்பில் சமூகத்தில் பாடுபடக் கூடியவர்கள் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். முன்னெடுப்புக்கள் எதையாவது நாம் செய்யலாமா என்று யோசிப்போம்!
எம்.ஏ.சீ.எம். ஜவாஹிர்
பணிப்பாளர்
சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனம்
Whatssapp – 0777 563496.
Comments (0)
Facebook Comments (0)