பெறுபேறுகளுக்குப் பின்னரான உயர் கல்விக்கான தீர்மானங்கள்
ஹம்தா லதீப்
யாழ். பல்கலைக்கழகம்
பாடசாலைக் கல்வியில் தீர்மானமிக்கவொரு பகுதியாக க.பொ.த சாதாரண தர பரீட்சையினையும் அதன் பெறுபேறுகளையும் அடிப்படையாகக் கொண்டு க.பொ.த உயர் தரத்திற்கான பாடத் தெரிவிற்கான காலப்பகுதியைக் குறிப்பிடலாம்.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றில் கல்வியறிவு என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும். அதன் அடிப்படையில் தொழில் முறைக் கல்வி நிலை அறிமுகப்படுத்தப்பட்டாலும் பாடங்களையும் கல்வி நிலையங்களையும் அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய கல்வி முறைமையும் பிரதான இடத்தை வகிக்கின்றன.
க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் பின்னரே ஒருவர் தனது இலக்கினை அடைவதற்கான கற்றல் துறையில் கால் தடம் பதிக்கின்றார். அதாவது, வைத்தியராவதை நோக்காகக் கொண்டவர் விஞ்ஞானத் துறையிலும், பொறியியல் துறையில் கற்று பொறியியலாளராகவோ, வணிகத் துறையில் கற்று கணக்காளராகவோ அல்லது கலைத் துறையில் கற்று ஆசிரியராகவோ அல்லது வழக்கறிஞராகவோ தமது தொழிற் துறையில் பிரவேசிப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.
அந்த வகையில், ஏனைய துறைகளைப் போல் அல்லாது கலைத் துறையைத் தெரிவு செய்பவர்களுக்கே அதிகமான தெளிவூட்டல்களும் வழிகாட்டல்களும் அவசியமாகும். ஏனெனில், கலைத் துறையிலே அதிகமான பாடங்கள் காணப்படுவதனாலும் அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று பாடங்களைத் தேர்ந்தெடுத்து அடுத்து வரும் இரண்டு வருடங்களில் முழுமையான கல்வியியற் கல்லூரிகளுக்கான அனுமதி போன்றவற்றை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.
அந்த வகையில் முதலாம் பாடத் தொகுதியில் சமூக விஞ்ஞான பாடங்களான பொருளியல், புவியியல், வரலாறு, மனைப் பொருளியல் விவசாய விஞ்ஞானம், தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பவியல், அரசியல் விஞ்ஞானம் மற்றும் அளவையியலும் விஞ்ஞான முறையும் போன்ற பாடங்களைக் குறிப்பிடலாம்.
இரண்டாம் தொகுதியில் எமது நாட்டின் பிரதான நான்கு சமயங்களும் அவை சார்ந்த நாகரீகங்களும் உள்ளடங்கும். எடுத்துக்காட்டாக இந்து சமயம் ஒரு பாடமாகவும் இந்து நாகரீகம் மற்றுமொரு பாடமாகவும் கொள்ளப்படுகிறது. தொகுதி மூன்றில் அழகியல் கற்கைகளான வரைதல், நடனம், சங்கீதம் மற்றும் நாடகமும் அரங்கியலும் போன்ற பாடங்கள் உள்ளடங்கியுள்ளன.
அதேபோல நான்காம் தொகுதியில் மொழிகளை தேர்ந்தெடுத்து கற்கலாம். இந்த நான்காம் மொழித் தொகுதி கலை பாடங்களை தேசிய மொழிகள், சாஸ்திரிய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகள் என்று மூன்று வகைப்படுத்தப்படுகிறது.
தேசிய மொழிகளாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்றவையும் சாஸ்திரிய மொழிகளாக அரபு, பாளி, சமஸ்கிருதம் போன்றவையும் வெளிநாட்டு மொழிகளாக சீனம், பாளி, பிரெஞ்சு, ஜேர்மன், ஹிந்தி ஜப்பான், மலாய் மற்றும் ரஷ்யன் என்றவாறாக அமைந்துள்ளன. இருந்த போதிலும் அனைத்துப் பாடசாலைகளிலும் இப்பாடங்களைக் கற்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
மேற்படி பாடத் தெரிவின் போது சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலாம் தொகுதிக்குரிய சமுக விஞ்ஞான பாடங்களிலிருந்து குறைந்த பட்சம் ஒரு பாடத்தையேனும் அவசியம் தெரிவு செய்ய வேண்டும்.
அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களையும் இத்தொகுதியில் தெரிவு செய்யலாம். இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களை தெரிவு செய்யும் மாணவனுக்கு பல்கலைக்கழக வாய்ப்புகள் அதிகரிக்கும். சமயங்களும் நாகரீகங்களும் தொகுதியிலிருந்து குறித்தவொரு சமயத்தை அல்லது சமய நாகரீகத்தில் ஒன்றை மட்டுமே தெரிவுசெய்யலாம்.
எடுத்துக்காட்டாக இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம் இரு பாடங்களையும் ஒரே முறையில் தெரிவு செய்ய முடியாது. அதே போன்று அழகியல் பாடத் தொகுதியிலிருந்து அதிக பட்சம் இரு பாடங்கள் மாத்திரமே தெரிவு செய்யலாம். மொழிகளுக்குரிய தொகுதிகளிலிருந து மாணவர் ஒருவர் மூன்று தேசிய மொழிகளை தெரிவு செய்யலாம்.
அவ்வாறு அவர் தெரிவு செய்யும் பட்சத்தில் மூன்று தேசிய மொழிகளையும் சமூக விஞ்ஞான பாட மொன்றையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. மொழிப் பாடங்கள் இரண்டைத் தெரிவு செய்யும் மாணவர் சமயத் தொகுதியிலிருந்தோ அழகியல் தொகுதியிலிருந்தோ சமூக விஞ்ஞான தொகுதியிலிருந்தோ ஒரு பாடத்தை தெரிவு செய்து கொள்ளலாம்.
பாடத்தெரிவின் போது அப்பாடங்களுக்கான பல்கலைக்கழக வாய்ப்புகளும் கட்டாயம் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் 2019/2020 கல்வியாண்டில் சுமார் 46,640 மாணவர்கள் தெரிவாகியிருந்தனர்.
அதில் 7,294 மாணவர்கள் கலை பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கலை பீடத்திற்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் போது அகில இலங்கை ரீதியில் ணு புள்ளிகள் நோக்கப்படுகின்றது.
எனவே உயர் தரத்திற்கு கல்வி பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் போது Z புள்ளிகள் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பாடங்களுக்கான Zபுள்ளிகள் அப்பாடத்தின் கடினத்தன்மை, மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் இடைநிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன.
குறிப்பாக சமூக விஞ்ஞான பாடங்களின் மூலம் Z புள்ளிகளிலும் அதிகரிப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எவ்வாறாயினும் மாணவர்கள் தெரிவு செய்யும் சில பாடங்களில் சித்தியடை வதனால் கலைபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும்.
குறிப்பாக சட்ட பீடம், நிலத்தோற்ற கட்டடக்கலை, தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், கட்டடக்கலை போன்றவற்றைக் குறிப்பிடலாம். அதேபோன்று நவநாகரீக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும், முகாமைத்துவமும் தகவல் தொழிநுட்ப வடிவமைப்பு, தொழில் முயற்சியும் முகாமைத்துவமும், கைத்தொழில் தகவல் தொழிநுட்பம், விருந்தோம்பல் சுற்றுலா மற்றும் நிகழ்ச்சி முகாமைத்துவம், விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கை போன்ற சிலவற்றை மேற்கோள் காட்டலாம்.
அதேபோன்று பல்கலைக்கழக வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் மாணவர்கள் கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வியியற் கல்லூரிகளின் பிரதான பணி பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை உருவாக்குவதாகும்.
இங்கு ஆரம்பக்கல்வி, கணிதம், விஞ்ஞானம், உடற்கல்வி, சமயங்கள், அழகியற் பாடங்கள், முதலாம் மொழி, இரண்டாம் மொழி மற்றும் சமூகக்கல்வி போன்ற பாடங்கள் போதிக்கப்படுகின்றன.
இவ்வாறாக கலை பிரிவில் கற்கவிருக்கும் மாணவர்கள் Z புள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்குவதோடு, உயர் கல்வியைத் தொடர்வதற்கு அல்லது கல்வியியற் கல்லூரிகளில் அனுமதி பெறுவதை நோக்காகக் கொண்டு எதிர்கால தொழில் வாய்ப்புகளைப் பெறுதலை கவனத்திற் கொள்ள வேண்டும்.
மேலும் கலைத் துறையைத் தெரிவு செய்யும் போது தனது பெறுபேறுகளுக்கும் பெற்றோர், ஆசிரியர் குழாம், சமூகத்தரப்பினர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்காது தன்னால் எந்தப் பாடத்தை இலகுவாக கற்க முடியும், எதில் அதிகமான புலமை உள்ளது என்பதையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக கலைத்துறையை மேற்கொள்ள இருப்போர் தமது அழகியல் எழுத்து, வாசிப்பு மற்றும் சமுகவியல் சார்ந்த விடயங்களில் அதிக ஆர்வத்துடன் செயற்பட வேண்டும்.
பொதுவாகவே சில மாணவர்கள் முறையற்ற பாடத் தெரிவினால் பெரும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அதாவது எமது தனிப்பட்ட ஆளுமைகளிலிருந்து வேறுபட்ட பாடமொன்றை தனது நண்பர்கள் குழாம் தெரிவு செய்தால் நண்பர்களுடன் சேர்ந்து தானும் அப்பாடங்களை தொடர்வதனால் குறிப்பிட்ட அடைவினைப் பெற முடியாது.
தனது குடும்பச் சூழ்நிலை, சமுகத்தின் பார்வை போன்றவற்றினால் சில தொழில்நுட்பப் பாடங்களிலிருந்து மாணவர்கள் விலகியே செயற்படுவதைக் காணலாம். இதனால் எதிர்காலத் தொழில் உலகிற்கான பிரவேசத்தில் பின்தங்கிய நிலையே ஏற்படக்கூடும்.
அதேபோன்று சில பாடசாலைகளில் குறிப்பிட்ட சில பாடங்கள் மாத்திரமே கற்பிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் அந்தப் பாடங்களை மாத்திரம் கற்க வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படுகின்றனர்.
மேலும் பல்கலைக்கழக வாய்ப்புகளை இழப்பதற்கான நிலைக்கும் ஆட்படுகின்றனர். தமது உயர் நிலைக் கல்வியிலும் சில சிக்கலான நிலைகளை எதிர்நோக்குவற்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
ஆகவே இவ்வாறான இக்கட்டான நிலைகளைத் தீர்ப்பது அவசியமானவொன்றாகும். அதே போன்று உயர் தரத்திற்கான பாடத் தெரிவினை மேற்கொள்ளும் போது தொழில் வாய்ப்புகள் மற்றும் தமது இலக்கினை அடைதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் வழிகாட்டிகள், அனுபவம் வாய்ந்தவர்களோடு தொடர்பு கொள்வதோடு மேலதிகமாக தகவல்கள் மற்றும் தரவுகளை அரசினால் வெளியிடப் படும் கல்விசார் அறிக்கைகள், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் கைநூல்கள் போன்றவற்றை ஆராய்ந்து தமது அடுத்த கட்ட வெற்றிக்கான நகர்வில் களமிறங்க வேண்டும்.
Comments (0)
Facebook Comments (0)